தமிழ்நாடு

என்றும் இளமைக்கு தமிழ் உத்தரவாதம்! மகா வித்துவான் வே.சிவசுப்பிரமணியன்

DIN

தமிழ்படித்தவர்கள் எப்போதும் நிச்சயம் இளமையாக இருப்பார்கள் என மகா வித்துவான் வே.சிவசுப்பிரமணியன் கூறினார்.
எம்.ஏ.சி. அறக்கொடை நிறுவனர் டாக்டர் எம்.ஏ.சிதம்பரம் செட்டியாரின் 99}ஆவது பிறந்த நாள், நிறுவன தின விருதுகள் வழங்கும் விழா சென்னை பாரிமுனையில் உள்ள ராஜா அண்ணாமலை மன்றத்தில் வியாழக்கிழமை மாலை நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் தினமணி ஆசிரியர் கி.வைத்தியநாதன் தலைமையேற்று சிறப்புரை நிகழ்த்தினார். 
எம்.ஏ.சி. அறக்கொடை நிர்வாக அறங்காவலர் ஏ.சி.முத்தையா, அறங்காவலர் தேவகி முத்தையா, அஸ்வின் முத்தையா, வள்ளி அருண் உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
நிபுணர்களுக்கு விருதுகள்: தமிழ் மொழி மற்றும் இலக்கிய வளர்ச்சிக்கு அரும் தொண்டாற்றி வரும் மகா வித்துவான் வே.சிவசுப்பிரமணியத்துக்கு டாக்டர் இராஜா சர் அண்ணாமலை செட்டியார் விருதையும், நுண்கலைத் துறையில் நற்பங்கை அளித்தமைக்காக டாக்டர் எம்.ஏ. சிதம்பரம் செட்டியார் விருதை ஓவியர் ஆ. மணிவேலுவுக்கும், தொழில் துறையில் முதல் தலைமுறை தொழில்முனைவோராக சிறந்து விளங்கும் தொழிலதிபர் டாக்டர் ஏ.சி. முத்தையா விருதை ஆச்சி மசாலா நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் மேலாண் இயக்குநர் ஏ.டி. பத்மசிங் ஐசக்குக்கும் தினமணி ஆசிரியர் கி.வைத்தியநாதன் விருது வழங்கிப் பாராட்டினார்.
நிகழ்ச்சியில் விருது பெற்ற மகா வித்துவான் வே.சிவசுப்பிரமணியன் பேசியது: தமிழுக்காக தொடர்ந்து பணியாற்றி வருகிறது ராஜா சர் அண்ணாமலைச் செட்டியார் குடும்பம். பொழுதுபோக்குக்கு ஓவியம், வயிறு பசியார உணவு, மறுமைக்குத் தமிழ் ஆகிய மூன்று பிரிவுகளில் விருதுகளை வழங்கியுள்ளனர். இந்த மூன்றும் இருந்தால் வேறு எதுவும் தேவையில்லை.
எத்தனையோ அறக்கட்டளை இருக்கலாம். ஆனால் இங்கு ஒரு குடும்பமே, ஒரு இனமே அறப்பணியில் காலம் காலமாக தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. அதே போன்று சமூகம் மற்றும் சமயம், தமிழ் மற்றும் தமிழிசைக்கு அவர்கள் ஆற்றும் பணி அளப்பரியது. சென்னைப் பல்கலைக்கழகத்தில் ரூ.4 லட்சம் கொடுத்து முதன் முதலில் சைவசித்தாந்த துறையை ஏற்படுத்தியவர் அண்ணாமலைச் செட்டியார். எண்ணிக்கையில் அடங்கா வண்ணம் எண்ணற்ற கோயில்களுக்கு திருப்பணி செய்தது நகரத்தார் குடும்பம். முதன் முதலில் வானொலி சேவையைத் தொடங்கியவர் அண்ணாமலைச் செட்டியார் என்றார் வே.சுப்பிரமணியன்.
தினமணி ஆசிரியர் கி.வைத்தியநாதன் நிகழ்த்திய சிறப்புரை: உழைப்புக்கு முதலிடம் தந்தவர்கள்,நேர்மையாக வாழ்ந்தவர்கள், சிக்கனமாகப் பொருள் சேர்த்தவர்கள், தேசபக்தியும் தெய்வபக்தியும் மிக்கவர்கள்,கொடையை பிறவிக் குணமாகக் கொண்டவர்கள், தம் இரு கண்களாய் தமிழையும் சைவத்தையும் காத்தவர்கள், தாங்களும் வாழ்ந்து பிறரையும் வாழ வைத்தவர்கள், எந்நாட்டில் இருந்தாலும் தமிழ்நாட்டில் வாழ்ந்தாலும் தமிழை என்றும் மறவாதவர்கள் நகரத்தார் சமூகத்தினர். 
எண்ணிக்கையில் நகரத்தார் மிகவும் குறைவான சிறுபான்மையினராக இருந்தாலும், யூதர்களைப்போல இந்தியாவிலும், தமிழகத்திலும் தவிர்க்க முடியாத சக்தியாகத் திகழ்கிறார்கள் என்பதுதான் உண்மை.
