தமிழ்நாடு

ஜெயலலிதா வாரிசு விவகாரம்: ரத்த உயிரி மாதிரிகள் குறித்து இன்று பதிலளிக்க உத்தரவு

தினமணி

மறைந்த முதல்வர் ஜெயலலிதா வாரிசு விவகாரம் தொடர்பான வழக்கில், ஜெயலலிதாவின் ரத்த உயிரி மாதிரிகள் உள்ளதா இல்லையா என்பது குறித்து அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் வியாழக்கிழமைக்குள் (ஏப்.26) பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 சென்னை உயர் நீதிமன்றத்தில் பெங்களூருவைச் சேர்ந்த அம்ருதா என்பவர் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாரிசு என உரிமை கோரி வழக்குத் தொடர்ந்தார். ஜெயலலிதாவின் உடலைத் தோண்டியெடுத்து குலவழக்கப்படி இறுதிச் சடங்குகள் செய்யவும், தங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கவும் உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தார்.
 இந்த வழக்கில் தீபக் மற்றும் தீபா சார்பில் உயர்நீதிமன்றத்தில் தனித் தனியே பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அரசுத் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில் வழக்கு தொடர்பாக மனுதாரரிடம் போதுமான ஆதாரங்கள் இல்லை. எனவே, டி.என்.ஏ. பரிசோதனை நடத்தத் தேவையில்லை என்றும் வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதி எஸ். வைத்தியநாதன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது தீபக் மற்றும் தீபா சார்பில் ஆஜரான வழக்குரைஞர்கள், அம்ருதா இந்த வழக்கை கீழமை நீதிமன்றத்தில்தான் தொடர்ந்திருக்க வேண்டும் என வாதிட்டனர். அதிமுக இளைஞரணி சார்பில் விஷ்ணுபிரபு என்பவர் தாக்கல் செய்த இடையீட்டு மனுவில் மறைந்த முதல்வரின் நற்பெயருக்கும், புகழுக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் 30 ஆண்டுகளுக்குப் பிறகு உள்நோக்கத்துடன் தொடரப்பட்டுள்ளது. எனவே, இந்த வழக்கைத் தள்ளுபடி செய்ய வேண்டும் எனக் கோரியிருந்தார்.
 அப்பல்லோ மருத்துவமனை சார்பில் பதிலளிக்க கூடுதல் கால அவகாசம் கோரப்பட்டது. அம்ருதா தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் பிரகாஷ், இந்த நீதிமன்றம் கடந்த பிப்ரவரி மாதமே ஜெயலலிதாவின் ரத்த உயிரி மாதிரிகளை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தது. இதுவரை அந்த விவரங்கள் தாக்கல் செய்யப்படவில்லை என்றார்.
 ஜூன் 4-க்கு விசாரணை ஒத்திவைப்பு: வழக்கை விசாரித்த நீதிபதி, ஜெயலலிதாவின் ரத்த உயிரி மாதிரிகள் அப்பல்லோ மருத்துவமனையில் உள்ளதா இல்லையா என்பது குறித்து மருத்துவமனை நிர்வாகம் வியாழக்கிழமைக்குள் (ஏப்.26) பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை வரும் ஜூன் 4-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
 
 
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிர்ச்சியளிக்கும் அல்லு அர்ஜுன் சம்பளம்!

காங். ஆட்சியில் தாலிக்கயிறுக்குக் கூட பாதுகாப்பில்லை -பிரதமர் மோடி கடும் தாக்கு

ரூ.4 கோடி பறிமுதல்: ஆவணங்கள் சிபிசிஐடி-யிடம் ஒப்படைப்பு

நீதானே பொன் வசந்தம்.. சமந்தா பிறந்தநாள்!

குகேஷுக்கு ரூ.75 லட்சம் ஊக்கத்தொகை வழங்கினார் முதல்வர்

SCROLL FOR NEXT