தமிழ்நாடு

அந்நியச் செலாவணி மோசடி வழக்கு: டிடிவி தினகரனின் மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்

DIN

அந்நியச் செலாவணி மோசடி வழக்கில் அதிமுக (அம்மா) அணி துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரனுக்கு எதிரான விசாரணையை மூன்று மாத காலத்துக்குள் முடிக்க வேண்டும் என்ற சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

அதிமுக (அம்மா) அணி துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், டிப்பர் இன்வெஸ்ட்மெண்ட் என்ற பெயரில் ஒரு தனியார் நிறுவனத்தை நடத்தி வந்தார். அப்போது, இந்திய ரிசர்வ் வங்கியின் அனுமதியின்றியும், முறையான வழிமுறைகளைப் பின்பற்றாமலும் ஒரு கோடிக்கு மேலான (1,04,95,313) அமெரிக்க டாலரை லண்டனில் உள்ள ஒரு வங்கிக்கு அனுப்பியதாக. தினகரன் மீது அமலாக்கத் துறை தரப்பில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இதேபோன்று, ரிசர்வ் வங்கியின் அனுமதியின்றி ஹோட்டல் கட்டுவதற்கு 36,36,000 அமெரிக்க டாலர் மற்றும் 10 ஆயிரம் பவுண்ட் முதலீடு செய்ததாக, அந்நிய செலாவணி ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ் (ஃபெரா) கீழ் தினகரன் மீது மற்றொரு வழக்கையும் அமலாக்கத் துறை பதிவு செய்தது.
இந்த இரு வழக்குகளின் விசாரணையும் சென்னை எழும்பூர் இரண்டாவது பொருளாதார குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்குகளில் கடந்த ஏப்ரல் 19-ஆம் தேதி தினகரன் மீதான குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், அந்நியச் செலாவணி மோசடி வழக்கில் தினகரனுக்கு எதிரான விசாரணையை மூன்று மாத காலத்துக்குள் முடிக்குமாறு எழும்பூர் இரண்டாவது பொருளாதார குற்றவியல் நடுவர் நீதிமன்றத்துக்கு, சென்னை உயர் நீதிமன்றம் கடந்த ஜூலை 24-ஆம் தேதி ஆணை பிறப்பித்தது.
இதற்கு எதிராக, உச்ச நீதிமன்றத்தில் டிடிவி தினகரன் தாக்கல் செய்த மனு, நீதிபதிகள் ஏ.கே. கோயல், யு.யு. லலித் அமர்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, டிடிவி தினகரன் சார்பில் ஓய்வுபெற்ற நீதிபதியும், மூத்த வழக்குரைஞருமான எஸ். நாகமுத்து ஆஜரானார்.
மனுவை படித்து பார்த்த நீதிபதிகள், "சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவால் உங்களுக்கு ஏதாவது பாதிப்பு ஏற்பட்டுள்ளதா?' என கேள்வி எழுப்பினர். அதற்கு மூத்த வழக்குரைஞர் எஸ். நாகமுத்து, " சென்னை உயர் நீதிமன்ற உத்தரவில் 14-ஆவது பத்தியில் தெரிவிக்கப்பட்டுள்ள "வழக்கை மூன்று மாதத்துக்குள் முடிக்க வேண்டும்' என்பதைத் தவிர்த்து பாதிப்பு இல்லை' என்றார்.
இதற்கு நீதிபதிகள், "வழக்கு விசாரணையை மூன்று மாதங்களுக்குள் நிறைவு செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தற்போது தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு விசாரணையை தாமதப்படுத்தும் நோக்கில் உள்ளது. இதுபோன்ற அற்பமான மனுவை தாக்கல் செய்து, நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிக்க வேண்டாம். விசாரணையை தாமதப்படுத்த முயன்றால், உங்களுக்கு ரூ. 10 லட்சம் அபராதம் நேரிடும்' என்று எச்சரித்து மனுவைத் தள்ளுபடி செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேட்புமனுவுக்கு நாளையே கடைசி: அமேதி, ரே பரேலி வேட்பாளர்கள் யார்?

வாக்கு எண்ணிக்கை மையப் பணி: தலைமைக் காவலர் விபத்தில் பலி

கல்குவாரி வெடி விபத்து: மேலும் ஒருவர் கைது

ஒடிஸாவில் ஹேமந்த் சோரனின் சகோதரி போட்டி!

சூப்பா்சோனிக் ஏவுகணை உதவியுடன் தாக்கும் டாா்பிடோ ஆயுதம் வெற்றிகரமாக பரிசோதனை

SCROLL FOR NEXT