தமிழ்நாடு

அனைவரும் ரத்த தானம் செய்ய முன்வருவீர்: முதல்வர் பழனிசாமி வேண்டுகோள்

DIN

தன்னார்வ ரத்த தானத்தில் தமிழகம் 100 சதவீத இலக்கை எய்திட மக்கள் அனைவரும் பெருமளவில் ரத்த தானம் செய்ய முன்வர வேண்டுமென முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தேசிய தன்னார்வ ரத்த தான தினத்தை ஒட்டி, அவர் சனிக்கிழமை வெளியிட்ட செய்தி:-
தமிழகத்தில் நடத்தப்படும் ரத்த தான முகாம்களில் கல்லூரி மாணவ-மாணவியர்கள், பொதுமக்கள் அதிகளவில் பங்கேற்க பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. தன்னார்வ ரத்த தானத்தை ஊக்குவிக்க ரத்தக் கொடையாளர்கள், ரத்த தான முகாம் அமைப்பாளர்கள் மற்றும் அரசு ரத்த வங்கி ஊழியர்களுக்கு தமிழக அரசால் பாராட்டுச் சான்றிதழ்களும், பதக்கங்களும் வழங்கப்பட்டு வருகின்றன.
ஒவ்வொருவரும் தானமாக வழங்கும் ஒரு அலகு ரத்தம் நான்கு ரத்தக் கூறுகளாகப் பிரித்தெடுக்கப்பட்டு, நான்கு உயிர்களைக் காப்பாற்ற உதவுகிறது. தமிழகத்தில் மட்டும்தான் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் அங்கு சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு இவ்வாறு சேகரிக்கப்பட்ட ரத்தம் இலவசமாக அளிக்கப்படுகிறது.
தமிழகத்தில் கடந்த ஆண்டு அரசு மற்றும் தனியார் ரத்த வங்கிகள் மூலம் 8 லட்சத்து 89 ஆயிரத்து 849 அலகுகள் ரத்தம் சேகரிக்கப்பட்டுள்ளன. அரசு ரத்த வங்கிகளால் கடந்த ஆண்டு 4 ஆயிரத்து 90 ரத்த தான முகாம்கள் நடத்தப்பட்டு, 3 லட்சத்து 49 ஆயிரத்து 566 அலகுகள் ரத்தம் சேகரிக்கப்பட்டுள்ளது. இவற்றில் 99 சதவீதம் தன்னார்வ ரத்த கொடையாளர்கள் மூலமாகப் பெறப்பட்டுள்ளது.
தன்னார்வ ரத்தக் கொடையாளர்கள் மூலம் ரத்தத்தைச் சேகரிப்பதில் இந்தியாவில் தமிழகம் முன்னோடி மாநிலமாகத் திகழ்கிறது.
எனவே, நடப்பாண்டில் தன்னார்வ ரத்த தானத்தில் தமிழகம் 100 சதவீதம் இலக்கை எட்ட மக்கள் அனைவரும் பெருமளவில் ரத்தாதனம் செய்ய முன்வர வேண்டும் என்று தனது செய்தியில் முதல்வர் பழனிசாமி கேட்டுக் கொண்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாளை.யில் கால்வாய் கரைகள் சீரமைப்புப் பணி: எம்எல்ஏ ஆய்வு

தம்பதி படுகொலை: வடமாநில இளைஞர் கைது

குமரியில் வெயிலில் பணிபுரியும் போலீஸாருக்கு பழச்சாறு

சாலையோரத்தில் வியாபாரம் செய்ய அனுமதிக்க வலியுறுத்தல்

தமிழகத்தில் திமுகவுக்கு மாற்று பாஜகதான்: ஹெச்.ராஜா

SCROLL FOR NEXT