தமிழகத்தில் வியாழக்கிழமை நிலவரப்படி வேலூர், நாகப்பட்டினம், கடலூர் மாவட்டங்களில் தலா ஒரு குவாரி மட்டுமே இயங்குகின்றன. இதர குவாரிகளில் மண் அள்ளுவது பல்வேறு காரணங்களால் நிறுத்தப்பட்டுள்ளதால் கட்டுமானப் பணிகள் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
மணல் கொள்ளையைத் தடுக்கவும், விதிமுறைகளை மீறி ஆற்றில் மணல் அள்ளுவதைத் தடுக்கவும் அரசே குவாரிகளைத் திறந்து பொதுமக்களுக்கு தட்டுப்பாடின்றி மணல் விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டது.
தமிழ்நாடு மணல் இணைய சேவை www.tnsand.in என்ற இணையதளத்தையும், tnsand செல்லிடப்பேசி செயலியையும் அறிமுகப்படுத்தி ஜூலை மாதம் முதல் ஆன்-லைன் முறையில் மட்டுமே மணல் விற்பனை செய்யப்படுகிறது. இதன்மூலம், மணல் லாரிகள் நீண்ட வரிசையில் காத்திருப்பது தவிர்க்கப்பட்டு, தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் குவாரிகளுக்கும், மணல் விற்பனை நிலையங்களுக்கும் வந்து நேரடியாக மணலைப் பெற்றுக் கொள்ளலாம் என அரசு அறிவித்தது.
பொதுப் பணித் துறை நிர்ணயித்த விலைப்படி 2 யூனிட் மணலுக்கு ரூ. 1,050 என்ற விலையை அரசு கணக்கில் செலுத்தி குவாரிகளிலிருந்து மணல் எடுத்துக் கொள்ளலாம். இதன்படி, நாகப்பட்டினம் மாவட்டத்தில் வடரங்கம், கடக்கம், சித்தமல்லி, கடலூர் மாவட்டத்தில் சி. அரசூர், கூடலையாத்தூர், ஆழங்காத்தான், மதகளிர் மாணிக்கம், கள்ளிப்பாடி, வேலூர் மாவட்டம், சக்கரமல்லூர், பொய்கை, விழுப்புரம் மாவட்டத்தில் சிட்டாத்தூர் திருக்கை, திருக்கோவிலூர் வடக்குநெமிலி, தஞ்சாவூர் மாவட்டம் விட்டலாபுரம் ஆகிய 13 குவாரிகள் இயங்கி வந்தன. இங்கும் மணல் எடுக்க லாரிகள் 5 நாள்களுக்கு மேல் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது.
பின்னர், தஞ்சாவூர் மாவட்டத்தில் கூடலையாத்தூர், விட்டலாபுரம் குவாரிகளில் மணல் பதிவு செய்வது நிறுத்தப்பட்டது. வேலூர், நாகப்பட்டினம், கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் மட்டுமே குவாரிகள் இயங்கி வந்தன. இந்தச் சூழலில், சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவுக்குப் பிறகு, வேலூர் மாவட்டம்- சக்கரமல்லூர், விழுப்புரம் மாவட்டம்- சிட்டாத்தூர் திருக்கை, நாகப்பட்டினம்- வடரங்கம் ஆகிய மூன்று குவாரிகளில் மட்டுமே மணல் அள்ளப்படுகிறது.
இதர குவாரிகளில் தண்ணீர் சூழ்ந்திருப்பதாகவும், குவாரிகளுக்கு வரும் பாதை பழுதடைந்திருப்பதாகவும் கூறி மணல் அள்ளுவது நிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய சூழலில், வடரங்கம் குவாரியில் 120 லாரிகள், சிட்டாத்தூர் திருக்கையில் 100 லாரிகள், சக்கரமல்லூரில் 200 லாரிகள் என நாளொன்றுக்கு 420 லாரிகளுக்கு மட்டுமே தலா 2 யூனிட் மணல் வழங்கப்படுகிறது. இந்த மணலைப் பெற ஒருவாரம் முதல் 10 நாள்களுக்கு காத்திருக்க வேண்டியது. அந்த நாள்களுக்கு ஓட்டுநர், கிளீனர்களுக்கு ஊதியம், மணல் விற்பனை செய்யும் பகுதிக்கு கொண்டு செல்லும் போக்குவரத்து செலவு, மணல் விற்பனையக பராமரிப்பு செலவு ஆகியவற்றைக் கணக்கிடும்போது மணல் விலையானது அரசுக்குச் செலுத்தும் கட்டணத்தைவிட 10 மடங்கு உயர்ந்துவிடுகிறது என்கின்றனர் மணல் விற்பனையாளர்கள். இப்போதே 2 யூனிட் மணல் ரூ. 20 ஆயிரம் கொடுத்தும் கிடைக்காமல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்தச் சூழலில் உயர்நீதிமன்ற உத்தரவானது மணல் விலை உயர்வுக்கே வழிவகுக்கும் என்கின்றனர்.
அரசு மேல்முறையீடு அவசியம்: இதுகுறித்து மணல் குவாரி லாரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் யுவராஜ் கூறியதாவது:
நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக இத்தொழிலைச் சார்ந்த நேரடியாக, மறைமுகமாகப் பயன்பெறும் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபடுவதால் எந்தப் பலனும் இல்லை.
இதுதொடர்பாக அரசு மேல்முறையீடு செய்தால் மட்டுமே அது சாத்தியம். எனவே, தமிழக அரசு முறையீடு செய்ய வலியுறுத்தி முதல்வரைச் சந்திக்க உள்ளோம். இதற்காக முதல்வரிடம் நேரம் கேட்டு லாரி உரிமையாளர்கள் காத்திருக்கின்றனர் என்றார்.
டிச.4-இல் ஆலோசனை: மணல் குவாரிகள் தொடர்பாக கட்டடப் பொறியாளர்கள் சங்கம், லாரி உரிமையாளர்கள் சங்கம், மணல் குவாரி லாரி உரிமையாளர்கள் சங்கம், இந்திய கட்டுநர்கள் சங்கம், அரசு ஒப்பந்ததாரர்கள் சங்கம், கட்டுமானத் தொழில் புரிவோர், கட்டட ஒப்பந்ததாரர்கள், மணல், ஜல்லி, செங்கல் விற்பனையாளர்கள் சங்கம் என மணலால் நேரடியாகவும், மறைமுகமாகவும் பயன்பெறும் தொழில்களைச் சேர்ந்த 27 அமைப்புகள் சென்னையில் வரும் திங்கள்கிழமை(டிச. 4) கூடி ஆலோசனை நடத்துகின்றன. இதில் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எம்-சாண்ட் எடுபடவில்லை: இதுகுறித்து ஒப்பந்ததாரர் பி.ஜி.சுரேந்திரன் கூறியதாவது: செயற்கை மணலானது கட்டுமானப் பூச்சுக்கு எடுபடவில்லை. எம்-சாண்ட் கலந்த சிமென்ட் கலவை விரைவில் உலர்ந்துவிடுவதால் விரைந்து பயன்படுத்த வேண்டிய கட்டாயம் உள்ளது.
மேலும், தளத்தில் டைல்ஸ் பதிக்கும்போது டைல்ஸும், கலவையும் சேர்ந்து இறுகிப் பிடிப்பதில்லை. இதன்காரணமாக டைல்ஸ் பதித்த பிறகு அதன் மீது நடக்கும்போது சப்தம் கேட்பதும், சேதமடைவதும் வாடிக்கையாக உள்ளது என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.