தமிழ்நாடு

சென்னை - பழவேற்காடுக்கு நீர்வழிப் போக்குவரத்து தொடங்கப்படுமா?

எம்.சுந்தரமூா்த்தி

வடசென்னை, திருவள்ளூர் மாவட்டத்தில் போக்குவரத்து நெரிசல், சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதை தவிர்க்க சென்னையில் இருந்து பழவேற்காட்டுக்கு நீர்வழிப் போக்குவரத்தை தொடங்க வேண்டும் என சமூக நல ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சென்னை நகரம் உருவாவதற்கு முன்பே பொன்னேரி வட்டத்தில் உள்ள பழவேற்காடு பெரும் வணிக நகரமாக விளங்கி வந்துள்ளது. 15-ஆம் நூற்றாண்டில் விஜயநகர பேரரசின் ஆளுமையின் கீழ், பழவேற்காடு இருந்தபோது, நீர்வழி வணிகத்தில் முக்கிய வணிக துறைமுகமாக விளங்கியது.
டச்சுக்காரர்கள், ஆங்கிலேயர்கள், போர்த்துக்கீசியர்கள் தங்களின் நீர்வழி வணிகத்துக்கு பழவேற்காடு துறைமுகத்தை பயன்படுத்தினர். நீர் வழிப்பாதையில் ஜப்பான் நாட்டுக்கு பழவேற்காட்டில் இருந்து தங்கம் எடுத்து செல்லப்பட்டதாக வரலாற்று குறிப்புகள் உள்ளன.
இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர், ஜப்பான் நாட்டைச் சேர்ந்த இருவர், பழவேற்காட்டுக்கு வந்து, பழவேற்காடு, ஜப்பான் நாட்டுக்கு உள்ள வணிக தொடர்பு குறித்து ஆவணப் படம் ஒன்றை எடுத்துச் சென்றனர். விஜய நகர பேரரசுக்குப் பின்னர், பழவேற்காடு போர்த்துக்கீசியர்களின் துறைமுகமாக இருந்து வந்தது.
அப்போது போர்த்துக்கீசியர்களிடம் போரிட்டு வெல்ல முடியாத ஆங்கிலேயர்கள் மயிலாப்பூர் சென்றனர். அதன்பிறகு, சென்னை பாரிமுனை அருகே ஜார்ஜ் கோட்டையைக் கட்டி, கடல் வணிகத்தில் ஈடுபட்டதாக வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
ஆங்கிலேயர் ஆட்சியில் நீர்வழிப் போக்குவரத்துக்காக வங்காள விரிகுடா கடலோரம், பக்கிங்காம் கால்வாய் தமிழகத்தில் உள்ள மரக்காணத்தில் தொடங்கி, ஆந்திர மாநிலம் விஜயவாடா வரை (490 கி.மீ.) அமைக்கப்பட்டது. அப்போது இந்த கால்வாயில் நீர்வழிப்போக்குவரத்தும் இருந்துள்ளது.
தற்போது பக்கிங்காம் கால்வாயில் எண்ணூர் அருகே கொசஸ்தலை ஆறும் பழவேற்காட்டில் ஆரணி, சொர்ணமுகி, காளாங்கி மற்றும் ஆசியாவின் பெரிய ஏரிகளில் இரண்டாவது ஏரியான பழவேற்காடு ஏரியும் இணைகின்றன.
பொன்னேரி வட்டத்தில் உள்ள காட்டுப்பள்ளி பகுதியில் எண்ணூர் துறைமுகம், கடல் நீரை குடிநீராக்கும் ஆலை, கப்பல் கட்டும் தளம், வடசென்னை அனல் மின் நிலையம், வல்லூர் அனல் மின் நிலையம் உள்ளிட்டவை அமைந்துள்ளன. எண்ணூர் துறைமுகத்துக்கு வெளிநாடு மற்றும் ஒடிஸா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் நிலக்கரி, கப்பல் மூலம் கொண்டு வரப்படுகிறது. பின்னர், அங்கிருந்து சரக்கு ரயில் மற்றும் லாரிகள் மூலம் பல்வேறு பகுதிகளுக்கு கொண்டு செல்லப்படுகிறது.
எண்ணூர் துறைமுகத்துக்கு கொண்டு வரப்படும் நிலக்கரி, உணவுப் பொருள்கள் மற்றும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் கார்கள் ஆகியவை கனரக வாகனங்கள் மூலம் எடுத்து செல்லப்படுகின்றன. இதனால் வடசென்னை, எண்ணூர், மீஞ்சூர் பகுதிகளில் சுற்றுச்சூழல் மாசு மற்றும் போக்குவரத்து நெரிசல் அதிகரித்துள்ளது.
எனவே, மரக்காணத்தில் இருந்து சென்னை வழியாக அமைக்கப்பட்ட பக்கிங்காம் கால்வாயில் நீர் வழிப்பாதையை மீண்டும் தொடங்க மத்திய, மாநில அரசுகள் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள், சூற்றுச் சூழல் செயற்பாட்டாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பல ஆண்டுகளாக கிடப்பில் உள்ள பில் தொகை: மாநகராட்சி ஒப்பந்ததாரா்கள் குற்றச்சாட்டு

மேற்கு வங்க ஆளுநா் மீதான பாலியல் துன்புறுத்தல் புகாா்: சாட்சியங்களிடம் விரைவில் போலீஸாா் விசாரணை

மகளிா் விடுதிகள் இணையத்தின் வாயிலாக பதிவு மற்றும் புதுப்பிக்கப்பட வேண்டும் ஆட்சியா் அறிவுறுத்தல்

அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகத்தினா் ஆா்ப்பாட்டம்

தனியாா் பள்ளிகளில் 25% இட ஒதுக்கீடு: மறைமுகக் கட்டணம் வசூலிப்பதாகப் புகாா்

SCROLL FOR NEXT