ஊருணியில் மூழ்கி 3 சிறுவர்கள் சாவு
தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே ஊருணி நீரில் மூழ்கி 3 சிறுவர்கள் உயிரிழந்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே ஊருணி நீரில் மூழ்கி 3 சிறுவர்கள் உயிரிழந்தனர்.
விளாத்திகுளம் வட்டம் காடல்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் அய்யனார். இவரது மகன்கள் கனேண்குமார் (11), கவின்குமார் (9). அதே ஊரைச் சேர்ந்த சந்தானம் மகன் கவுதம் (8). பள்ளி மாணவர்களான மூன்று பேரும் ஞாயிற்றுக்கிழமை மாலை விளையாடுவதற்காக கிராம விளையாட்டுத் திடலுக்குச் சென்றுள்ளனர். இரவு வெகுநேரமாகியும் அவர்கள் வீடு திரும்பாததால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், சிறுவர்களைத் தேடிவந்தனர்.
இந்நிலையில், காடல்குடி ஊருணியின் மையப் பகுதியில் உள்ள நீர்க்குட்டையில் மாயமான 3 சிறுவர்களும் இறந்து மிதந்தது திங்கள்கிழமை காலையில் தெரியவந்தது.
இதுகுறித்து தகவலறிந்த காடல்குடி போலீஸார் அங்கு சென்று சிறுவர்களின் சடலங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.விளையாடச் சென்ற மாணவர்கள் குளிப்பதற்காக ஊருணிக்கு சென்றிருக்கலாம்.
அப்போது எதிர்பாராதவிதமாக தவறி உள்ளே விழுந்து நீரில் மூழ்கி இறந்திருக்கலாம் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. ஒரே கிராமத்தைச் சேர்ந்த 3 சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம், விளாத்திகுளம் சுற்றுவட்டார பகுதிகளில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.