தமிழ்நாடு

மதுரை மாவட்டத்தில் 2 நாள்களில் வெவ்வேறு சம்பவங்களில் பள்ளி மாணவர் உள்பட 5 பேர் கொலை

தினமணி

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளத்தைச் சேர்ந்த முருகேசன் மகன் செல்லத்துரை (23).  அப்பகுதியில் உள்ள தென்னந்தோப்புகளில் வாகனங்களில் தேங்காய் ஏற்றும் வேலை பார்த்து வந்துள்ளார்.

தேங்காய் ஏற்றச் செல்லும்போது அதே பகுதியைச் சேர்ந்த சிலரையும் வேலைக்கு அழைத்துச் சென்று வந்துள்ளார். இதில் கூலி தொடர்பாக செல்லத்துரைக்கும்,  அவர்களுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு மோதலாக மாறியுள்ளது. இதில் இருதரப்பினருக்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது.

இந்நிலையில்,  செல்லத்துரை மன்னாடிமங்கலத்துக்கு புதன்கிழமை சென்றுவிட்டு வீடு திரும்பி உள்ளார். அப்போது  முள்ளிப்பள்ளம் சந்திப்பில் அவரை வழிமறித்த சிலர் கத்தியால் குத்திவிட்டு தப்பிச்சென்றனர். கழுத்து, மார்பு பகுதிகளில் பலத்த காயமடைந்த செல்லத்துரை சம்பவ இடத்திலேயே இறந்தார்.

சம்பவம் தொடர்பாக செல்லத்துரையின் சகோதரர் முருகேசன் அளித்த புகாரின் பேரில் சிவகுமார், முத்துகிருஷ்ணன்,  முத்துக்கண்ணன்,  முனீஸ்வரன், மருதுபாண்டி, மாரிச்செல்வம் என்ற லூஸ்மாரி ஆகிய 6 பேர் மீது காடுபட்டி போலீஸார் வழக்குப் பதிந்து,  அவர்களை தேடி வருகின்றனர். மதுரை மாவட்டம். கீழவளவு அம்மன்கோவில்பட்டியைச் சேர்ந்த பாண்டி செல்வம் மகன் பாலமுருகன் (23). இவரது சகோதரர் பரத்குமார் (25). அம்மன்கோவில்பட்டியில் பொதுக்குளியல் தொட்டியில் புதன்கிழமை குளிக்கச்சென்ற பரத்குமார் தொட்டிக்குள் இறங்கி குளித்துள்ளார்.

அப்போது அங்கு குளித்தவர்களுக்கும் பரத்குமாருக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது.பின்னர் அப்பகுதியில் உள்ள வீரகாளியம்மன் கோயில் திடலில் பாலமுருகன், பரத்குமார் இருவரும் அமர்ந்திருந்தனர். அப்போது அங்கு வந்த ராஜபாண்டி, கார்த்திக், நவீன்ராஜ், கண்ணன் ஆகியோர் பரத்குமாரிடம் தொட்டிக்குள் இறங்கி குளித்தது தொடர்பாக கேட்டுள்ளனர்.

இதில் இருதரப்பினருக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது.  இதில் நால்வரும்  மது பாட்டிலால் பரத்குமார் தலையில் தாக்கியுள்ளனர். இதை பாலமுருகன் தடுக்க முயன்றபோது அவரது கழுத்தில் உடைந்த மதுபாட்டிலால் குத்தியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த பாலமுருகன் சம்பவ இடத்திலேயே இறந்தார். சம்பவம் தொடர்பாக பரத்குமார் அளித்த புகாரின்பேரில் கீழவளவு போலீஸார் வழக்குப்பதிந்து நால்வரையும் தேடி வருகின்றனர்.

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள கீழ நாச்சிகுளத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன்(39). திருமணமாகி மனைவியைப் பிரிந்து வசித்து வந்தார். தீபாவளியை முன்னிட்டு அதே பகுதியைச் சேர்ந்த சிலருடன் புதன்கிழமை மாலை மது அருந்தியுள்ளார். அப்போது அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மணிகண்டனை அவர்கள் தாக்கியுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த மணிகண்டனின் குடும்பத்தினர் அவரை மீட்டு வீட்டுக்கு அழைத்து சென்று படுக்க வைத்து விட்டுச் சென்றுவிட்டனர்.

