முகப்பு
தமிழ்நாடு

இறைச்சிக்காக மாடுகள் விற்பனை விவகாரம்: மத்திய அரசு உத்தரவுக்கு இடைக்கால தடை

இறைச்சிக்காக மாடுகள் உள்ளிட்ட கால்நடைகளை விற்பனை செய்ய மத்திய அரசு விதித்த தடையை அமல்படுத்த இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை

Updated On : 29 ஜனவரி, 2024 at 2:38 PM
பகிர்:

இறைச்சிக்காக மாடுகள் உள்ளிட்ட கால்நடைகளை விற்பனை செய்ய மத்திய அரசு விதித்த தடையை அமல்படுத்த இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
கால்நடைச் சந்தைகளில் மாடுகள் உள்ளிட்ட கால்நடைகளை இறைச்சிக்காக விற்கவும், வாங்கவும் தடை விதித்து மே 23-ம் தேதி மத்திய அரசு உத்தரவு பிறப்பித்தது. இதற்கு நாடு முழுவதும் அரசியல் கட்சிகள், பல்வேறு தரப்பினர் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், கால்நடைகளை இறைச்சிக்காக சந்தைகளில் விற்க மத்திய அரசு விதித்துள்ள தடையை நீக்கக்கோரி, மதுரையைச் சேர்ந்த எஸ். செல்வகோமதி மற்றும் மதுரை களிமங்கலத்தைச் சேர்ந்த பி. ஆஷிக் இலாஹி பாவா ஆகியோர் இரு வேறு மனுக்களைத் தாக்கல் செய்திருந்தனர்.
அதில், இறைச்சிக்காக மாடுகளை சந்தைகளில் விற்பனை செய்ய மத்திய அரசு விதித்துள்ள தடை 1960ஆம் ஆண்டு இயற்றப்பட்ட பிராணிகள் வதைத் தடுப்பு சட்டத்துக்கு எதிரானது. மத வழிபாட்டிற்காக பிராணிகளை கொல்ல அனுமதி வழங்கும் சட்டப்பிரிவு, மத சுதந்திரம் உள்ளிட்டவற்றுக்கு எதிரானது. இந்தியாவில் பெரும்பாலான மக்கள் உணவுக்காக பிராணிகளை உண்ணும் பழக்கத்தை கொண்டுள்ளனர். மேலும், மாடுகளை இறைச்சிக்காக வளர்ப்பது, விற்கும் தொழிலில் ஏராளமானோர் ஈடுபட்டு உள்ளனர். இந்தத் தடையால் அவர்களது தொழிலும் பாதிக்கப்படும். தான் உண்ணும் உணவைத் தேர்ந்தெடுப்பது தனிப்பட்டவர்களின் உரிமையாகும்.
எனவே இந்தத் தடையை சட்டவிரோதமானது என்றும், அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என்று அறிவித்து உத்தரவிட வேண்டும். அதுவரை சந்தைகளில் இறைச்சிக்காக மாடுகளை விற்க விதிக்கப்பட்டிருக்கும் தடையை அமல்படுத்த இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தனர். அதன்படி, இந்த மனுக்கள் நீதிபதிகள் எம்.வி. முரளிதரன், சி.வி.கார்த்திகேயன் அடங்கிய அமர்வு முன்பு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் தரப்பு வழக்குரைஞர் வாதிடுகையில், இந்தச் சட்டத்திருத்தம் பிராணிகள் வதை தடுப்புச் சட்டத்திற்கு எதிராக உள்ளது. கால்நடை சந்தைகளை ஒழுங்குப்படுத்துவது உள்ளாட்சி மற்றும் மாநில அரசின் அதிகாரத்திற்கு உட்பட்டது. அதில் தலையிட மத்திய அரசுக்கு அதிகாரம் இல்லை. எனவே மத்திய அரசின் இந்தச் சட்டத்திருத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்றார்.
அப்போது குறுக்கிட்ட மத்திய அரசு வழக்குரைஞர் ஜி.ஆர்.சுவாமிநாதன், இந்த வழக்கு தொடர்பாக விளக்கம் அளிக்க போதிய கால அவகாசம் வேண்டும். அதுவரை மத்திய அரசின் அறிவிப்புக்கு இடைக்கால தடை விதிக்கக்கூடாது என்றார். மேலும், கால்நடைகளை வதை செய்ய தடை விதிக்கப்படவில்லை. கால்நடை விற்பனையை முறைப்படுத்துவதற்காகத் தான் இறைச்சிக்காக கால்நடைகளை சந்தைகளில் விற்க தடை விதிக்கப்பட்டுள்ளது என்றார்.
இருதரப்பு வாதங்களையும் பதிவு செய்த நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
இறைச்சிக்காக கால்நடைகளை சந்தைகளில் விற்க தடை விதித்தது தொடர்பாக மாநில அரசை கலந்தாலோசிக்காமல் உத்தரவிடப்பட்டுள்ளது. இது நிர்வாக நடைமுறை தொடர்பான பிரச்னை. மனுதாரர்கள் குறிப்பிட்டுள்ள கருத்துக்கள், குற்றச்சாட்டுகளில் முகாந்திரம் இருப்பதாக இந்த நீதிமன்றம் கருதுகிறது.
இந்த விவகாரத்தில் மத்திய அரசுத் தரப்பில் முன்வைக்கப்பட்ட வாதங்கள் போதுமானதாக இல்லை. எனவே இறைச்சிக்காக சந்தைகளில் கால்நடைகளை விற்க விதிக்கப்பட்டுள்ள தடைக்கு இடைக்கால தடை விதிக்கப்படுகிறது.
இதுதொடர்பாக மத்திய உள்துறைச் செயலர், மத்திய சுற்றுச்சூழல் துறைச் செயலர், தமிழக அரசின் உள்துறைச் செயலர் ஆகியோர் நான்கு வாரத்துக்குள் பதில் அளிக்க உத்தரவிட்டனர்.

முழு கட்டுரையைப் படிக்க →