நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரிய வழக்கு: 13 மாவட்ட ஆட்சியர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்
தமிழகத்தில் நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரிய வழக்கில் நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட 13 மாவட்டங்களின் ஆட்சியர்கள், சென்னை உயர் நீதிமன்றத்தில் வியாழக்கிழமை ஆஜராகினர்.
தமிழகத்தில் நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரிய வழக்கில் நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட 13 மாவட்டங்களின் ஆட்சியர்கள், சென்னை உயர் நீதிமன்றத்தில் வியாழக்கிழமை ஆஜராகினர்.
இதுதொடர்பாக, ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த இயற்கை வளம் மற்றும் பெரும்பள்ள ஒடை பாதுகாப்பு நலச் சங்கத் தலைவர் சண்முகசுந்தரம், உயர் நீதிமன்றத்தில் கடந்த 2015 -ஆம் ஆண்டு ஒரு மனுவை தாக்கல் செய்திருந்தார். அதில், "தமிழகம் முழுவதும் நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற கடந்த 2009 -ஆம் ஆண்டு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அந்த உத்தரவை பெரும்பாலான மாவட்டங்கள் அமல்படுத்தவில்லை. எனவே, இந்த உத்தரவை அமல்படுத்த உத்தரவிட வேண்டும்' என கோரப்பட்டிருந்தது.
இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, அதுதொடர்பான அறிக்கையைத் தாக்கல் செய்ய அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் உத்தரவிட்டிருந்தது. அந்த உத்தரவின்படி 19 மாவட்ட ஆட்சியர்கள் அறிக்கை தாக்கல் செய்தனர். அறிக்கைத் தாக்கல் செய்யாத நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, நாகை, கரூர், தருமபுரி, தஞ்சை, திருவாரூர், விழுப்புரம், பெரம்பலூர், புதுக்கோட்டை, நாமக்கல், நீலகிரி ஆகிய 13 மாவட்ட ஆட்சியர்கள் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் ஹூலுவாடி ஜி.ரமேஷ், நீதிபதி டீக்காராமன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, 13 மாவட்ட ஆட்சியர்களும் ஆஜராகினர். அப்போது நீதிபதிகள், "நீர்நிலைகளை பாதுகாக்க பொறுப்புடன் செயல்பட வேண்டும். ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து நீர்நிலைகளை மீட்க வேண்டும். ஆக்கிரமிப்பை அகற்றும்படி சம்பந்தப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் பிறப்பித்து, அதற்கு அவர்கள் எந்த விளக்கமும் அளிக்கவில்லை என்றால், கருணை காட்டாமல் நடவடிக்கை எடுங்கள். நீர்நிலைகளை பாதுகாக்கும் விவகாரத்தில் உங்களுக்கு தேவையான உதவிகளை செய்ய நீதிமன்றம் தயாராக உள்ளது. இந்த உத்தரவை நிறைவேற்றுவதில் ஏதேனும் இடையூறு இருந்தால் நீதிமன்றத்திடம் தெரிவியுங்கள்' என்றனர்.
மேலும், மாவட்ட வருவாய் துறையின் தடையில்லா சான்று இல்லாத நிலத்தை பத்திரப்பதிவு செய்யக்கூடாது என பதிவுத் துறைக்கு உத்தரவிட்டனர். அத்துடன், இந்த வழக்கில் இனி மாவட்ட ஆட்சியர்கள் ஆஜராக விலக்களித்து, விசாரணையை நவம்பர் 17 -ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.