முகப்பு
தமிழ்நாடு

கொடுங்கையூர் சிறுமிகள் பலியான சம்பவம்: விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

சென்னை கொடுங்கையூரில் தேங்கிய மழை நீரில் மின்கம்பி அறுந்து விழுந்து கிடந்ததால், மின்சாரம் பாய்ந்து இரு சிறுமிகள் உயிரிழந்த

Updated On : 29 ஜனவரி, 2024 at 6:01 PM
பகிர்:

சென்னை கொடுங்கையூரில் தேங்கிய மழை நீரில் மின்கம்பி அறுந்து விழுந்து கிடந்ததால், மின்சாரம் பாய்ந்து இரு சிறுமிகள் உயிரிழந்த சம்பவம் குறித்து அரசு விரிவான அறிக்கைத் தாக்கல் செய்யுமாறு சென்னை உயர் நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.
இதுதொடர்பாக, சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வுமுன் ஆஜரான வழக்குரைஞர் ஜார்ஜ் வில்லியம்ஸ், கொடுங்கையூரில் சிறுமிகள் பாவனா, யுவஸ்ரீ ஆகியோர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக முறையீடு செய்தார்.
அப்போது "அப்பகுதியில் உள்ள மின்இணைப்பு பெட்டிகள் சரிவர பராமரிக்கப்படாததே இச்சம்பவத்துக்குக் காரணம். இதற்கு தமிழக அரசு பொறுப்பேற்க வேண்டும். இனிவரும் காலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நடப்பதைத் தடுக்கவும், உயிரிழந்த சிறுமிகளின் குடும்பங்களுக்கு உரிய இழப்பீடு வழங்கவும் உயர் நீதிமன்றம் உத்தரவிட வேண்டும். இதுதொடர்பாக உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்காக எடுத்து விசாரிக்க வேண்டும்' என்றார்.
இச்சம்பவம் தொடர்பாக பொறியாளர்கள், மின் ஊழியர்கள் உள்ளிட்ட 11 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும், அரசு இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் அரசு தரப்பு வழக்குரைஞர் கூறினார்.
இதையடுத்து, இச்சம்பவம் குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை வெள்ளிக்கிழமைக்கு (நவ.3) ஒத்திவைத்தனர்.

முழு கட்டுரையைப் படிக்க →