ராசிபுரம் வட்டாட்சியர் பணியிடை நீக்கம்
வாரிசு சான்றிதழ் வழங்க லஞ்சம் வாங்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட ராசிபுரம் வட்டாட்சியர், வருவாய் உதவியாளர் ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் மு.ஆசியா மரியம் உத்தரவிட்டார்.
வாரிசு சான்றிதழ் வழங்க லஞ்சம் வாங்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட ராசிபுரம் வட்டாட்சியர், வருவாய் உதவியாளர் ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் மு.ஆசியா மரியம் உத்தரவிட்டார்.
வெண்ணந்தூரை அடுத்துள்ள மின்னக்கல் பகுதியில் அரசு தொடக்கப் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றும் இளங்கோ என்பவருக்கு வாரிசு சான்றிதழ் வழங்கிட ரூ.15 ஆயிரம் லஞ்சம் கேட்டு பெற்ற வழக்கில், லஞ்ச ஒழிப்பு போலீஸாரால் ராசிபுரம் வட்டாட்சியராகப் பணியாற்றிய ந.ரத்தினம் (54), வருவாய் உதவியாளர் பாலசந்திரன் (55) ஆகியோர் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனர். இதுதொடர்பான அறிக்கை லஞ்ச ஒழிப்பு காவல் துறையினரால் மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதையடுத்து, மாவட்ட ஆட்சியர் மு.ஆசியா மரியம் இருவரையும் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.
இதையடுத்து, வட்டாட்சியர் அலுவலகத்தில் சமூக பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியராக உள்ள கே.பாஸ்கரன் கூடுதலாக வட்டாட்சியர் பொறுப்பைக் கவனிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.