தமிழ்நாடு

காது கேளாத, வாய் பேச முடியாதவர்களுக்கு ஓட்டுநர் உரிமம்: தமிழக அரசு செவிசாய்க்குமா? 

பிற மாநிலங்களில் உள்ளதுபோல, காது கேளாத, வாய் பேச முடியாதவர்களுக்கு ஓட்டுநர் உரிமம் எப்போது வழங்கப்படும் என, தமிழகம் முழுவதிலும் உள்ள சுமார் 3 லட்சம் மாற்றுத் திறனாளிகள் காத்திருக்கின்றனர்.

ஆர். தர்மலிங்கம்

பிற மாநிலங்களில் உள்ளதுபோல, காது கேளாத, வாய் பேச முடியாதவர்களுக்கு ஓட்டுநர் உரிமம் எப்போது வழங்கப்படும் என, தமிழகம் முழுவதிலும் உள்ள சுமார் 3 லட்சம் மாற்றுத் திறனாளிகள் காத்திருக்கின்றனர்.
 
தமிழகம் முழுவதிலும் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட காது கேளாத, வாய் பேச முடியாத மாற்றுத் திறனாளிகள் உள்ளனர். இவர்களில் சுமார் 60 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் இரு சக்கர வாகனம், கார் போன்றவற்றை இயக்கி வருகின்றனர். ஆனால் இவர்களில் ஒருவருக்கும் ஓட்டுநர் உரிமம் வழங்கப்படவில்லை என்ற அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன. வாகனச் சோதனைகளில் சிக்கும் இத்தகைய மாற்றுத் திறனாளிகளின் மீது வழக்குப் பதிவு, அபராதம் விதிப்பது போன்ற நடவடிக்கைகள் காவல் துறையினரால் எடுக்கப்படுகின்றன. 

கோவையில் 7,418 பேர் பாதிப்பு: உதாரணமாக, கோவை மாவட்டத்தில் உள்ள 44, 243 மாற்றுத் திறனாளிகளில் 7,418 பேர் செவித்திறன் குறைபாடு உடையவர்கள். இவர்களில் 60 சதவீத செவித் திறன் உள்ள சுமார் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர், வாகனங்களை இயக்கி வருகின்றனர். இவர்களில் பலர் ஓட்டுநர் உரிமத்துக்காக அரசு அதிகாரிகளிடம் பல முறை மனு அளித்தும், எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டுகின்றனர். 

இதுகுறித்து கோவை டெஃப் லீடர்ஸ் ஃபவுண்டேஷன் அமைப்பின் இயக்குநர் கே.முரளி கூறியதாவது:

நான் 10-ஆவது படிக்கும் முதலே வாகனங்களை இயக்கி வருகிறேன். ஆனால் தற்போது வரை ஒரு விபத்தும் ஏற்படுத்தியதில்லை. வாகனத்தின் முன்புறம் பொருத்தப்பட்டுள்ள கண்ணாடிகளைக் கொண்டே கணித்து, வாகனத்தை இயக்கி வருகிறோம். மும்பை, புதுதில்லி, மத்தியப்பிரதேசம் போன்ற மாநிலங்களில் செவித்திறன் குறைபாடு உடையவர்களின் நீண்ட போராட்டங்களுக்குப் பிறகு அவர்களுக்கு ஓட்டுநர் உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளன. 

ஆனால் தமிழகத்தில் இத்தகைய குறைபாடு உடைய 3 லட்சம் பேரில் வெறும் 10 சதவீதம் பேர் மட்டுமே ஓட்டுநர் உரிமத்துக்காகப் போராடி வருவதால் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பிற மாநிலங்களைப்போல தமிழகத்திலும் மாற்றுத் திறனாளிகளுக்கு ஓட்டுநர் உரிமம் வழங்க வேண்டும் என்றார். 

உரிமைகள் மறுப்பு: இதுகுறித்து கோவை காது கேளாத, வாய் பேச முடியாதோர் சங்கத்தின் உறுப்பினர் வி.டோமி கூறியதாவது:
கேரளத்தில் காது கேளாத, வாய் பேச முடியாத மாற்றுத் திறனாளியான ஷினான் ஓட்டுநர் உரிமத்தை வலியுறுத்தி, இந்தியா, நேபாளம், பூடான் ஆகிய மூன்று நாடுகளிலும் சுமார் 19,000 கி.மீ. தொலைவுக்கு தனியாக சுற்றுப் பயணம் செய்துள்ளார். அதன் பிறகு கேரளத்தில் ஓட்டுநர் உரிமம் வழங்கத் தேவையான நடவடிக்கைகளை அந்த மாநில அரசு மேற்கொண்டுள்ளது. 

கேரளத்தில் காது கேளாதோர் 50 சதவீதம் பேருக்கு ஓட்டுநர் உரிமம் வழங்கத் தேவையான நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. ஆனால் தமிழகத்தில் ஓட்டுநர் உரிமம் கோரி பல்வேறு போராட்டங்களை நடத்தியும்கூட எங்கள் உரிமைகள் மறுக்கப்பட்டு வருகின்றன என்றார். 

பரிசோதனை முகாம் தேவை: தமிழகத்தில் காது கேளாத, வாய் பேச முடியாத மாற்றுத் திறனாளின் செவித் திறன்களைப் பரிசோதிக்கும் வகையில், தமிழக அரசு மாவட்டந்தோறும் சிறப்பு பரிசோதனை முகாம்களை நடத்த வேண்டும். அதில், தேர்ச்சி பெறும் நபர்களு மட்டுமாவது ஓட்டுநர் உரிமம் வழங்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பு.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிலம்பரசனை இயக்கும் டியூட் இயக்குநர்?

உலக கிரிக்கெட்டில் இந்தியா ஆதிக்கம் செலுத்த விரும்புகிறேன்: ஸ்மிருதி மந்தனா

மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்!

தொகுதிப் பங்கீடு; இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியுடன் திமுக பேச்சுவார்த்தை!

சமந்தாவின் மா இன்டி பங்காரம் வெளியீட்டுத் தேதி!

SCROLL FOR NEXT