தமிழ்நாடு

தீபாவளிக்காக அரசுப் பேருந்துகளில் கடந்த 3 நாள்களில் 4 லட்சம் பேர் பயணம்

DIN

தீபாவளி பண்டிகைக்காக கடந்த 3 நாள்களில் அரசுப் பேருந்துகளில் மட்டும் சுமார் 4 லட்சம் பேர் சென்னையிலிருந்து சொந்த ஊருக்குச் சென்றுள்ளனர்.
தீபாவளி பண்டிகை புதன்கிழமை (அக்.18) கொண்டாடப்படுவதையொட்டி மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்கின்றனர். இதற்காக தமிழக அரசு கடந்த வெள்ளிக்கிழமை (அக்.13) முதல் சிறப்பு பேருந்துகளை இயக்கி வருகிறது. இதனால் கடந்த சில நாள்களாக அரசுப் பேருந்துகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.
போக்குவரத்து நெரிசல்: தீபாவளி பண்டிகை இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், திங்கள்கிழமை பிற்பகலிலும் சொந்த ஊர்களுக்குப் புறப்பட்டுச் சென்றனர். அப்போது, திடீரென மழை பெய்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு சென்னை மாநகரமே ஸ்தம்பித்தது. போக்குவரத்து நெரிசலை சீர்செய்ய பல இடங்களில் சிறப்பு ஏற்பாடுகள் செய்திருந்தாலும் மக்கள் தங்கள் சொந்த ஊர் செல்ல திங்கள்கிழமை பிற்பகல் 3 மணி முதல் அதிகமாக வருகை புரிந்த வண்ணம் இருந்தனர்.
முன்பதிவு செய்தவர்களுக்கான பேருந்துகள் அரை மணி நேரத்திற்கும் மேலாக காலதாமதமாக வந்ததால் பயணிகள் கடும் சிரமத்துக்குள்ளானார்கள்.
மேலும், சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் 5 இடங்களிலும் பயணிகளுக்குத் தேவையான குடிநீர், கழிப்பிட வசதி போன்ற அடிப்படை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால், அண்ணா நகர் ஊரப்பாக்கம் ஆகிய பகுதிகளில் மக்கள் அமர ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தாற்காலிக கூடாரம் மழை காரணமாக ஒழுகியது. மேலும் அந்தப் பகுதிகள் மண் தரையாக இருந்ததால் மழை பெய்தவுடன் சேரும், சகதியுமாக மாறியது. இதனால் அந்த பேருந்து நிலையத்தில் மக்கள் சற்று சிரமத்துக்குள்ளானார்கள்.
சென்னையைக் கடக்க 2 மணி நேரம்: இதேபோன்று தனியார் ஆம்னி பேருந்துகள் அனைத்தும் ஊரப்பாக்கத்திலிருந்துதான் இயக்கப்பட வேண்டும் என அரசு அறிவித்திருந்தது. ஆனால், அதனைப் பொருட்படுத்தாமல் பெருங்களத்தூர், வண்டலூர் என ஜிஎஸ்டி சாலையில் ஆங்காங்கே பேருந்துகளை நிறுத்தி மக்களை ஏற்றிச் சென்றதால் போக்குவரத்து நெரிசல் காரணமாக சென்னை நகரை விட்டு வானங்கள் வெளியேற குறைந்தது 2 மணி நேரம் முதல் 3 மணி நேரம் ஆனது. செங்கல்பட்டு அருகே உள்ள பரனூர் வரை போக்குவரத்து ஸ்தம்பித்தது.
இன்று 4,463 பேருந்துகள் இயக்கம்: கடலூர், புதுச்சேரி, திருவண்ணாமலை போன்ற வட மாவட்ட அல்லது குறைந்தபட்ச பயணம் நேரம் கொண்ட ஊர்களுக்கு செவ்வாய்க்கிழமை (அக்.17) ஏராளமானோர் செல்ல இருப்பதால் 2,188 சிறப்புப் பேருந்துகள் உள்பட 4,463 பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. இதில் கோயம்பேட்டில் இருந்து மட்டும் 3,274 பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. சுமார் 40,000 பேர் முன்பதிவு செய்துள்ளனர். இதில் சென்னையிலிருந்து செல்ல 25,946 பேர் முன்பதிவு செய்துள்ளனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோடைக்கால பயிற்சி வகுப்புக்கு கட்டணம்- எடப்பாடி பழனிசாமி கண்டனம்

சமந்தாவின் புதிய படம்!

நீல நிலவே....திவ்யா துரைசாமி!

மணிப்பூரில் இரண்டு குழுக்களுக்கிடையே மீண்டும் துப்பாக்கிச்சண்டை: கிராம மக்கள் அச்சம்

கைகளில் செம்புடன் கர்நாடக முதல்வர் தலைமையில் அமைச்சர்கள் தர்னா

SCROLL FOR NEXT