சென்னை: முன்கூட்டியே விடுவிக்கக் கோரி நளினி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்த சென்னை உயர் நீதிமன்றம், நளினியை விடுதலை செய்ய உத்தரவிட முடியாது என்று தீர்ப்பளித்துள்ளது.
உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள போது, இந்த வழக்கில் உயர் நீதிமன்றத்தால் தலையிட முடியாது என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் கூறியுள்ளனர்.
இந்திய அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 161-இன் படி முன்கூட்டியே விடுதலை செய்யக் கோரி ஆயுள் தண்டனைக் கைதியான நளினி தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் இன்று மனுவை தள்ளுபடி செய்துள்ளது.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனைக் கைதியான நளினி சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ளேன். எனக்கு எதிரான வழக்கை சி.பி.ஐ. விசாரித்துள்ளதால், குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் கீழ் என்னை முன்கூட்டியே விடுதலை செய்ய வேண்டும் என்றால், மத்திய அரசின் கருத்தை மாநில அரசு கேட்கவேண்டும்.
ஆனால், என்னை இந்திய அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 161-இன் படி முன்கூட்டியே விடுதலை செய்ய தமிழக ஆளுநருக்கு அதிகாரம் உள்ளது. அந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி, என்னை முன்கூட்டியே விடுதலை செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தார்.
இம்மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், இந்த விவகாரம் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. அந்த வழக்கின் தீர்ப்பின் அடிப்படையில், இது குறித்து தமிழக அரசு முடிவு எடுக்கலாம் என்ற உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை எதிர்த்து நளினி மேல்முறையீடு செய்தார்.
இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்த போது, உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குக்கும் இந்த வழக்குக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை. தமிழக அரசின் அரசாணைப்படி ஏற்கெனவே 2,200 ஆயுள் தண்டனைக் கைதிகள் முன்கூட்டியே விடுவிக்கப்பட்டுள்ளனர்.
எனவே, அதன் அடிப்படையில் தன்னையும் விடுவிக்க வேண்டும் என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. இது குறித்து பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதிகள் கே.கே.சசிதரன் மற்றும் ஆர்.சுப்பிரமணியன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது அரசுத் தரப்பில் ஆஜரான அரசு தலைமை வழக்குரைஞர் விஜய் நாராயண், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ளவர்களை முன்கூட்டியே விடுதலை செய்ய எதிர்ப்புத் தெரிவித்து தொடரப்பட்ட வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இதனால் இது தொடர்பாக தமிழக அரசால் எந்த முடிவையும் எடுக்க முடியவில்லை என்றார்.
வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில், இன்று மனு மீது தீர்ப்பளிக்கப்பட்டது. அதில், உச்ச நீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளதால், உயர் நீதிமன்றம் தலையிட முடியாது என்று கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.