முகப்பு
தமிழ்நாடு

ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது அமைச்சர்கள் பார்த்ததாக கூறவில்லை: ராமமோகன ராவ்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது, அவரை மூத்த அமைச்சர்கள் பார்த்ததாக தான் கூறவில்லையென்றும்,

Updated On : 19 ஏப்ரல் 2018, 1:43 am IST
பகிர்:

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது, அவரை மூத்த அமைச்சர்கள் பார்த்ததாக தான் கூறவில்லையென்றும், யாருக்கும் அஞ்சி தமது கருத்தை மாற்றிக் கொள்ளவில்லை என்றும் முன்னாள் தலைமைச் செயலர் ராமமோகனராவ் புதன்கிழமை தெரிவித்தார்.
ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் தனிநபர் விசாரணை ஆணையத்தை தமிழக அரசு அமைத்துள்ளது. இந்த ஆணையத்தில் சசிகலாவின் உறவினர்கள், முன்னாள் தலைமைச் செயலர்கள், காவல்துறை அதிகாரிகள், அரசு மருத்துவர்கள், ஜெயலலிதாவின் உதவியாளர்கள், அவரது வீட்டில் பணிபுரிந்தவர்கள் என இதுவரை 25 -க்கும் மேற்பட்டோர் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளனர்.
அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து விசாரணை ஆணையத்தில் சசிகலா அண்மையில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தார். இதைத் தொடர்ந்து, ஆணையத்தில் சாட்சியம் அளித்தவர்கள், சிகிச்சை அளித்த மருத்துவர்களிடம் குறுக்கு விசாரணை செய்ய சசிகலா தரப்பு வழக்குரைஞர்களுக்கு ஆணையம் அனுமதி அளித்தது. அதன்படி, கடந்த வாரம் முன்னாள் தலைமைச் செயலர் ராமமோகனராவிடம் குறுக்கு விசாரணை நடத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து, வெளியே வந்த அவர், ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது, மூத்த அமைச்சர்கள் அவரைப் பார்த்தார்கள் என்று கூறியதாக பத்திரிகைகளில் செய்தி வெளியானது.
தாமாக முன் வந்து விளக்கம்: இந்நிலையில், அழைப்பாணை ஏதும் அனுப்பப்படாத நிலையில் சென்னை எழிலகத்தில் உள்ள விசாரணை ஆணையத்தில் ராமமோகனராவ் புதன்கிழமை திடீரென ஆஜரானார். அவருக்கு சம்மன் எதுவுமே அனுப்பப்படாத நிலையில், இன்று திடீரென அங்கு வந்த ராமமோகனராவ், தாம் ஏற்கெனவே அளித்த பதில்களுக்கு கூடுதல் விளக்கம் அளித்ததாகத் தெரிகிறது.
இதையடுத்து, செய்தியாளர்களிடம் அவர் கூறியது: ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் இருந்தபோது, அவரை மூத்த அமைச்சர்கள் பார்த்ததாக நான் கூறவில்லை. ஆனால், ஜெயலலிதாவை மூத்த அமைச்சர்கள் பார்த்தாக நான் கூறினேன் என பத்திரிகைகளில் செய்தி வெளியாகி உள்ளது. இதுகுறித்து விளக்கம் அளிக்கவே தற்போது வந்துள்ளேன். விசாரணை ஆணையத்தில் நான் இதுவரை கொடுத்துள்ள இரண்டு அறிக்கைகளிலும் மூத்த அமைச்சர்கள் பார்த்ததாக நான் தெரிவிக்கவில்லை. யாருக்கும் அஞ்சி எனது கருத்தை மாற்றிக் கொள்ளவில்லை என்றார் ராம்மோகன ராவ்.
இதைத் தொடர்ந்து, செய்தியாளர்களைச் சந்தித்த சசிகலா தரப்பு வழக்குரைஞர் ராஜ்குமார் பாண்டியன் கூறியது: ராமமோகனராவிடம் நடத்தப்பட்ட குறுக்கு விசாரணையின்போது, தன் நினைவுப்படி, ஜெயலலிதாவை மருத்துவமனையில் ஓ.பன்னீர்செல்வம், மூத்த அமைச்சர்கள் பார்த்தாகத் தெரிவித்தார். அது சாட்சியமாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது, ஏன் மாற்றிக் கூறுகிறார் என்று தெரியவில்லை என்றார் வழக்குரைஞர் ராஜ்குமார் பாண்டியன்.
முன்னதாக, ஜெயலலிதாவின் தனி உதவியாளர் பூங்குன்றன் விசாரணை ஆணையத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தார். 
அவரிடம் குறுக்கு விசாரணை நடைபெறவில்லை.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.