இலங்கைக் கடற்படையினரால் பாம்பன் மீனவர்கள் 7 பேர் கைது
கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த பாம்பன் மீனவர்கள் 7 பேரை, இலங்கைக் கடற்படையினர் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.
கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த பாம்பன் மீனவர்கள் 7 பேரை, இலங்கைக் கடற்படையினர் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் பகுதியிலிருந்து 500-க்கும் மேற்பட்ட நாட்டுப்படகு மீனவர்கள் வெள்ளிக்கிழமை கடலுக்குச் சென்றனர். கச்சத்தீவு மற்றும் தனுஷ்கோடிக்கு இடையே வெள்ளிக்கிழமை இரவு மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, அங்கு வந்த இலங்கைக் கடற்படையினர் ஒரு படகை சிறைபிடித்தனர். அப்படகில் இருந்த 7 மீனவர்களை கைது செய்து, தலைமன்னார் கடற்படை முகாமுக்கு கொண்டு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த 7 மீனவர்கள் குறித்த விவரம் சனிக்கிழமை தெரியவரும் என, மீன்வளத் துறை அதிகாரி தெரிவித்தார்.
இந்நிலையில், படகுடன் மீனவர்களை விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என, நாட்டுப்படகு மீனவ சங்கத் தலைவர்கள் எஸ்.பி. ராயப்பன் மற்றும் அருள் கோரிக்கை விடுத்துள்ளனர்.