தமிழகத்தில் எம்பிபிஎஸ் முதலாம் ஆண்டு வகுப்புகள் இன்று தொடங்கியது
தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். முதலாம் ஆண்டு வகுப்புகள் இன்று தொடங்கியுள்ள நிலையில், மருத்துவக் கல்வி இயக்ககம் மாணவர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
சென்னை: தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். முதலாம் ஆண்டு வகுப்புகள் இன்று தொடங்கியுள்ள நிலையில், மருத்துவக் கல்வி இயக்ககம் மாணவர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர்ந்த முதலாமாண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் இன்று தொடங்கியுள்ளன.
ரோஜா மலர் கொடுத்து வரவேற்பது, மரக்கன்றுகளை நடுதல் என பல்வேறு மருத்துவக் கல்லூரிகளில், முதலாமாண்டு மாணவர்களுக்கு விதவிதமான வரவேற்புகள் வழங்கப்பட்டன.
முதலாமாண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் இன்று தொடங்குவதை முன்னிட்டு, மாணவ, மாணவிகள் ஜீன்ஸ், டீ-ஷர்ட், லெகின்ஸ் போன்ற ஆடைகளை அணிந்து வரக் கூடாது என்றும், கல்லூரி வகுப்பறையில் செல்போன் பயன்படுத்தக் கூடாது என்றும் மருத்துவக் கல்வி இயக்ககம் அறிவுறுத்தியுள்ளது.
மேலும், முதலாமாண்டு மாணவர்களை, மூத்த மாணவர்கள் ராகிங் செய்யக் கூடாது. மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது.
ஓணம் பண்டிகையை முன்னிட்டு மாவட்ட உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கும் மாவட்டங்களில் உள்ள மருத்துவக் கல்லூரிகள் வேறொரு நாளில் தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீட் தேர்வின் அடிப்படையில் மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கையை நடத்துமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து, ஆகஸ்ட் 23ம் தேதி தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டது. 24ம் தேதி மருத்துவக் கலந்தாய்வு தொடங்கி, முதல் நாளில் சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெற்றது. ஆகஸ்ட் 30ம் தேதி வரை நடைபெற்ற இந்த கலந்தாய்வில், 23 அரசு மருத்துவக் கல்லூரிகளும், 2 அரசு பல் மருத்துவக் கல்லூரிகளும், 11 தனியார் மருத்துவக் கல்லூரிகளும், 18 தனியார் பல் மருத்துவக் கல்லூரிகளும் இடம்பெற்றன.
நீட் தேர்வுக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்து சட்டப்போராட்டம் நடத்தி, விலக்குக் கோரிய நிலையில், மத்திய அரசு நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க மறுத்துவிட்டதால், நீட் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டிய நிலைக்கு தமிழகம் தள்ளப்பட்டது. உச்ச நீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து அதிவேகத்தில் கலந்தாய்வுப் பணிகள் நடந்து இன்று வகுப்புகளும் தொடங்கிவிட்டன.
நீட் தேர்வினால் மாநிலப் பாடத்திட்டத்தில் படித்த ஏராளமான ஏழை, எளிய மாணவர்களின் எம்பிபிஎஸ் கனவு தவிடுபொடியான நிலையில், அனிதாவின் தற்கொலை தமிழகத்தில் மிகப்பெரிய அதிர்வலையையும் ஏற்படுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.