முகப்பு
தமிழ்நாடு

மழையால் நமது இயல்பு வாழ்க்கை முடங்கினால்.. இவர்களது போராட்ட வாழ்க்கை என்னவாகும்?

பட்டினப்பாக்கத்தில் வசிக்கும் மாற்றுத் திறனாளிகளான 4 சகோதர, சகோதரிகளின் நிலைமை நெஞ்சை உருக்குவதாக உள்ளது.

Updated On : 2 நவம்பர், 2017 at 4:00 PM
பகிர்:


சென்னை: பட்டினப்பாக்கத்தில் வசிக்கும் மாற்றுத் திறனாளிகளான 4 சகோதர, சகோதரிகளின் நிலைமை நெஞ்சை உருக்குவதாக உள்ளது.

சாதாரணமாகவே ஒவ்வொரு நாளும் போராட்டத்துடன் கழிக்கும் இந்த சகோதர, சகோதரிகளின் நிலையை, மழை இன்னும் மோசமாக்கிவிடுகிறது.

மழையின் போது வீட்டுக்குள்ளும் சரி, வெளியிலும் பார்த்து பார்த்துத்தான் நடக்க வேண்டும் என்ற நிலையில், மாற்றுத் திறனாளிகளான இவர்களது நிலையை எண்ணிப் பாருங்கள்.

Advertisement

அவர்கள் வசிக்கும் வீடானது 3 அறைகளைக் கொண்டிருக்கிறது. 3 அறைகளுக்கும் ஒரு கனமான கயிறு கட்டப்பட்டு இணைக்கப்பட்டுள்ளது. இது ஏன் என்று பார்த்தால், அந்த வீட்டில் இருக்கும் 3 பேரும் கால் வழுக்கிக் கீழே விழாமல், இந்த கயிறை பிடித்துக் கொண்டே நடக்க வேண்டும் என்பதற்காகக் கட்டப்பட்டுள்ளது.

ஒரு வேளை பகல் நேரத்தில் பலத்த மழை பெய்து வீட்டுக்குள் தண்ணீர் வந்துவிட்டால், நிச்சயம் இவர்கள் பாதிக்கப்படுவார்கள். வேலைக்கு சென்றிருக்கும் இவர்களது சகோதரி சுகுணா வீட்டுக்கு வந்தால்தான் இவர்களுக்கு உதவ முடியும். சுகுணா, அண்ணாநகரில் துப்புரவுத் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். 

விஸ்வநாதன் (50), தேவராஜன் (48), கற்பகம் (40), ஜெயராமன் (35) ஆகியோர் மரபணு நோயால் பாதிக்கப்பட்டவர்கள். இந்த நோயின் தாக்கத்தால் இவர்களது கண்கள், கைகள், பேச்சு ஆகியவை ஒன்றோடு ஒன்று சரியாக ஒருங்கிணைப்பதில்லை. இவர்களது ஒரே சகோதரி சுகுணா மட்டுமே இவர்களை பராமரித்து வருகிறார். சென்னை மாநகராட்சியில் வேலை செய்து.

இவர்களில் தேவராஜன், கற்பகம், ஜெயராமன் ஆகியோர் இந்த கயிறைப் பிடித்துக் கொண்டே சென்று வருகிறார்கள். ஆனால், விஸ்வநாதனால் நிற்க முடியாததால் முழங்காலால் முட்டிப் போட்டபடி செல்கிறார். 

மழை பெய்து வீடு ஒழுக ஆரம்பித்துவிட்டால் இவர்கள் நடந்து செல்வதற்கு அதிகம் சிரமப்படுகிறார்கள். அப்படியே இவர்கள் கீழே விழுந்துவிட்டாலும், இவர்களை தூக்கி விட அக்கம் பக்கத்தில் இருந்துதான் யாரேனும் வந்து உதவ வேண்டும். உறவினர்களும் இவர்களை அவ்வளவாக வந்து பார்ப்பதில்லை.

வீட்டுக்குள் ஒழுகும் இடங்களில் எல்லாம் பக்கெட்டுகள் வைக்கப்படுகின்றன. மாலையில் வீடு திரும்பும் சுகுணா, நிரம்பிய பக்கெட்டுகளை எடுத்துவிட்டு காலி பக்கெட்டுகளை வைக்கிறார். 

எந்த பொருளை தூக்கிச் சென்றாலும் அதனை என் மீதே கொட்டிக் கொள்வேன். சில முறை சூடான சாம்பார், காபி போன்றவற்றை கொட்டிக் கொண்டேன் என்கிறார் கற்பகம்.

சில மாதங்களுக்கு முன்பு மேல்தளம் மிகவும் மோசமாக இருந்தது. எப்போது இடிந்து விழுமோ என்று பயந்து கொண்டிருந்தோம். எப்படியோ சுகுணா கடன் வாங்கி சரி செய்தார். ஆனால் இந்த மழை அதையும் பாழாக்கிவிட்டது என்கிறார் கற்பகம் வருத்தத்தோடு.

இவர்களது குடும்பம் பற்றி விஸ்வநாதன் கூறுவது மேலும் அதிர்ச்சியையே ஏற்படுத்துகிறது.

நாங்கள் இளைஞர்களாக இருக்கும்வரை நன்றாகவே இருந்தோம். நான்கு பேருக்கும் உடல் நலக்குறைவு வந்து திடீரென இப்படி ஆகிவிட்டோம். நாங்கள் 7 பேர் சகோதர சகோதரிகள். எங்களது சகோதரி சந்திரா 2004ம் ஆண்டு சுனாமியின் போது இறந்துவிட்டாள். மற்றொரு சகோதரி விமலா திருமணமாகி குடும்பத்தோடு வசித்து வருகிறார். வாரந்தோறும் வந்து எங்களைப் பார்த்துவிட்டுச் செல்வார். சுகுணாதான் எங்களுக்காக தன் வாழ்க்கையையே அர்ப்பணித்துவிட்டர் என்கிறார் கனத்த இதயத்தோடு.

எங்களுக்கு ஏதேனும் உடல் நலக் குறைவு ஏற்பட்டுவிட்டால், ஆட்டோ பிடித்து, அதில் எங்களை ஏற்றிவிடவே பலரது உதவி தேவைப்படும். எனவே தான் இந்த மழையில் நாங்கள் பத்திரமாக இருக்க வேண்டியது அவசியம். எங்களால் யாருக்கும் தொந்தரவு ஏற்படக் கூடாது அல்லவா என்கிறார் தேவராஜன்.

மனநலப் பிரச்னையில் பாதிக்கப்பட்டிருக்கும் ஜெயராமனுக்கு இது எதுவும் புரியவில்லை. எப்போதும் சிரித்தமுகமாக காணப்படுகிறார். 

மழை பெய்தாலே இயல்பு வாழ்க்கை பாதித்துவிட்டதாக மக்கள் குறை கூறுவார்கள். நமது இயல்பு வாழ்க்கையே மழையால் பாதிக்கிறது என்றால், இவர்களது போராட்ட வாழ்க்கை என்னவாகும். இவர்களுக்கு ஏற்ற ஒரு பாதுகாப்பான வீட்டை சுகுணா தேடிவைப்பார் என்று நான்கு பேரும் நம்பிக்கையோடு காத்திருக்கிறார்கள்.

மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு என்ற செய்திகளை படிக்கும் போது, இனி இவர்கள் நிலைமையும் நமக்கு நினைவுக்கு வரலாம்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.