தமிழ்நாடு

சீசன் தொடங்கியது: உதகையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

DIN

உதகையில் கோடை சீசன் தொடங்கியுள்ள நிலையில், தமிழ்ப் புத்தாண்டு விடுமுறையால் சுற்றுலாப் பயணிகளின் வருகை உதகையில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் அதிகரித்தது.
ஆண்டுதோறும் ஏப்ரல் 14-ஆம் தேதி உதகையில் குதிரைப் பந்தயம் தொடங்கும் தினத்திலிருந்தே கோடை சீசன் தொடங்கும். ஆனால், நடப்பாண்டில் உதகையில் குதிரைப் பந்தயங்கள் மே மாதம் 12-ஆம் தேதிதான் தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் தற்போது உதகையில் சுற்றுலாப் பயணிகளின் வருகை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. வார விடுமுறை நாள்களில் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்து வருகிறது.
காவிரிப் பிரச்னை காரணமாக கர்நாடக மாநிலத்திலிருந்து உதகைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை குறையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கர்நாடக மாநிலத்திலிருந்துதான் அதிக அளவிலான சுற்றுலாப் பயணிகள் உதகை வருகின்றனர். வழக்கமாக கேரள மாநிலத்திலிருந்து உதகைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை நடப்பு சீசனில் குறைவாகவே உள்ளது.
உதகையைப் பொருத்த வரை, அரசினர் தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, தொட்டபெட்டா மலைச்சிகரம், மரவியல் பூங்கா, படகு இல்லம் ஆகியவற்றோடு புதிதாக திறக்கப்பட்டுள்ள கர்நாடகப் பூங்காவிலும் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அதிக அளவில் இருந்தது.
உதகை- கூடலூர் சாலையிலுள்ள வனத் துறை சுற்றுலா மையங்களிலும் பைக்காரா அருவி, படகு இல்லத்திலும் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அதிகரித்து வருகிறது. இவற்றோடு முதுமலை புலிகள் காப்பகத்துக்கும் தினந்தோறும் நூற்றுக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் சென்று வருகின்றனர்.
உதகை அரசினர் தாவரவியல் பூங்காவுக்கு சனிக்கிழமை சுமார் 18,000 சுற்றுலாப் பயணிகளும், ஞாயிற்றுக்கிழமை 19,000 சுற்றுலாப் பயணிகளும் வருகை தந்துள்ளனர். 
அதேபோல உதகை அரசினர் ரோஜா பூங்காவில் சனிக்கிழமை சுமார் 7,000 பேரும், ஞாயிற்றுக்கிழமை சுமார் 8,000 பேரும் வருகை தந்துள்ளனர். மேலும், படகு இல்லத்துக்கு இரு நாள்களிலும் சராசரியாக 8,000 பேர் வருகை தந்துள்ளனர்.
22-இல் நாய் கண்காட்சி:
உதகை கோடை சீசனில் முதல் நிகழ்வாக, ஏப்ரல் 22-ஆம் தேதி குன்னூரில் நாய் கண்காட்சி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நாய் கண்காட்சியில் ஜெர்மன் ஷெப்பர்டு இனத்திற்கு தனியாகவும், பிற இன நாய்களுக்குத் தனியாகவும் நாய் கண்காட்சி நடத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிகரிக்கும் தொண்டை வலி, இருமலுடன் காய்ச்சல்: சீசன் நோயாக மாறியதா கரோனா?

பாலியல் புகாரில் சிக்கியவர்கள் மீது நடவடிக்கை: எச்டி குமாரசாமி உறுதி

அஜித் படத்தில் சிம்ரன், மீனா?

மரத்தில் கார் மோதி விபத்து: தாயுடன் மகன் பலி

கல்பனா சோரன் வேட்புமனுத் தாக்கல்!

SCROLL FOR NEXT