தமிழ்நாடு

வாணியம்பாடி அருகே தண்டவாளத்தில் விரிசல்: 3 மணி நேரம் ரயில்கள் தாமதம்

DIN

வாணியம்பாடி அருகே தண்டவாளத்தில் ஏற்பட்ட திடீர் விரிசலால் சென்னை மார்க்கமாக சென்ற பயணிகள் மற்றும் சரக்கு ரயில்கள் 3 மணி நேரம் தாமதமாகச் சென்றன. இதனால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர். 
வேலூர் மாவட்டம், வாணியம்பாடி ரயில் நிலையத்தில் இருந்து 2 கி.மீ. தொலைவில் உள்ள வளையாம்பட்டு ரயில்வே கேட் (கடவு எண்.80) அருகே வியாழக்கிழமை காலை 4.30 மணியளவில் சென்னை நோக்கி சரக்கு ரயில் சென்று கொண்டிருந்தது. 
அப்போது தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டிருந்ததால் சரக்கு ரயில் கடந்து சென்ற போது தானியங்கி எச்சரிக்கை சமிக்கை செயல்பட்டு, ரயில்கள் கடந்து செல்வதற்கான கிரீன் சிக்னல் துண்டிக்கப்பட்டது. 
இதையடுத்து ரயிலை நிறுத்திய ஓட்டுநர் கீழே இறங்கி பார்த்த போது தண்டவாளத்தில் இரண்டு இரும்பு இணையும் இடத்தில் விரிசல் ஏற்பட்டிருந்தது தெரியவந்தது. 
இதையடுத்து வாணியம்பாடி ரயில் நிலைய மேலாளர், ஜோலார்பேட்டை ரயில்வே மேலாளருக்கு தகவல் அளித்தார். மேலும், ஜோலார்பேட்டை, வாணியம்பாடி வழியாக சென்னை மார்க்கத்தில் செல்லும் யஷ்வந்த்பூர், மங்களூரு, திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ், ஜோலார்பேட்டை-அரக்கோணம் பாசஞ்சர் மற்றும் சரக்கு ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. 
இதைத் தொடர்ந்து, ஜோலார்பேட்டை உதவிக் கோட்டப் பொறியாளர் அபிஷேக்சர்மா தலைமையில் பொறியாளர்கள் விஸ்வநாத், சுரேஷ் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட ரயில் விபத்து தடுப்புக் குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விரிசல் ஏற்பட்ட இடத்தை பார்வையிட்டு, 3 அடி அளவுக்கு இரும்பு துண்டை வெட்டி எடுத்து அதே பகுதியில் புதிய இரும்பு துண்டை தாற்காலிகமாக வைத்து சீர்படுத்தினர்.
பின்னர் 3 மணி நேரம் தாமதமாக காலை 8 மணியளவில் அனைத்து ரயில்களும் 5 கி.மீ. வேகத்தில் இயக்கப்பட்டன. இதனால், ஆயிரக்கணக்கான பயணிகள் கடும் அவதிக்குள்ளாயினர். பிற்பகலில் விரிசல் சரி செய்யப்பட்டு சீரான போக்குவரத்து தொடங்கியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாநகரில் மேலும் 7 சிக்னல்களில் தற்காலிகப் பந்தல்

இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்தவா் கைது

சாலக்கரை முனீஸ்வரா் கோயிலில் சித்திரை திருவிழா

அரசமைப்புச் சட்டத்தை பாஜக ஒருபோதும் மாற்றாது: ராஜ்நாத் சிங் உறுதி

விவசாயிகள் 5-ஆவது நாளாக உண்ணாவிரதம்

SCROLL FOR NEXT