முகப்பு
தமிழ்நாடு

கமல், ரம்யா கிருஷ்ணன் பங்களாக்களுக்கு மின் இணைப்பைத் துண்டிக்கும் உத்தரவு நிறுத்திவைப்பு

நடிகர் கமல்ஹாசன், நடிகை ரம்யா கிருஷ்ணன் ஆகியோரது பங்களாக்கள் உள்பட 138 பங்களாக்களுக்கு வழங்கப்பட்ட மின் இணைப்பை துண்டிக்க வேண்டும் என்ற உத்தரவை சென்னை

Updated On : 12 ஏப்ரல், 2018 at 12:31 PM
பகிர்:

நடிகர் கமல்ஹாசன், நடிகை ரம்யா கிருஷ்ணன் ஆகியோரது பங்களாக்கள் உள்பட 138 பங்களாக்களுக்கு வழங்கப்பட்ட மின் இணைப்பை துண்டிக்க வேண்டும் என்ற உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது. 

இதுதொடர்பாக, ரங்கநாதன் உள்பட பலர் கடந்த 2001 மற்றும் 2002 -ஆம் ஆண்டுகளில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அதில், ' சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள உத்தண்டியில், பங்களா கட்டுவதற்கு சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் ஒப்புதல் அளிக்க மறுக்கிறது. ஆனால், உத்தண்டி, சோழிங்கநல்லூர், ஈஞ்சம்பாக்கம் உள்ளிட்ட கடலோரப் பகுதிககளில் முக்கிய பிரமுகர்கள் பலர் விதிகளை மீறியும், கடலோர ஒழுங்குமுறை விதிகளுக்கு எதிராகவும் வீடுகளை கட்டியுள்ளனர்' என்று கூறியிருந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எம்.வேணுகோபால், நீதிபதி எஸ்.வைத்தியநாதன் ஆகியோர், இதுகுறித்து ஆய்வறிக்கை தாக்கல் செய்ய வழக்குரைஞர் டி.மோகன் என்பவரை நியமித்தனர். அதன்படி அவர் அங்கு ஆய்வுகளை மேற்கொண்டு அறிக்கை தாக்கல் செய்தார். அதில் , '138 பங்களாக்கள் விதிகளை மீறி கட்டப்பட்டுள்ளன. இவற்றில் நடிகர் கமல்ஹாசன், நடிகை ரம்யா கிருஷ்ணன் ஆகியோரது பங்களாக்களும் இடம் பெற்றுள்ளன' எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

Advertisement

இதையடுத்து விதிகளை மீறி கட்டப்பட்டுள்ள பங்களாக்களுக்கு வழங்கப்பட்ட மின் இணைப்பைத் துண்டிக்கவும், 138 பேருக்கு நோட்டீஸ் அனுப்பவும் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், பி.ராஜமாணிக்கம் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது 138 பேர் சார்பில் வழக்குரைஞர்கள் ஆஜராகினர். 

வழக்கை விசாரித்த நீதிபதிகள், 'பங்களாக்கள் விதிகளின்படி கட்டப்பட்டுள்ளதா, விதிகளை மீறி கட்டப்பட்டுள்ளதா என்பது குறித்து புகைப்படத்துடன்கூடிய கூடுதல் மனுக்களை தனித்தனியாக தாக்கல் செய்வதாக 138 பேர் சார்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த வழக்கு வரும் ஜூன் 21 -ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது. அதுவரை, இந்த பங்களாக்களுக்கு மின் இணைப்பைத் துண்டிப்பது தொடர்பாக ஏற்கெனவே பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளை நிறுத்தி வைக்கப்படுகிறது' என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.