மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியின் சில இடங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென் மேற்குப் பருவமழை தற்போது கர்நாடகாவின் உள் பகுதியில் தீவிரமடைந்துள்ளது. தமிழகத்தைப் பொருத்தவரை, வெப்பச் சலனம் காரணமாக மழை பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த மழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி கூறியது: தென் மேற்கு வங்கக்கடலில் மையம் கொண்டிருந்த மேலடுக்கு சுழற்சி தற்போது தெற்கு ஆந்திர கடலோரப் பகுதியில் நிலை கொண்டுள்ளது. இதன் காரணமாக, தமிழகம் மற்றும் புதுச்சேரியின் சில இடங்களில் அடுத்த 24 மணிநேரத்தில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். ஓரிரு இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையில் பொதுவாக வானம் மேகமூட்டமாக காணப்படும். சில இடங்களில் மாலை அல்லது இரவில் மழை பெய்யக்கூடும் என்றார்.
ஆலங்குடியில் 70 மி.மீ.....:தமிழகத்தில் வியாழக்கிழமை காலை நிலவரப்படி, புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி, திருவள்ளுர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை, திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில் தலா 70 மி.மீ மழை பெய்தது. காஞ்சிபுரத்தில் 60, காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர், கோவை மாவட்டம் சின்னக்கல்லாறு, வேலூர், காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூர், சென்னை விமானநிலையம், வேலூர் மாவட்டம் வாணியம்பாடி, திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் தலா 50, திருவண்ணாமலை மாவட்டம் போளூரில் 40 மி.மீ. மழையும் பதிவானது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.