முகப்பு
தமிழ்நாடு

உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான புகார்கள் மீது உடனடியாகத் தீர்வு காண வேண்டும்: மாநிலத் தேர்தல் ஆணையர் அறிவுறுத்தல்

உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாகப் பெறப்படும் புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு மாநிலத் தேர்தல் ஆணையர் எம்.மாலிக் பெரோஸ்கான் அறிவுறுத்தியுள்ளார்.

Updated On : 29 ஜனவரி, 2024 at 4:41 PM
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் பேசுகிறார் மாநிலத் தேர்தல் ஆணையர் மாலிக் பெரோஸ்கான். உடன், ஆட்சியர் த.ந.ஹரிஹரன் உள்ளிட்டோர்.
பகிர்:

உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாகப் பெறப்படும் புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு மாநிலத் தேர்தல் ஆணையர் எம்.மாலிக் பெரோஸ்கான் அறிவுறுத்தியுள்ளார்.
கோவை மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகள் குறித்து மாநிலத் தேர்தல் ஆணையர் மாலிக் பெரோஸ்கான் தலைமையில் தேர்தல் நடத்தும் அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு ஆட்சியர் த.ந.ஹரிஹரன் முன்னிலை வகித்தார்.
இக்கூட்டத்தில் மாலிக் பெரோஸ்கான் பேசியதாவது:
2016-இல் நடைபெறவிருந்த உள்ளாட்சித் தேர்தலையொட்டி, போட்டியிட விண்ணப்பித்த வேட்பாளர்களிடம் இருந்து வசூல் செய்யப்பட்ட வைப்புத் தொகையை உடனடியாக சம்பந்தப்பட்டவர்களிடம் வழங்க வேண்டும். மேலும், தேர்தல் நடைபெறும் வாக்குச் சாவடிகளில் சீரமைப்புப் பணிகள் செய்ய வேண்டும்.
உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாகப் பெறப்படும் புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து தீர்வு காண வேண்டும் என்றார்.
இதைத் தொடர்ந்து, கோவை மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தலுக்காகப் பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ஆர்.எஸ்.புரம் அம்மணி அம்மாள் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி, பள்ளப்பாளையம் பேரூராட்சி சமுதாயக் கூடம், மதுக்கரை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள வாக்குச் சீட்டுகளை மாநில தேர்தல் ஆணையர் பார்வையிட்டார்.
இதில், கோவை மாநகராட்சி ஆணையர் டாக்டர் விஜயகார்த்திகேயன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மூர்த்தி, மாநகர காவல் துணை ஆணையர் லட்சுமி, மாவட்ட வருவாய் அலுவலர் துரை.ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.