தமிழ்நாடு

ரயில் டிக்கெட்டுகளில் மீண்டும் தமிழ் பயணிகள் வரவேற்பு

தினமணி

ரயில் நிலையங்களில் வழங்கப்படும் முன்பதிவு செய்யப்படாத பயணச்சீட்டுகளில் (டிக்கெட்) பயண விவரங்கள் தமிழில் மீண்டும் அச்சிடப்பட்டுள்ளதை பயணிகள் வரவேற்றுள்ளனர்.
 தெற்கு ரயில்வேயில் முன்பதிவு இல்லாத ரயில் பெட்டிகளில் பயணம் செய்வதற்கான சாதாரண டிக்கெட் எடுப்பதற்காக புதிய செயலி அறிமுகப்படுத்தப்பட்டது. அதில் முன்பதிவு இல்லாத பெட்டிகளில் பயணம் செய்வதற்கான சாதாரண டிக்கெட்டில் புறப்படும் இடமும், சேரும் இடமும் ஹிந்தி மற்றும் ஆங்கிலம் மொழியில் குறிப்பிடப்பட்டிருக்கும். இதனால் ஹிந்தி, ஆங்கிலம் தெரியாதவர்கள் அந்த டிக்கெட்டில் உள்ள விவரங்களை மற்றவர்களிடம் காண்பித்து தெரிந்து கொள்ள வேண்டிய இக்கட்டான நிலை இருந்து வந்தது.
 தமிழகத்தில் தமிழை மட்டுமே அறிந்த சாதாரண மக்கள் ரயில் டிக்கெட்டில் உள்ள விவரங்களை அறிய முடியாத நிலை இருந்து வந்தது. இதேபோன்ற நிலை பிற பிராந்திய மொழிகளை மட்டுமே அறிந்தவர்களுக்கும் இருந்து வந்தது. இதையடுத்து சாதாரண டிக்கெட்டில் பயண விவரங்கள் பிராந்திய மொழிகளிலும் இடம்பெற வேண்டும் என்று ரயில்வே அமைச்சகத்துக்கு கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இதை ஏற்ற ரயில்வே அமைச்சகம், கர்நாடகத்தில் கன்னட மொழியிலும், ஆந்திரத்தில் தெலுங்கு மொழியிலும் சாதாரண டிக்கெட்டில் பயணிகள் புறப்படும் இடம், சேரும் இடமும் போன்றவற்றை அச்சடித்து கடந்த மார்ச் மாதம் முதல் வழங்கி வருகிறது.
 இதைத் தொடர்ந்து தமிழகத்திலும் இதேபோன்று சாதாரண டிக்கெட்டில் தமிழ் மொழியில் பயண விவரங்களை இடம்பெற செய்ய வேண்டும் என தெற்கு ரெயில்வேக்கும், ரெயில்வே அமைச்சகத்துக்கும் கோரிக்கை வைக்கப்பட்டது. இதையடுத்து ரயில்வே அமைச்சகம் சாதாரண டிக்கெட்டில் தமிழ் மொழியை இணைத்துள்ளது. இதன்படி, சென்னை சென்ட்ரல், திருச்சி, சேலம், மதுரை ரயில் நிலையங்களில்
 பயணிகளுக்கு வழங்கப்படும் சாதாரண டிக்கெட்டுகளில் புறப்படும் இடம், சேரும் இடம் போன்ற விவரங்கள் தமிழில் குறிப்பிடப்பட்டுள்ளன.
 இந்த டிக்கெட்டுகளில் தமிழ், ஹிந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய 3 மொழிகளில் பயண விவரங்கள் அச்சிடப்பட்டு உள்ளன. இந்த புதிய நடைமுறைக்கு பயணிகள் வரவேற்பு தெரிவித்து உள்ளனர்.
 இதுகுறித்து சென்னைக் கோட்ட ரயில் பயணிகள் ஆலோசனைக்குழு உறுப்பினர் கே.பாஸ்கர் கூறியது:
 கடந்த 2005 -ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் முன்பதிவு இல்லாத ரயில் பெட்டிகளில் பயணம் செய்வதற்கான டிக்கெட்டில் தமிழில் அச்சிடப்பட்டு வழங்கப்படுவது நிறுத்தப்பட்டது. சுமார் 13 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ரயில் டிக்கெட்டுக்களில் தமிழ் மொழியை இணைத்திருப்பது வரவேற்புக்குரியது.
 அதே வேளையில், முன்பு வழங்கப்பட்ட டிக்கெட்டில் மேல்பகுதியில் தமிழில் பெரிய எழுத்துக்களால் அச்சிடப்பட்டிருக்கும்.
 ஆனால் தற்போது வழங்கப்பட்டிருக்கும் டிக்கெட்டில் முதலில் ஆங்கிலம், பின்னர் ஹிந்தி, அதன் பின்னர் தமிழில் மிகச் சிறிய அளவிலான எழுத்துக்களில் விவரம் இடம்பெற்றுள்ளது.
 எனவே ரயில்வே நிர்வாகம், மீண்டும் பழைய முறையில் தமிழுக்கு முக்கியத்துவம் தரப்பட்டது போல் டிக்கெட் அச்சிட்டு வழங்க வேண்டும். மேலும் குறிப்பிட்ட ரயில் நிலையங்கள் மட்டுமல்லாது அனைத்து ரயில் நிலையங்களிலும் இந்த டிக்கெட்டுகளை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகளிா் விடுதிகள் இணையத்தின் வாயிலாக பதிவு மற்றும் புதுப்பிக்கப்பட வேண்டும் ஆட்சியா் அறிவுறுத்தல்

அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகத்தினா் ஆா்ப்பாட்டம்

தனியாா் பள்ளிகளில் 25% இட ஒதுக்கீடு: மறைமுகக் கட்டணம் வசூலிப்பதாகப் புகாா்

ஊழலை துடைத்தெறிய உறுதி: ஜாா்க்கண்ட் பிரசாரத்தில் பிரதமா் மோடி

பிரஜ்வல் ரேவண்ணா விவகாரம் தெரிந்தும் ஓராண்டாக நடவடிக்கை இல்லை: காங்கிரஸ் மீது நிா்மலா சீதாராமன் குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT