முகப்பு
தமிழ்நாடு

சுதந்திரமான கற்றலைத் தரும் கல்வித் திட்டமே இப்போதைய தேவை: தருண் விஜய் வலியுறுத்தல்

எவ்வித நிர்பந்தமும் இல்லாமல் சுதந்திரமான கற்றலை மாணவர்களுக்குத் தரக்கூடிய கல்வித் திட்டமே இப்போதைய தேவை என்று மாநிலங்களவை முன்னாள் உறுப்பினர் தருண் விஜய் வலியுறுத்தினார்.

Updated On : 29 ஜனவரி, 2024 at 6:01 PM
பகிர்:

எவ்வித நிர்பந்தமும் இல்லாமல் சுதந்திரமான கற்றலை மாணவர்களுக்குத் தரக்கூடிய கல்வித் திட்டமே இப்போதைய தேவை என்று மாநிலங்களவை முன்னாள் உறுப்பினர் தருண் விஜய் வலியுறுத்தினார்.
சிபிஎஸ்இ பாடத் திட்டத்தில் தமிழ் கலாசாரம் குறித்து பாடத்தைச் சேர்ப்பதுடன், வடமாநில பள்ளிகளில் தென்னிந்திய மொழிகளை விருப்பப் பாடமாகக் கொண்டு வரவேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். சிபிஎஸ்இ பள்ளிகளின் கூட்டமைப்பான சகோதயா பள்ளி அமைப்பின் 23-ஆவது தேசிய மாநாடு மதுரையில் வியாழக்கிழமை தொடங்கியது. 2 நாள்கள் நடைபெறும் இம்மாநாட்டை தொடங்கி வைத்து, அவர் மேலும் பேசியது:
ஆங்கிலேயர் காலத்தில் இருந்த கல்வி முறைதான் இன்றும் இந்தியாவில் தொடர்ந்து கொண்டிருக்கிறது. முதலில் அதில் இருந்து வெளியேற வேண்டிய அவசியம். நமது பாரம்பரிய கலாசாரத்தைப் பற்றி அறிந்து கொள்ள மாணவர்களை ஊக்குவிக்க வேண்டும். அதற்கு திருக்குறளை அனைவரிடமும் கொண்டு சேர்க்க வேண்டும். வட இந்தியர்கள் திருவள்ளுவரைப் பற்றியும், திருக்குறளையும் அறிந்திருக்கவில்லை என்பது வேதனைக்குரியது.
திருக்குறள் என்பது தமிழர்களுக்கான நூல் மட்டுமல்ல, இந்தியாவின் கலாசார அரசியலமைப்பு நூலாகும். திருவள்ளுவரையும், திருக்குறளையும் படிக்காமல் அரசியல், கலாசார, பண்பாட்டு பெருமைகளை அறிந்து கொள்ள முடியாது.
சிபிஎஸ்இ பள்ளி மாணவர்கள் சிவாஜியையும், விக்கிரமாதித்தனையும் மட்டும் படிப்பது போதுமானதல்ல. சேர, சோழ, பாண்டிய மன்னர்கள், பாரதியார், கண்ணகி ஆகியோரையும் படிக்க வேண்டும் என்று மாநிலங்களவை உறுப்பினராக இருந்தபோதே வலியுறுத்தினேன். உலகின் மிகச்சிறந்த மன்னராக விளங்கியவர் ராஜேந்திர சோழன். வியட்நாம், கம்போடியா என கடல் கடந்து அவரது ஆட்சி இருந்தது. இன்றும் தமிழ் கலாசாரத்தின் அடிச்சுவடுகளை அங்கு காணமுடியும். ஆனால், ராஜேந்திர சோழனைப் பற்றியோ, தமிழ் கலாசாரத்தைப் பற்றியோ ஒரு பாடம் கூட சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் இல்லாதது வேதனைக்குரியது.
கல்வித் திட்டமானது எந்தவித நிர்பந்தமும் இல்லாமல் சுதந்திரமான கற்றலை மாணவர்களுக்கு அளிக்க வேண்டும். வட இந்திய மாணவர்கள் தென்னிந்திய கலாசாரத்தைப் பற்றி அறிந்து கொள்ளும் வகையில் தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளை விருப்பப் பாடமாகக் கொண்டு வரவேண்டும். இத்தகைய நடைமுறையால் மட்டுமே ஒன்றுபட்ட இந்தியா உருவாக்கும்.
மொழியை மக்களை இணைக்கும் பாலமாகப் பயன்படுத்த வேண்டுமே தவிர, மக்களுக்கு இடையே பூசல்களை ஏற்படும் வகையில் பயன்படுத்தக் கூடாது. கிராமத்தினர் தான் நமது கலாசார, பாரம்பரியத்தை நன்கு அறிந்தவர்கள். படிக்கவில்லை என்றாலும் அவர்களது அனுபவ அறிவு வியப்புக்குரியது. ஆங்கிலம் தெரிந்தவர்கள்தான் கற்றவர்கள் என்று மனப்போக்கு இருக்கிறது. அது மிகவும் தவறானது. சரளமாக ஆங்கிலத்தில் பேசிக் கொண்டு நமது கலாசாரப் பெருமைகளை அறிந்து கொள்ளாமல் இருப்பது காலனி ஆதிக்கத்தின் மீதான மோகம், அடிமைத்தனத்தின் அடையாளம். எனவே, நமது கலாசாரப் பெருமைகளைப் போற்றி பாதுகாக்க வேண்டும் என்றார்.

முழு கட்டுரையைப் படிக்க →