தமிழ்நாடு

மீண்டும் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தைக் கூட்டி எடப்பாடிபழனிசாமியை முதல்வராக தேர்வு செய்யட்டும்: டி.டி.வி. தினகரன்

DIN

சசிகலாவால் பதவி பெற்ற முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தனது பதவியை ராஜிநாமா செய்துவிட்டு, மீண்டும் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தைக் கூட்டி முதல்வராக தேர்வாகட்டும் என்று அதிமுக அம்மா அணி துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் கூறினார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் ஞாயிற்றுக்கிழமை அவர் கூறியது: ஓ.பன்னீர்செல்வத்தை முதல்வராக ஏற்றுக்கொண்டவர்கள், பிறகு ஏன் அவர் சரியில்லை என்று கூறி சசிகலாவை பொதுச் செயலாளராகக் கொண்டு வந்தார்கள்?
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருக்கிறது என்றால் எப்படி சசிகலாவை முதல்வராக்க முடிவு செய்தார்கள் ? துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் உட்பட அனைவரும் சசிகலா முதல்வராக வேண்டும் என அன்று வலியுறுத்தினர். ஆனால், இன்று வேறுவிதமாக பேசி வருகின்றனர்.
கடந்த 1996-இல் சிறையில் இருந்து வெளியே வந்த போது "என்னால் தானே சிறைக்குச் சென்றாய்' என்று கூறிய மறைந்த முதல்வர் ஜெயலலிதா என்னை அரசியலுக்கு அழைத்தார். 1999-இல் பெரியகுளம் தொகுதியில் வெற்றி பெறச் செய்து நாடாளுமன்ற உறுப்பினராக்கினார் ஜெயலலிதா.
நான் சென்னையிலேயே இல்லை என்று முதல்வர் பழனிசாமி கூறுகிறார். 25 ஆண்டுகளாக நான் சென்னையில்தான் இருக்கிறேன். எங்கேயும் போகவில்லை. கூவத்தூர் விடுதியில் 122 பேரை வைத்திருந்ததால்தான் ஆட்சி நிலைத்துள்ளது. அப்போது எம்.எல்.ஏ.க்களை நாங்கள் பிடித்து வைத்திருந்ததால்தான் எடப்பாடி பழனிசாமியால் முதல்வராக முடிந்தது என்றால், அவரை பதவியில் இருந்து நீக்க 19 பேரை பிடித்து வைத்திருப்பதில் தவறில்லை.
சசிகலாவால்தான் முதல்வர், அமைச்சர்களாக ஆகியிருக்கிறார்கள். இப்போது முதல்வர் பழனிசாமி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டாம். அதற்கு பதிலாக, சசிகலாவால் பதவி பெற்றவர்கள் ராஜிநாமா செய்யட்டும். திரும்பவும் எம்.எல்.ஏக்கள் கூட்டத்தைக் கூட்டி எடப்பாடி பழனிசாமியை சட்டப்பேரவைக் குழு தலைவராக (முதல்வர்) தேர்ந்தெடுக்கட்டும். சசிகலா பொதுச்செயலாளர் என தேர்தல் ஆணையத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தது ஏன்? இப்போது சசிகலாவை எதிர்ப்பது ஏன்? என்பதற்கு அவர்கள்தான் பதிலளிக்க வேண்டும் என்றார் டிடிவி தினகரன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கத்திரி வெயில்: 17 இடங்களில் சதம்: 6 நாள்கள் மழைக்கும் வாய்ப்பு

கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் 4 குற்றவாளிகளுக்கு மரண தண்டனை: ஹரியாணா நீதிமன்றம் தீா்ப்பு

வேளாண் கல்லூரியில் குரூப் 1 தோ்வுக்கான வழிகாட்டல்

இணையவழி பயங்கரவாத ஆள்சோ்ப்பு சா்வதேச பாதுகாப்புக்கு முக்கிய சவால்: சிபிஐ இயக்குநா்

மும்பை சிட்டி எஃப்சி சாம்பியன்

SCROLL FOR NEXT