இந்நிலையில், வியாழக்கிழமை அதிகாலையில் பால் கறப்பதற்காக மணிகண்டனின் சகோதரர் செந்தில் சென்றுள்ளார். அப்போது மணிகண்டனின் வீட்டு வாயிலில் ரத்தக்கறை இருந்ததால் உள்ளே சென்று பார்த்துள்ளார். அப்போது மணிகண்டன் தலையில் கல்லைப் போட்டு கொலை செய்யப்பட்டு கிடந்துள்ளார். சம்பவம் தொடர்பான புகாரின்பேரில் சோழவந்தான் போலீஸார், அம்ஜத்கான், நாகூர் மீரான்,  காதர் ஒலி, பிரித்விராஜ் மற்றும் சிலர் மீது வழக்குப் பதிவு செய்து தேடி வருகின்றனர்.

மதுரை அவனியாபுரம் வைக்கம்பெரியார் நகரைச் சேர்ந்தவர் ஆரோக்கிய தாஸ் (42).  இவருக்கும் பெரியார் நகரைச் சேர்ந்த சாமித்துரை தரப்பினருக்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. இதனால்  தற்போது குடும்பத்தினருடன் மதுரை மகபூப் பாளையம் ஒத்தப்பட்டியில் வசித்து வருகிறார். இவரது மகன் சேகர் (17).  பெரியார் பேருந்து நிலையம் அருகே உள்ள பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார். இந்நிலையில் தீபாவளியை முன்னிட்டு வைக்கம் பெரியார் நகரில் உள்ள நண்பர்களை புதன்கிழமை சந்திக்கச் சென்றுள்ளார். அப்போது சாமித்துரை,  செல்வக்குமார்,  முத்துபாண்டி ஆகியோர் சேகரை கடத்திச்சென்றுவிட்டனர்.

இந்நிலையில் ஊருக்கு வெளியே உள்ள வயல்பகுதியில் சேகர் கழுத்து அறுக்கப்பட்டு பிணமாகக் கிடந்துள்ளார்.  தகவலின் பேரில் ஊரகக் காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன், துணைக் கண்காணிப்பாளர் வனிதா ஆகியோர் சம்பவ இடத்துக்குச்சென்று பார்வையிட்டனர். இதைத்தொடர்ந்து குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி  பெரியார் நகரைச் சேர்ந்த பொதுமக்கள் அப்பகுதியில் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தியதன்பேரில் கலைந்து சென்றனர். சம்பவம் தொடர்பாக ஆரோக்கிய தாஸ் அளித்த புகாரின்பேரில் சாமித்துரை (48),  செல்வகுமார்(25) ஆகிய இருவரையும் போலீஸார் கைது செய்து தலைமறைவானவர்களைத் தேடி வருகின்றனர்.

மதுரை மேலவாசல் வீட்டுவசதி வாரியக் குடியிருப்பைச் சேர்ந்த பேச்சிமுத்து மகன்  மாரிமுத்து (32). ஆட்டோ ஓட்டுநரான மாரிமுத்து மீது திடீர் நகர் காவல்நிலையத்தில் கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. மேலும் ரௌடிகள் பட்டியலிலும் இடம்பெற்றுள்ளார்.

இந்நிலையில் வியாழக்கிழமை அதிகாலையில் பழைய திருவள்ளுவர் பேருந்து நிலையம் அருகே உள்ள திடீர்நகர் செல்லும் சந்துப் பகுதியில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் மாரிமுத்து பிணமாகக் கிடந்தார். திடீர்நகர் போலீஸார்  மாரிமுத்துவின் சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளைத் தேடி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேட்புமனுவை திரும்பப் பெற்று பாஜகவில் இணைந்த காங். வேட்பாளர்!

நடிகர் பிரகாஷ் ராஜுக்கு அம்பேத்கர் சுடர் விருது

திகார் சிறையில் கேஜரிவாலை சந்திக்க சுனிதாவுக்கு அனுமதி!

சமந்தாவிடம் இத்தனை கார்களா?

பாலியல் புகாரில் சிக்கிய தேவகௌடா பேரன்! நாட்டைவிட்டு தப்பினார்

SCROLL FOR NEXT