தமிழ்நாடு

கடலூர் மத்திய சிறையில் நெகிழ்ச்சி: குடும்பத்தினருடன் கைதிகள் சந்திப்பு

DIN

கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளில் 27 பேர் ஞாயிற்றுக்கிழமை தங்களது குடும்பத்தினருடன் பொழுதைக் கழித்தனர். சிறைத் துறை சார்பில் இதற்காக சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டது.
சிறை வாழ்க்கை என்பது மிகவும் துன்பகரமானது. அதிலும், தண்டனைக் கைதிகள் தங்களது ரத்த சொந்தங்களைக் கூட அன்புடன் தொட்டு பேச முடியாமல், தங்களுக்கு இடையில் உள்ள கம்பிகளின் வழியே பாசத்தை பரிமாறிக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லாத நிலை இருந்தது. இந்த சூழலை கடலூர் மத்திய சிறை நிர்வாகம் ஞாயிற்றுக்கிழமை மாற்றி அமைத்தது. 
அதாவது ஆயுள் தண்டனை பெற்று சிறையில் நன்னடத்தையுடன் செயல்பட்டு வரும் 27 சிறைவாசிகளுக்கு சிறப்பு நேர்காணல் நடத்தப்பட்டது. சிறைக் கண்காணிப்பாளர் இரா.கிருஷ்ணராஜ் தலைமையில், சிறை அலுவலர் கோ.காந்தி முன்னிலையில் இந்த நேர்காணல் நடத்தப்பட்டது. இதற்காக, சிறை வளாகத்துக்குள் சிறைவாசிகள் தங்களது குடும்பத்தினருடன் அமரும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 
இந்த நிகழ்ச்சியில் 27 சிறைக் கைதிகளின் குடும்பத்தினர், ரத்த உறவுகள் அனுமதிக்கப்பட்டனர். இவர்கள் கைதியுடன் அங்கேயே அமரவும், ஒருவரையொருவர் அரவணைத்துக் கொள்ளவும், உணவு பரிமாறிக் கொள்ளவும் அனுமதிக்கப்பட்டனர். இதனால், அவர்கள் நெருக்கமாக அமர்ந்து மனம் விட்டு பேசிக்கொண்டனர். மகனின் மடியில் தாய் தலை சாய்த்து ஆறுதல் தேடியதும், கைதி ஒருவர் தனது குழந்தைகளை தோளில் சுமந்து கொஞ்சியும், மனைவி, அக்கா, தங்கையுடன் மனம் விட்டுப் பேசியும் ஒவ்வொருவரும் பாச மழையில் நனைந்தனர். இவ்வாறு 23 ஆண்கள், 48 பெண்கள், 41 குழந்தைகள் அனுமதிக்கப்பட்டு அவர்கள் தங்களது உறவுகளுடன் மாலை வரை மகிழ்ந்திருக்கும் நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

12 ராசிக்குமான தினப்பலன்!

திருப்பருத்திக்குன்றத்தில் மகாவீரா் ஜெயந்தி

திமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

பாதுகாக்கப்பட்ட குடிநீா் வழங்க நூதன முறையில் கோரிக்கை

போலி மருத்துவா் கைது

SCROLL FOR NEXT