தமிழ்நாடு

பண மதிப்பிழப்பின் பயன்கள் வரும் நாள்களில்தான் தெரிய வரும்: பத்திரிகையாளர் எஸ். குருமூர்த்தி

DIN

உயர் மதிப்பு ரூபாய் நோட்டுகளை செல்லாது என அறிவித்ததன் பயன்கள் இனி வரும் நாள்களில்தான் தெரிய வரும். இந்த நடவடிக்கை இந்திய பொருளாதாரத்தின் முதலீடாகவே அமையும் என்று பொருளாதார நிபுணரும், பத்திரிகையாளருமான எஸ். குருமூர்த்தி கூறினார்.
சென்னை சர்வதேச மையம் சார்பில், 'உயர் பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் பங்கு மற்றும் தாக்கம்' என்ற தலைப்பில் கருத்தரங்கு, சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள பொருளாதாரப் பள்ளியில் வெள்ளிக்கிழமை நடந்தது. இதில், பொருளாதார நிபுணரும்,, பத்திரிகையாளருமான எஸ். குருமூர்த்தி பேசியது: 
உயர் பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் எல்லா தரப்பினரும் பாதிக்கப்பட்டனர். அதேசமயம், இது சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட சரியான நடவடிக்கையாகும். இதன் மூலம் மிகப்பெரிய அளவில் வைப்பு பணம் வங்கிகளுக்கு வந்துள்ளது. வரி அடிப்படையில் வருமானம் 20 சதவீதம் அதிகரித்துள்ளது.
முன்கூட்டியே வரி செலுத்துவது 2017-18 -ஆம் ஆண்டில் 42 சதவீதம் அதிகரித்துள்ளது. முன்பு, முதலீடு செய்ய வலியுறுத்தப்பட்டது. ஆனால், தற்போது தானாகவே முதலீடு செய்யத் தொடங்கியுள்ளனர். பரஸ்பர நிதி முதலீடு உள்ளிட்ட பல்வேறு நிதி சார்ந்த திட்டங்களில் முதலீடு 10.5 சதவீதத்திலிருந்து 11.8 சதவீதமாக அதிகரித்துள்ளது. 
முத்ரா வங்கி திட்டம் ஆரம்பிக்கப்பட்ட பிறகுதான் பண மதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டது. முத்ரா வங்கித் திட்டத்தை ரிசர்வ் வங்கி நிறுத்திவிட்டது. இந்தத் தருணத்தில் பண மதிப்பிழப்பு நடவடிக்கையும் சேர்ந்து கொண்டதால் சிறிய அளவில் தொழில் செய்பவர்களுக்கு பணம் செல்லவில்லை.
தானாக முன்வந்து வருமானத்தை தெரிவிக்கும் திட்டம், உயர் பண மதிப்பிழப்பு நடவடிக்கை ஆகியவற்றை தனித்தனியாக செய்துவிட்டார்கள். ஒன்றாக செய்திருந்தால், இன்னும் நன்றாக இருந்திருக்கும். 
உயர் பண மதிப்பிழப்பு நடவடிக்கை கடினமானதுதான். இதனை இப்போது செய்யவில்லையெனில், 2020 - ஆம் ஆண்டில் உயர் மதிப்பு ரூபாய் 30 லட்சம் கோடியாக உயர்ந்திருக்கும். ரூ.500, ரூ.1,000 நோட்டுகளில் கருப்புப் பணம் முக்கிய தொகையாக இருந்தது. கணக்கில் இல்லாத பணம் அதிகமாக புழங்கியது. அதை வங்கி முறையில் கொண்டு வர இந்த நடவடிக்கை ஒரு பெரிய முயற்சியாக அமைந்தது. பண மதிப்பிழப்பு நடவடிக்கையை எதிர்கால முதலீடாகவே பார்க்கிறேன். இந்த நடவடிக்கை இந்தியப் பொருளாதாரத்தின் முதலீடாகவே அமையும். 
உள்நாட்டு பொருளாதாரம் நன்றாக உள்ளது. மக்களின் சேமிப்பு அதிகரித்துள்ளது. பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் பலன்கள் இனிமேல்தான் தெரிய வரும். மோசமான விளைவுகளை கடந்துவிட்டோம். இருப்பினும், தற்போதுள்ள பொருளாதார அழுத்தம் நீங்க, வாராக் கடன் விதிமுறைகளை மாற்றியமைத்து கடன் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர்.
கருத்தரங்கில், பொருளாதார நிபுணர் வி. ஆனந்த நாகேஸ்வரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கிறிஸ்து அரசா் ஆலயத்தில் பங்குத் திருவிழா நிறைவு

திருவாரூா்-காரைக்குடி பயணிகள் ரயில் தினமும் இயக்கம்

டாஸ்மாக் கடை ஊழியா் மீது தாக்குதல்

மேம்பால தடுப்பின் மீது அரசுப் பேருந்து மோதி 5 போ் காயம்

வணிகா் தின கொடியேற்று விழா

SCROLL FOR NEXT