கொசு ஒழிப்புப் பணியை மக்கள் இயக்கமாக நடத்த வேண்டும்: மருத்துவக் கல்வி இயக்குநர் பேட்டி
தமிழகத்தில் கொசு ஒழிப்புப் பணியை மக்கள் இயக்கமாக மாற்றினால் மட்டுமே டெங்குவை ஒழிக்க முடியும் என்று மருத்துவக் கல்வி இயக்குநர் எட்வின் ஜோ வியாழக்கிழமை தெரிவித்தார்.
தமிழ்நாடுகொசு ஒழிப்புப் பணியை மக்கள் இயக்கமாக நடத்த வேண்டும்: மருத்துவக் கல்வி இயக்குநர் பேட்டி
தமிழகத்தில் கொசு ஒழிப்புப் பணியை மக்கள் இயக்கமாக மாற்றினால் மட்டுமே டெங்குவை ஒழிக்க முடியும் என்று மருத்துவக் கல்வி இயக்குநர் எட்வின் ஜோ வியாழக்கிழமை தெரிவித்தார்.
தமிழகத்தில் கொசு ஒழிப்புப் பணியை மக்கள் இயக்கமாக மாற்றினால் மட்டுமே டெங்குவை ஒழிக்க முடியும் என்று மருத்துவக் கல்வி இயக்குநர் எட்வின் ஜோ வியாழக்கிழமை தெரிவித்தார்.
மதுரை அரசு மருத்துவமனையில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள டெங்கு காய்ச்சலுக்கான விரிவடைந்த வார்டில் ஆய்வு மேற்கொண்ட அவர் நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் தொடர்பாக மருத்துவர்களுக்கு ஆலோசனை வழங்கினார். மேலும் நோயாளிகளிடம் சிகிச்சை தொடர்பாக கேட்டறிந்தார். பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியது:
தமிழகத்தில் டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சல் பாதிப்பு அதிகமாக உள்ளது. கடந்த 10, 15 ஆண்டுகளுக்கு முன்பும் டெங்குக் காய்ச்சல் இருந்தது. அப்போது உயிரிழப்புகள் இல்லை. தற்போது நமது வாழ்வியல் மற்றும் உணவு முறைகளில் ஏற்பட்ட மாற்றமே டெங்கு பரவலின் தீவிரத்தை அதிகரித்துள்ளது.
காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டால் கஞ்சியை உட்கொண்டு ஓய்வெடுத்தால் காய்ச்சல் குணமாகி விடும். தற்போது கஞ்சியை உட்கொள்வது அரிதாக உள்ளது. கஞ்சி உடலில் உள்ள நீர்ச்சத்தை ஈடுகட்டும் வல்லமை கொண்டது. டெங்குக்காய்ச்சல் தொடர்பாகவும் சிகிச்சை முறை குறித்தும் சமூக வலைதளங்களில் வெவ்வேறு விதமான கருத்துகள் பரவி வருகின்றன. அதில் உள்ள சிகிச்சை முறைகளை ஆராயாமல் பின்பற்ற முடியாது.
டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்த தட்டணுக்கள் ஏற்றினால் போதும் என்பது போன்ற மனநிலை மக்களிடம் உள்ளது. இது மிகத் தவறானது. தட்டணுக்கள் தேவையில்லாதவர்களுக்கு அதை ஏற்றும் போது எதிர்விளைவுகள் உண்டாகும். டெங்கு பாதிப்பு உள்ள அனைவருக்கும் தட்டணுக்கள் ஏற்றத் தேவையில்லை. தனியார் மருத்துவமனைகள் வணிக நோக்கத்துடன் செயல்படுவதால் அங்கு டெங்குவுக்கு அளிக்கப்படும் சிகிச்சையில் வேறுபாடு உள்ளது. அரசு மருத்துவமனைகள் சேவை நோக்கத்துடன் மட்டுமே செயல்படுகின்றன. எனவே நோயாளிகளின் பாதிப்புக்கு ஏற்றவாறே சிகிச்சை அளிக்கப்படும்.
காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் முழு ஓய்வு எடுப்பதோடு, உடலில் நீர்ச்சத்துப் பற்றாக்குறையை ஈடு செய்ய வேண்டும். நீர்ச்சத்துப் பற்றாக்குறையை ஈடுசெய்வற்காக வீட்டிலேயே குளுகோஸ் ஏற்றுவது போன்ற தவறுகளைச் செய்யக்கூடாது.
தற்போது பருவமழை தொடங்கியிருப்பதால் டெங்கு காய்ச்சல் கூடுதலாகும் அபாயம் உள்ளது. எனவே சுகாதாரப் பணிகளை முழுவீச்சில் மேற்கொள்ளும்படி சுகாதாரத் துறையினரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளோம். கொசு ஒழிப்புப் பணிகளை மக்களும் மேற்கொள்ள வேண்டும். டெங்கு பாதித்தவரின் வீட்டைச் சுற்றி 500 மீட்டர் தூரத்துக்கு சுத்தப்படுத்தினால், சிறிய பிளாஸ்டிகள் பைகளில் கூட நீர்தேங்காதவாறு பார்த்துக்கொண்டால் டெங்குவைக் கட்டுப்படுத்த முடியும். கொசு ஒழிப்பை மக்கள் இயக்கமாக மாற்றினால் மட்டுமே டெங்குவை ஒழிக்க முடியும் என்றார்.
மருத்துவமனை டீன் மருதுபாண்டியன் கூறுகையில், அரசு மருத்துவமனையில் தற்போது 602 பேர் காய்ச்சலுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில் 95 பேருக்கு டெங்கு பாதிப்பு உள்ளது. அவர்களுக்கு தீவிரச்சிகிச்சை அளிக்கப்படுகிறது என்றார்.
மருத்துவமனைக் கண்காணிப்பாளர் ஷீலாராணி மல்லிகா, இதய அறுவைச் சிகிச்சைத் துறைத் தலைவர் ரத்தினவேல், பொது மருத்துவத் துறைத் தலைவர் பிரேம்குமார் உள்பட மருத்துவர்கள் உடனிருந்தனர்.