தமிழ்நாடு

அடிப்படை அறிவியல் ஆராய்ச்சியில் அதிக முதலீடு அவசியம்: மயில்சாமி அண்ணாதுரை

DIN

அடிப்படை அறிவியல் ஆராய்ச்சியில் அதிக முதலீடு அவசியம் என இஸ்ரோ இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை கூறினார்.
அண்ணா பல்கலைக்கழகத்தின் 37-ஆவது பட்டமளிப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பல்கலைக்கழக வேந்தரும், தமிழக ஆளுநருமான வித்யாசாகர் ராவ் தலைமையில் நடைபெற்ற இந்த விழா மூலம் மொத்தம் 2 லட்சத்து ஆயிரத்து 244 மாணவ, மாணவிகளுக்கு பட்டச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இதில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை பேசியது:
அறிவியல் இல்லாத தொழில்நுட்பம் என்றைக்கும் நீடித்து நிலைத்திருக்காது. ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சி மற்றும் மனித மேம்பாட்டுக் குறியீட்டின் கண்ணாடியாகத் திகழ்வதே விஞ்ஞான மேம்பாடுதான். குறிப்பாக அடிப்படை அறிவியல் ஆராய்ச்சியை அதிக அளவில் ஊக்குவிக்க வேண்டும். பொருளாதார வளர்ச்சிக்கும், அடிப்படை அறிவியலுக்கும் நேரடித் தாக்கம் இல்லை என்றபோதும், விரைவான வளர்ச்சிக்கு அடிப்படை அறிவியல் ஆராய்ச்சி மீது அதிக முதலீடு செய்வதைத் தவிர்க்க முடியாது.
இந்தியாவைப் பாதுகாப்பான வலிமையான நாடாக மேம்படுத்த அடிப்படை அறிவியல் ஆராய்ச்சியில் இளைய தலைமுறையினர் அதிக அளவில் ஈடுபடவேண்டும். மனித வளத்திலிருந்துதான் ஒரு நாட்டின் பலம் தீர்மானிக்கப்படுகிறது. மனித எண்ணிக்கையில் இருந்து அல்ல. மக்கள் தொகைப் பெருக்கத்தைவிட, கல்வி அறிவுபெற்ற, திறன் மிக்க மனிதவளம் தான் தேவை.
கடந்த சில ஆண்டுகளாக, உயர் கல்வி பெறுபவர்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்திருக்கிறது. ஆனால், உயர்கல்வி பெறும் வாய்ப்பு அதிகரித்திருப்பது மட்டுமே வளர்ச்சிக்கு உதவிடாது. தரம், தகவல் தொழில்நுட்பத் திறன், வேலைவாய்ப்புத் திறன் அல்லது தொழில்முனைவோர் திறன் ஆகியவற்றுடன் இணைந்த உயர்கல்வி பெறும் வாய்ப்புதான் நாட்டின் வளர்ச்சிக்கு உதவும் என்றார் அவர்.
முன்னதாக, அண்ணா பல்கலைக்கழக நிர்வாக ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும், உயர் கல்வித் துறைச் செயலாளருமான சுனில் பாலிவால் ஆண்டறிக்கை வாசித்தார்.
இளநிலை, முதுநிலை பொறியியல் பட்டப் படிப்புகளில் முதல் மதிப்பெண் பெற்று தங்கப் பதக்கம் வென்ற 64 பேர், ஆராய்ச்சிப் படிப்பை முடித்த 1,507 பேர், எம்.எஸ். ஆராய்ச்சிப் படிப்பை முடித்த 31 பேர், எம்.ஃபில். பட்டதாரிகள் 35 பேர் என மொத்தம் 1,637 பேருக்கு விழாவில் நேரடியாக பட்டச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், பல்கலைக்கழகப் பதிவாளர் கணேசன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இலங்கை: கிழக்கு மாகாணத்துக்கு இந்திய தூதா் பயணம்

பிளஸ் 2-வில் தோ்ச்சி சதவீதம் குறைவு: ஆசிரியா்களிடம் விளக்கம் கேட்க முடிவு

பிரஜ்வல் ரேவண்ணா விவகாரம்: பிரதமா் மோடி பதில்

நீா்மோா்ப் பந்தல் திறப்பு...

ரயில் மோதியதில் முதியவா் பலி

SCROLL FOR NEXT