ஆவின் பால் கலப்படம்: வழக்கிலிருந்து மூவர் விடுவிப்பு
ஆவின் பால் கலப்பட வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட வைத்தியநாதன், அவரது மனைவி ரேவதி மற்றும் அப்துல் ரஹீம் ஆகிய மூன்று பேரை வழக்கிலிருந்து உயர் நீதிமன்றம் விடுவித்துள்ளது.
ஆவின் பால் கலப்பட வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட வைத்தியநாதன், அவரது மனைவி ரேவதி மற்றும் அப்துல் ரஹீம் ஆகிய மூன்று பேரை வழக்கிலிருந்து உயர் நீதிமன்றம் விடுவித்துள்ளது.
சென்னையில் உள்ள ஆவின் நிறுவனத்துக்கு திருவண்ணாமலை மாவட்டத்திலிருந்து லாரிகளில் கொண்டு வரப்படும் பாலில் தண்ணீர் கலந்து கலப்படம் செய்வதாக, கடந்த 2014-ஆம் ஆண்டு விழுப்புரம் மாவட்டம் வெள்ளிமேடுபட்டி போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கை விசாரித்த சிபிசிஐடி போலீஸார் ஆவின் பாலில் தண்ணீர் கலந்ததாக லாரி உரிமையாளரான வைத்தியநாதன் உள்ளிட்ட 23 பேர் மீது வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கில் வைத்தியநாதன் உள்ளிட்டோர் மீது விழுப்புரம் மாவட்ட தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கிலிருந்து விடுவிக்கக் கோரி வைத்தியநாதன் அவரது மனைவி ரேவதி மற்றும் அப்துல்ரஹீம் ஆகியோர் தாக்கல் செய்த மனுவை விழுப்புரம் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்த உத்தரவை எதிர்த்து 3 பேரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். வழக்கின் பிரதான மனு நீதிபதி சி.டி.செல்வம் முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட வைத்தியநாதன் அவரது மனைவி ரேவதி மற்றும் அப்துல் ரஹீம் ஆகியோரை வழக்கில் இருந்து விடுவித்து உத்தரவிட்டார்.
மேலும், ஆவின் பாலில் கலப்படம் நடந்தது தொடர்பான ஆதாரங்களை போலீஸார் முறையாக தாக்கல் செய்யவில்லை. இந்த வழக்கை விசாரித்த கீழமை நீதிமன்றம் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட முக்கியமான சிலரை விடுவித்துள்ளது. எனவே, வழக்கை தொடர்ந்து நடத்துவது நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிக்கும் செயலாகும். எனவே, வழக்கிலிருந்து மனுதாரர்களை விடுவிப்பதாக தனது உத்தரவில் நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.