தமிழை வளர்த்த அண்ணாமலைப் பல்கலைக்கழகமும், தமிழிசையை வளர்த்தத் தமிழிசைச் சங்கம் கண்ட பெருமை செட்டிநாட்டரசர் குடும்பத்துக்கு உண்டு. தமிழையும் சமயத்தையும் வளர்த்தார்கள் நகரத்தார் என்றால், தமிழ் ஒலிப்பதற்காக இந்த ராஜா அண்ணாலை மன்றத்தை நிறுவி, தமிழுக்கு அடையாளத்தை ஏற்படுத்தித் தந்த சிறப்பு செட்டிநாட்டரசர் குடும்பத்துக்கு உண்டு.
நகரத்தார் சமூகத்தில் தலைமகனாகத் திகழ்வது செட்டிநாட்டு அரசர் ராஜா சர் அண்ணாமலை செட்டியாரின் குடும்பம். ராஜா சர் அண்ணாமலைச் செட்டியார் குடும்பத்தினரை அகற்றி நிறுத்தித் தமிழ் குறித்தோ, தமிழகம் குறித்தோ, தமிழினம் குறித்தோ பேசவோ, எழுதவோ, சிந்திக்கவோ முடியாது. 
ஜிஎஸ்டி பாதிப்பு: ஜிஎஸ்டியால் மற்ற மாநிலங்கள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அதில் தமிழகம் மிக அதிகமான பாதிப்பில்லாமல் இருப்பதற்கு காரணம் தொழில்வளம் நன்றாக இருப்பதுதான். இதற்கு அடித்தளமிட்டவர்கள் நகரத்தார்கள்தான். 
தமிழகம் தொழில் தலைமையகமாக மாறியிருக்கும்: ""ரிலையன்ஸ் நிறுவத்தினர் பெட்ரோ கெமிக்கல் துறையில் கால்பதிக்கும் முன்பே தொலைநோக்குப் பார்வையுடன், "ஸ்பிக்' என்கிற சதர்ன் பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனத்தை நிறுவியவர் ஏ.சி. முத்தையா அவர்கள். இவரால் ஏன் அம்பானி அடைந்த வெற்றியை அடைய முடியவில்லை என்பது இன்றளவும் புதிராகவே இருக்கிறது. மத்திய, மாநில அரசுகளின் ஆதரவு முழுமையாக இருந்திருந்தால், "ஸ்பிக்' நிறுவனம் இந்தியாவின் முதன்மையான நிறுவனமாகத் திகழ்ந்திருக்கும். 
எம்.ஏ. சிதம்பரம் செட்டியார் அறக்கட்டளை செய்துவரும் பணிகளைப் பார்த்தால் மலைப்பை ஏற்படுத்துகின்றன. அந்த அறக்கட்டளைப் பணிகளில் எல்லாம் தலையாய பணி, ஆண்டுதோறும் தலைசிறந்த தமிழறிஞர்களையும், இளைஞர்களையும், முதல் தலைமுறை தொழில் முனைவோரையும் தேர்ந்தெடுத்து விருது வழங்கி கெüரவிப்பது'' என்றார் கி.வைத்தியநாதன்.
வரவேற்புரையாற்றிய ஏ.சி.முத்தையா பேசியது: எங்களது செவிலியர் பள்ளி மற்றும் கல்லூரியில் இந்த ஆண்டு தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழக அனுமதி மூலம் எங்ய்ங்ழ்ஹப் ஈன்ற்ஹ் அள்ள்ண்ள்ற்ஹய்ற் என்ற புதிய பாடத்தை தொடங்கியுள்ளோம். தூத்துக்குடியில் இயங்கிவரும் தொழிற்பயிற்சி மையம் ரூ.3 கோடியில் நவீனப்படுத்தப்பட்டுள்ளது. சிவகங்கை மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் இயங்கிவரும் 11 மருத்துவ சேவை மையத்துடன் இந்தாண்டு 2 புதிய மையங்கள் தொடங்கப்பட்டு சுமார் 14,000 கிராம மக்கள் இலவசமாக மருத்து சிகிச்சை பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார் முத்தையா.
முன்னதாக விருது பெற்ற இறைநெறி ஓவியர் ஆ.மணிவேலு, முதல் தலைமுறை தொழிலதிபர் ஏ.டி.பத்மசிங் ஐசக் ஆகியோரும் ஏற்புரை நிகழ்த்தினர்.
இந்த நிகழ்ச்சியில், எம்.ஏ.சி. அறக்கொடை நிறுவனச் செயலாளர் பி.வேதகிரி, தமிழ் இசைச் சங்கத்தின் அறங்காவலர் ப.லட்சுமணன், நீதிபதி பு.ரா. கோகுல
கிருஷ்ணன், தொழிலதிபர் ஜெம்.
வீரமணி, முன்னாள் தலைமைச் செயலர் சபாநாயகம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மூத்த பத்திரிகையாளர் ஐ.சண்முகநாதன் மறைவு: மு.க.ஸ்டாலின் இரங்கல்

1000க்கும் அதிகமான திரைகளில் ‘நடிகர்’ திரைப்படம்!

“நான் முதல்வன்” திட்டம் - முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

கறுப்புப் பூனை...!

ரே பரேலியில் ராகுல் காந்தி வேட்புமனுத் தாக்கல்!

SCROLL FOR NEXT