தமிழ்நாடு

நீட் தேர்வில் 200 மதிப்பெண்கள் பெற்றும் மருத்துவப் படிப்பு கிடைக்கவில்லை: நெல்லை மாணவி பிரதீபா ஆட்சியரிடம் மனு

DIN

அரியலூர் மாணவி அனிதாவைப் போன்று பிளஸ் 2 பொதுத் தேர்வில் 1,176 மதிப்பெண் பெற்று மருத்துவப் படிப்பில் இடம் கிடைக்காத திருநெல்வேலி மாணவி ஜெ. கிறிஸ்டி பிரதீபா, அரசு நடவடிக்கை கோரி ஆட்சியரிடம் தனது தாயுடன் கண்ணீர் மல்க மனு அளித்துள்ளார்.

திருநெல்வேலி மாவட்டம், நான்குனேரி வட்டத்துக்குள்பட்ட இட்டமொழி புதூர், வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் ஜெ. கிறிஸ்டி பிரதீபா. இவரது தந்தை, ஜெகதீஸ் தினக்கூலி ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். பிரதீபாவின் தாய் விஜயகுமாரி, பீடி சுற்றி குடும்பத்தை நடத்தி வருகிறார். இவர்களுக்கு பிரதீபாவுடன் சேர்த்து 3 மகள்கள், ஒரு மகன் உள்ளனர்.

திசையின்விளையில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் 10ஆம் வகுப்பில் 500-க்கு 495 மதிப்பெண் பெற்றதால், நாமக்கல்லைச் சேர்ந்த தனியார் பள்ளி இந்த மாணவிக்கு இலவசக் கல்வி வழங்கியது. இதையடுத்து, நிகழாண்டு பிளஸ் 2 பொதுத் தேர்வில் 1,200-க்கு 1,176 மதிப்பெண்கள் பெற்றார். பாடவாரியாக பெற்ற மதிப்பெண்கள்: தமிழ்- 195, ஆங்கிலம்- 191, இயற்பியல்- 196, வேதியியல், உயிரியல், கணிதவியலில் தலா 198 மதிப்பெண் பெற்று மருத்துவப் படிப்புக்கான கட்-ஆப் மதி்பபெண் 197.50 பெற்றார்.

ஆனால், நிகழாண்டு நீட் தேர்வு அடிப்படையிலேயே மருத்துவ சேர்க்கை நடைபெறும் என அறிவித்துவிட்டதால் பிரதீபாவுக்கு மருத்துவப் படிப்பில் சேர இடம் கிடைக்கவில்லை. மேலும், நீட் தேர்வில் 200 மதிப்பெண் பெற்றார். இவருக்கு சுயநிதி கல்லூரியில் பல் மருத்துவம் பயில கலந்தாய்வு வந்தது. கூலி வேலை செய்யும் பெற்றோரால் ஆண்டுக்கு லட்சக்கணக்கில் பணம் செலுத்தி படிக்க வைக்க முடியாது என்பதால் கலந்தாய்வில் பங்கேற்கவில்லை.

அரியலூர் மாணவி அனிதா தற்கொலை சம்பவத்தைத் தொடர்ந்து நீட் தேர்வால் தமிழகத்தில் உள்ள பாதிப்பை உணர்த்தும் வகையில் அரசின் கவனத்தை ஈர்க்க தனது தாயுடன், திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு திங்கள்கிழமை வந்திருந்தார் பிரதீபா. அப்போது, செய்தியாளர்களிடம் அவர் கூறியது:

நீட் தேர்வு பயிற்சி மையத்தில் சேர ரூ.2 லட்சம் செலவிட வேண்டியுள்ளது. அவ்வளவுத் தொகை செலுத்தி படிக்க முடியாத ஏழை மாணவிகள் பலரின் மருத்துவக் கனவு கானல் நீராகிவிட்டது. வசதி படைத்தவர்கள் மட்டுமே மருத்துவம் படிக்கும் நிலை உருவாகியுள்ளது. தமிழ் வழியில் பிளஸ் 2 படித்த மாணவர்களால் நீட் தேர்வில் கேட்கப்படும் 50 சதவீத வினாக்களுக்கான விடையளிக்க முடியாது. ஏனெனில் என்சிஇஆர்டி புத்தகமானது தமிழில் இல்லை. எனவே, இது மாநில அளவிலான பிரச்னை மட்டுமல்ல தேசிய அளவிலான பிரச்னை. மத்திய, மாநில அரசுகள் தலையிட்டு என்னைப் போன்ற மாணவர்களுக்கு நீதி கிடைக்கச் செய்ய வேண்டும் என்றார்.

மாணவியின் தாய் விஜயகுமாரி கூறியது:
கூலி வேலை செய்யும் எங்கள் குடும்பத்தால் 2 குழந்தைகளுக்கு மேல் வளர்க்க முடியாது என திசையன்விளையில் உள்ள அரசு மருத்துவமனையில் குடும்பக்கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்துகொண்டேன்.

ஆனால், அறுவை சிகிச்சையில் குறை இருந்ததால் 3ஆவதாக பிரதீபாவை பெற்றெடுத்தேன். இந்த விவகாரத்தில் அரசு மருத்துவமனையின் அலட்சியத்துக்கு நிவாரணம் கோரி 20 ஆண்டுகளுக்கு மேலாகியும் விடை கிடைக்கவில்லை. இப்போது, அதே குழந்தைக்கு நீட் தேர்வு என்ற வடிவில் மருத்துவப் படிப்பு மறுக்கப்பட்டுள்ளது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராபாவில் இஸ்ரேல் நேரடித் தாக்குதல்? மக்களை இடம்பெயரக் கோரும் புதிய அறிவிப்பு!

தமிழ்நாட்டில் கோடை காலத்திலும் தடையில்லா மின் விநியோகம் -தலைமைச் செயலாளர்

பொருளின் பொருள் கவிதை

ப்ளிங்க் - சிந்திக்காமலேயே சிந்திக்கும் ஆற்றல்

பைசன் காளமாடன் படத்தின் பூஜை ஸ்டில்ஸ்

SCROLL FOR NEXT