முகப்பு
தமிழ்நாடு

மெரீனா கடற்கரை கட்டுப்பாடுகளை நீக்க உயர் நீதிமன்றத்தில் முறையீடு

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதை வலியுறுத்தி மெரீனா கடற்கரையில் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபடுவதைத் தடுக்கும் வகையில் மெரீனா கடற்கரையில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளைத்

Updated On : 10 ஏப்ரல், 2018 at 2:23 AM
பகிர்:

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதை வலியுறுத்தி மெரீனா கடற்கரையில் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபடுவதைத் தடுக்கும் வகையில் மெரீனா கடற்கரையில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளைத் தளர்த்தக் கோரி உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி இந்திராபானர்ஜி மற்றும் நீதிபதி அப்துல்குத்தூஸ் அடங்கிய அமர்வு திங்கள்கிழமை வழக்குகளை விசாரிக்கத் தொடங்கியது.
அப்போது ஆஜரான வழக்குரைஞர் மயிலை சத்யா, தமிழகம் முழுவதும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் ஜல்லிக்கட்டுப் போராட்டத்துக்கு திரண்டதைப் போல் இந்த போராட்டத்துக்காக இளைஞர்கள் மெரீனா கடற்கரையில் திரள்வதைத் தடுக்கும் வகையில் போலீஸார் மெரீனா கடற்கரையின் பல்வேறு இணைப்புச் சாலைகளை அடைத்து வைத்துள்ளனர். இதனால் பொதுமக்கள் கடற்கரைக்குச் செல்ல முடியாமல் அவதிக்குள்ளாகி வருகின்றனர். கடற்கரையில் நடைப் பயிற்சிக்கு வருபவர்கள் சாலையின் நடுவழியிலேயே வாகனங்களை நிறுத்திச் செல்கின்றனர். இதனால் அந்தப் பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும் கோடைக் காலங்களில் செலவில்லாத பொழுதுபோக்கு சுற்றுலா தலமாக மெரீனா விளங்குகிறது.
போராட்டத்தைக் காரணம் கூறி மெரீனாவுக்கு வரும் பொதுமக்களைத் தடை செய்வது ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே, மெரீனா கடற்கரைக்குச் செல்லும் பொதுமக்களை தடுக்கக் கூடாது, இணைப்புச் சாலைகளை அடைக்கக் கூடாது எனப் போலீஸாருக்கு உத்தரவிட வேண்டும் என முறையீடு செய்தார். இதைத் தொடர்ந்து, இது தொடர்பாக மனு தாக்கல் செய்தால் விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.