முகப்பு
தமிழ்நாடு

கோகுல்ராஜ் கொலை வழக்கு: யுவராஜிடம் விசாரணை ஆவண நகல்கள் அளிப்பு

கோகுல்ராஜ் கொலை வழக்கில் போலீஸாரின் விசாரணை ஆவண நகல்கள் உயர் நீதிமன்ற உத்தரவின்படி யுவராஜிடம் நாமக்கல் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் திங்கள்கிழமை வழங்கியது.

Updated On : 10 ஏப்ரல், 2018 at 1:32 AM
பகிர்:

கோகுல்ராஜ் கொலை வழக்கில் போலீஸாரின் விசாரணை ஆவண நகல்கள் உயர் நீதிமன்ற உத்தரவின்படி யுவராஜிடம் நாமக்கல் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் திங்கள்கிழமை வழங்கியது.
சேலம் மாவட்டம், ஓமலூரைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரியான கோகுல்ராஜ், கடந்த 2015-ஆம் ஆண்டு ஜூன் 23-ஆம் தேதி நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் அருகே பெரிய தொட்டிபாளையம் என்ற இடத்தில் ரயில் பாதையில் சடலமாக மீட்கப்பட்டார். வேறு சாதியைச் சேர்ந்த பெண்ணை காதலித்ததால், கோகுல்ராஜ் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார். 
இந்த வழக்கில் குற்றவாளியாக கருதப்படும் தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை அமைப்பின் நிறுவனர் யுவராஜ் தலைமறைவானார். இதற்கிடையே, இந்த வழக்கை விசாரித்து வந்த திருச்செங்கோடு காவல் துணைக் கண்காணிப்பாளர் விஷ்ணுபிரியா அதே ஆண்டு செப்டம்பர் 18-ஆம் தேதி திடீரென தற்கொலை செய்து கொண்டார். அப்போது யுவராஜ் வெளியிட்ட கட்செவி அஞ்சல் ஒலி தொகுப்பு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில், 2015-ஆம் ஆண்டு அக்டோபர் 11-இல் யுவராஜ் சரணடைந்தார்.
இதையடுத்து, கொலை வழக்குப் பிரிவின்கீழ் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்ட யுவராஜை, சென்னை உயர் நீதிமன்றம் பிணையில் விடுவித்து கடந்த 2016, மே 25-ஆம் தேதி உத்தரவு பிறப்பித்தது. யுவராஜுக்கு பிணை வழங்கிய உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து, தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் யுவராஜின் பிணையை ரத்து செய்து அக்டோபர் மாதம் உத்தரவிட்டது. இதையடுத்து, யுவராஜை சிபிசிஐடி போலீஸார் சென்னையில் மீண்டும் கைது செய்து, வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
அதிரடி உத்தரவு: பிணை ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து யுவராஜ் சார்பில், உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு மீது உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அதிரடி உத்தரவு பிறப்பித்தனர். அதில், யுவராஜுக்கு எந்த நீதிமன்றமும் பிணை வழங்கக் கூடாது என்று உத்தரவிட்டதோடு, கோகுல்ராஜ் கொலை வழக்கை 18 மாதங்களில் விசாரித்து தீர்ப்பளிக்க வேண்டும் என்று நாமக்கல் மாவட்ட முதன்மை நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டனர்.
இந்த நிலையில், கோகுல்ராஜ் கொலை வழக்கு சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றப்படுவதற்கு முன்பு ரயில்வே போலீஸாரும், திருச்செங்கோடு டி.எஸ்.பி.யாக இருந்த விஷ்ணுபிரியாவும் நடத்திய விசாரணை ஆவண நகல்களை வழங்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் இந்த வழக்கில் பிணையில் வெளிவந்த செல்வக்குமார் என்பவர் அண்மையில் மனு தாக்கல் செய்தார். இதையடுத்து, இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவருக்கும் காவல் துறை விசாரணை தொடர்பான ஆவணங்களை அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதைத் தொடர்ந்து, சுமார் 250 பக்கம் கொண்ட இந்த ஆவணங்கள் திங்கள்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட யுவராஜிடம் அளிக்கப்பட்டன. இந்த ஆவணத்தை அவர் கையெழுத்திட்டு பெற்றுக் கொண்டார். இதையடுத்து, நீதிமன்றக் காவலை செவ்வாய்க்கிழமை வரை நீட்டித்து, மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி கே.எச். இளவழகன் உத்தரவிட்டார். பின்பு யுவராஜ் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் திருச்சி மத்திய சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.