முகப்பு
தமிழ்நாடு

தொழில் தொடங்க இணையம் மூலமே அனுமதி: புதிய திட்டம் தொடக்கம்

தமிழகத்தில் தொழில் தொடங்குவதற்கான அனுமதிக்கு ஒவ்வொரு அரசுத் துறை அலுவலகமாக செல்லாமல், இணையதளம் வழியாகவே பெறுவதற்கான புதிய திட்டத்தை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி

Updated On : 29 ஜனவரி, 2024 at 6:01 PM
பகிர்:

தமிழகத்தில் தொழில் தொடங்குவதற்கான அனுமதிக்கு ஒவ்வொரு அரசுத் துறை அலுவலகமாக செல்லாமல், இணையதளம் வழியாகவே பெறுவதற்கான புதிய திட்டத்தை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி வியாழக்கிழமை தொடங்கி வைத்தார். தலைமைச் செயலகத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு:
தமிழகத்தில் தொழில் தொடங்குவதற்கான அனுமதிகள் வழங்கப்படுவதை எளிமையாக்குவதற்கு ஓர் ஒருங்கிணைந்த இணையதள வழியை (www.easybusiness.tn.gov.in)   தொழில் துறை உருவாக்கியுள்ளது. 
இந்த முறையின் மூலமாக, நகர மற்றும் ஊரமைப்புத் துறை, தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி, தொழிலாளர் மற்றும் தொழிலகப் பாதுகாப்பு, சுகாதார இயக்ககம் போன்ற 11 அரசுத் துறைகளின் மூலம் தொழில் நிறுவனங்களுக்குத் தேவையான பல்வேறு அனுமதிகளை வழங்குதல், அனுமதிகளை புதுப்பித்தல் ஆகிய சேவைகளை பெற இயலும்.
இந்த வசதியின் மூலம், தொழில் தொடங்குவதற்கான அனுமதி பெற ஒவ்வொரு அலுவலகங்களாக செல்லாமல், பல்வேறு அரசுத் துறைகளின் 37 சேவைகளை முதலீட்டாளர்கள் இணையம் மூலம் பெறுவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.
முதலீட்டாளர்கள் இந்தப் புதிய வசதியின் மூலம், விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கவும், நிர்ணயிக்கப்பட்ட கட்டணங்களைச் செலுத்தவும் முடியும். குறுஞ்செய்திகள் மற்றும் மின்னஞ்சல் அறிவிக்கை மூலம் விண்ணப்பங்களின் நிலையை தெரிந்து கொள்ளலாம். இறுதி ஒப்புதல்களை மனுதாரர் பதிவிறக்கம் செய்து கொள்ளவும் இயலும். இந்த நிகழ்ச்சியில், தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத், ஊரகத் தொழில் துறை அமைச்சர் பென்ஜமின், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →