தமிழ்நாடு

திருத்தணி மலைப்பாதையில் பேருந்து கவிழ்ந்து விபத்து

DIN

திருத்தணி முருகன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு திரும்பியபோது, பிரேக் பிடிக்காமல் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஆட்டோ ஓட்டுநர் உயிரிழந்தார். 23 பேர் பலத்த காயமடைந்தனர்.
மதுரையை அடுத்த மீனாட்சிபுரம் பகுதியைச் சேர்ந்த 55 பேர், தனியார் சுற்றுலாப் பேருந்தில் திருத்தணி முருகன் கோயிலுக்கு சனிக்கிழமை காலை வந்தனர். 
அவர்கள் மலைக்கோயிலில் முருகப்பெருமானை தரிசித்துவிட்டு மீண்டும் பேருந்து மூலம் மலையில் இருந்து கீழே இறங்கிக் கொண்டிருந்தனர்.
அப்போது, மலைப்பாதையில் பாதி தொலைவில் பேருந்து கீழே இறங்கிக் கொண்டிருந்தபோது, திடீரென பிரேக் பிடிக்காமல் போனது.
இதனால், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பேருந்து வேகமாக கீழே இறங்கியது. அடிவாரத்தின் அருகே கார், நுழைவு வாயில் தூண் மற்றும் ஆட்டோ மீது பேருந்து மோதி, தலைகீழாக கவிழ்ந்தது. இந்த விபத்தில் திருத்தணி நல்லாங்குளம் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் மதன்குமார் (32) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 
பேருந்தில் வந்த ரத்தினம் (60), பொன்சங்கர் (50), சந்தோஷ்காந்தி (4), ஜானகி (27), காமேஸ்வரி (12), நவீன் (3), வேலு (60), காரில் வந்த சாமுண்டீஸ்வரி (53) ஆகியோர் உள்பட மொத்தம் 23 பேர் பலத்த காயமடைந்தனர். இந்நிலையில் திருத்தணி போலீஸார், தீயணைப்புத் துறையினர் அங்கு விரைந்து வந்து, காயமடைந்தவர்களை மீட்டு, 108 ஆம்புலன்ஸில் திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இவர்களில் பொன்சங்கர், காமேஸ்வரி ஆகியோர் மட்டும் தீவிர சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்த விபத்து குறித்து தகவலறிந்த மாவட்ட ஆட்சியர் எ. சுந்தரவல்லி, எஸ்.பி., சிபி சக்கரவர்த்தி, அரக்கோணம் எம்.பி., கோ.அரி, முருகன் கோயில் தக்கார் வே. ஜெய்சங்கர், வருவாய் கோட்டாட்சியர் ஜெயராமன், வட்டாட்சியர் நரசிம்மன், முன்னாள் நகர்மன்றத் தலைவர் டி. சௌந்தர்ராஜன் ஆகியோர் திருத்தணி மருத்துவமனைக்கு வந்து காயமடைந்தவர்களை சந்தித்து ஆறுதல் கூறினர். மேலும், தலைமை மருத்துவர் இளங்கோவனிடம் உரிய சிகிச்சை அளிக்குமாறு அறிவுறுத்தினர்.
இந்த சம்பவம் திருத்தணி நகரில் பரபரப்பை ஏற்படுத்தியது. விபத்து குறித்து திருத்தணி போலீஸார் வழக்குப்பதிந்து தப்பி ஓடிய பேருந்து ஓட்டுநரை தேடி வருகின்றனர்.

உதவிக்கரம் நீட்டிய கோயில் தக்கார்...

விபத்தில் உயிரிழந்த ஆட்டோ ஓட்டுநர் மதன்குமார் குடும்பத்தினருக்கு கோயில் தக்கார் வே. ஜெய்சங்கர் தனது சொந்த பணம் ரூ. 1 லட்சத்தை நிவாரண நிதியாக வழங்கி, ஆறுதல் கூறினார். 
மேலும், தக்கார் ஜெய்சங்கர் தனது சொந்த செலவில், சுற்றுலா வந்த பயணிகள் மற்றும் காயமடைந்தவர்களை திருமண மண்டபத்தில் தங்க வைத்து, உணவு வசதியும் செய்து கொடுத்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பீன்ஸ் கிலோ ரூ.200

உத்திரகாவிரி ஆற்றில் வெள்ளம்: ஒரே இரவில் நிரம்பிய தடுப்பணை

என்எம்சி தலைவா் பெயரில் போலி அழைப்புகள்!

ஜம்மு-காஷ்மீா் பயங்கரவாதத் தாக்குதல்: ஆளுநா் கண்டனம்; பாஜக போராட்டம்

பட்டாக் கத்தியுடன் சுற்றித் திரிந்த 5 போ் கைது

SCROLL FOR NEXT