தமிழ்நாடு

பெட்ரோல், டீசல் விலை உயர்வு மூலம் மத்திய அரசு மக்களை சுரண்டுகிறது: புதுவை முதல்வர் நாராயணசாமி

DIN

பெட்ரோல், டீசல் விலை உயர்வு மூலம் மத்திய அரசு மக்களை சுரண்டி வருகிறது என புதுவை முதல்வர் நாராயணசாமி கூறினார்.
புதுவை சட்டப்பேரவை வளாகத்தில் அவர் சனிக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியதாவது: 
மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியில் இருந்ததைவிட தற்போது பெட்ரோல், டீசல் விலை 20 சதவீதம் உயர்ந்துள்ளது. இதனால், நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டு, அத்தியாவசியப் பொருள்களின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால், மக்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர். 
எனவே, மத்திய அரசு உடனடியாக பெட்ரோல், டீசல் விலையைக் குறைத்து, மக்களை சுரண்டுவதை நிறுத்த வேண்டும்.
பண மதிப்பிழப்பு, சரக்கு - சேவை வரியால் (ஜிஎஸ்டி) பொருளாதாரம் சரிந்துள்ளது. இதை ஈடுகட்டும் வகையில், பெட்ரோல், டீசல் மீது மறைமுகமாக வரியை மத்திய அரசு உயர்த்தியுள்ளது.
எண்ணெய் நிறுவனங்கள் தினமும் விலை நிர்ணயம் செய்யும் முறையை மாற்ற வேண்டும்.
புதுவையில் விதிகளை மீறி தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்த 700-க்கும் மேற்பட்ட மாணவர்களின் சேர்க்கையை இந்திய மருத்துவ கவுன்சில் (எம்சிஐ) ரத்து செய்து உத்தரவிட்டது. இதுதொடர்பான விவகாரத்தில் மாநில அரசுக்கு எந்தவிதமான சம்பந்தமும் இல்லை. இதில் தலையிடுவதற்கான அதிகாரமும் மாநில அரசுக்கு இல்லை.
இந்த நிலையில், மாணவர்கள் வெளியேற்றபட்டதற்கு மாநில அரசுதான் காரணம் என பொறுப்பற்ற முறையில் ஆளுநர் கிரண் பேடி குற்றம்சாட்டியுள்ளார்.
எனினும், மாணவர்கள் நலன் கருதி மருத்துவக் கல்லூரிகள் நிர்வாகத்தை அழைத்துப் பேச அரசு தயாராக உள்ளது. அடுத்த வாரம் பேச்சுவார்த்தை நடைபெறும்.
தற்போது காங்கிரஸ் உள்கட்சித் தேர்தல் நடைபெற்று வருகிறது. விரைவில் ராகுல் காந்தி கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்பார். தற்போது அரசியல் சூழல் மாறி வருகிறது. வருகிற 2019-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி மீண்டும் மத்தியில் ஆட்சி அமைக்கும் என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று நீட் தோ்வு: மாணவா்களுக்கு கடும் கட்டுப்பாடுகள்

கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் கூடாது: தனியாா் பள்ளிகளுக்கு கல்வித் துறை எச்சரிக்கை

120 கோடியாக உயா்ந்த தொலைத் தொடா்பு வாடிக்கையாளா்கள்

கனடாவில் 3 இந்தியா்கள் கைது: உள்நாட்டு அரசியல் -மத்திய அமைச்சா் ஜெய்சங்கா்

பாரா பீச் வாலிபால் உலக சாம்பியன்ஷீப் போட்டிக்கு வீரா்கள் தோ்வு

SCROLL FOR NEXT