முகப்பு
தமிழ்நாடு

நிலம் வாங்கப் போகிறீர்களா?

திருநெல்வேலி: குருவி சேர்த்த மாதிரி பணத்தை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து வைத்து வாங்கிய நிலமய்யா! ஆனால் பத்திரத்தில் ஏதோ வில்லங்கம் இருந்திருக்கிறது. அது தெரியாமல் நான் வாங்கியதாலே நீதிமன்றத்துக்கும்

Updated On : 30 ஜனவரி, 2024 at 4:32 PM
பகிர்:

திருநெல்வேலி: குருவி சேர்த்த மாதிரி பணத்தை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து வைத்து வாங்கிய நிலமய்யா! ஆனால் பத்திரத்தில் ஏதோ வில்லங்கம் இருந்திருக்கிறது. அது தெரியாமல் நான் வாங்கியதாலே நீதிமன்றத்துக்கும் வீட்டுக்கும் பல வருஷமாக அலைந்து கொண்டிருக்கிறேன் - என்று, ஆவணங்கள் சரியாக இல்லாத நிலங்களை வாங்கி பாதிக்கப்பட்டவர்களின் குரல்களை நாம் அடிக்கடி கேட்கிறோம்.
இதிலிருந்து விடுபட நிலத்தை வாங்கும் போதே மூல ஆவணங்கள் முறையாக உள்ளதா, சரியாக உள்ளதா என்பது குறித்து ஆய்ந்தறிந்து வாங்கிவிட்டால், இத்தகைய பிரச்னைகளுக்கு இடம் இல்லை.

பத்திரப் பதிவில் கவனிக்க வேண்டியது

ஒரு காலி மனை வாங்க நினைக்கிறோம் என்றால், அந்த இடத்தில் வீடு கட்டி குடியேறும் எண்ணத்தில்தான் வாங்க வேண்டும். அங்கு குடிநீர் வசதி, சாலை வசதி, போக்குவரத்து வசதி எப்படி உள்ளன? அரசு அங்கீகாரம் பெற்ற மனையா? 20 அடி சாலை வசதி உள்ளதா என்பது போன்ற விவரங்களை தெரிந்து கொண்டு, அதற்குப் பிறகுதான் அந்த இடத்துக்கான விலையை பேசி முடிவு செய்ய வேண்டும்.

இடத்தை தேர்வு செய்த பின்னர், அதற்கான மூலப் பத்திரம் உள்ளிட்ட ஆவணங்களை நாம் கேட்டுப் பெற வேண்டும். அந்த இடத்துக்கு சார்-பதிவாளர் அலுவலகத்தில் 1975ஆம் ஆண்டிலிருந்து வில்லங்கச் சான்று பெற விண்ணப்பிக்க வேண்டும். சில புல எண்களுக்கு (சர்வே எண்) அதற்கும் முந்தைய ஆண்டுகளுக்கும் கூட வில்லங்கச் சான்று பெற முடியும். வில்லங்கச் சான்றைப் பார்த்தவுடன் பத்திரத்தில் வில்லங்கம் உள்ளதா என்பது குறித்து முழுமையாகத் தெரிந்துவிடும்.

சொத்துதாரர் சொந்த உழைப்பில் வாங்கியதாக இருந்து, அவர் உயிரோடு இருந்தால், அவர் மட்டும் எழுதிக் கொடுத்தால் போதுமானது. ஆனால் பூர்விக சொத்தாக இருந்தால், சொத்துதாரர் இறந்திருப்பின் அவரது இறப்புச் சான்றிதழ், வாரிசு சான்றிதழ் பெற்று அவற்றை பத்திரப் பதிவு ஆவணத்தில் இணைக்க வேண்டும். மேலும் வாரிசு சான்றிதழில் இடம்பெற்ற மகன் மட்டுமல்லாது, மகள், பேரன், பேத்திகள் உள்பட அனைவரது அடையாளச் சான்றுகளையும் பெற்று, ஆவணத்துடன் இணைத்து, வாரிசுதாரர்கள் அனைவரையும் கையெழுத்திட வைக்க வேண்டும். அப்படி இருந்தால் மட்டுமே பின்னாளில் சொத்தில் பங்கு கேட்டு யாரும் நீதிமன்றத்தை நாட முடியாது. 

மேலும், ஆவணத்துடன் புல எண் வரைபடம் இணைக்க வேண்டும். ஒரே புல எண்ணில் பலருக்கு பத்திரப் பதிவு செய்யும் சூழல் வந்தால், பத்திரப் பதிவில் நான்கு எல்லை குறித்து தெளிவாக குறிப்பிட வேண்டும். பத்திரப் பதிவுக்கு புல எண் வரைபடம், பட்டா, அடங்கல் மிக முக்கிய ஆவணங்களாகும். இவற்றை தற்போது ஆன்லைன் வழியில் பெறலாம்.

தனிப் பட்டா மாற்றம் அவசியம் 

வீடு அல்லது மனை வாங்கிய பின்பு, நமது பெயருக்கு பட்டா மாற்றம் செய்ய வேண்டும். கூட்டுப் பட்டாவாக இருந்தால், உள் பிரிவு (சப்-டிவிஷன்) செய்து தனிப் பட்டா வாங்கிக் கொள்வது சிறந்தது. இதன் மூலம் அந்த இடம் தொடர்பான எந்த வில்லங்கமும் வர வாய்ப்பில்லை.

வரியினங்களில் பெயர் மாற்றம்

பின்னர் நில வரி, சொத்து வரி உள்ளிட்ட ஆவணங்களிலும் பெயர் மாற்றம் செய்வது அவசியம். நன்செய் நிலங்கள், புன்செய் நிலங்களுக்கு வருவாய்த் துறையில் நில வரியும், வீட்டு மனைகளுக்கு உள்ளாட்சி நிர்வாகத்தில் சொத்து வரியும் நமது பெயருக்கு மாற்றிவிட வேண்டும். கட்டிய வீட்டை வாங்கியிருந்தால் குடிநீர் இணைப்பு, மின் இணைப்பு உள்ளிட்டவற்றிலும் பெயரை மாற்றிவிட வேண்டும்.

உள்ளாட்சி நிர்வாகம் பராமரித்து வரும் சொத்து வரி பதிவேடுகளில் சொத்தின் புதிய உரிமையாளர் பெயர் மாற்றம் செய்யப்படாவிட்டால், ரசீதுகள் முந்தைய உரிமையாளர் பெயரிலேயே வழங்கப்படும். வரி செலுத்தாத நிலையில் அபராதமும் விதிக்கப்பட வாய்ப்புகள் உண்டு. அதோடு நிலத்திற்கு தீர்வை செலுத்தி வரும் மற்ற நபர்கள் மூலம் பல்வேறு சிக்கல்கள் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன.

வரன்முறை

மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிப் பகுதிகளில் உள்ள அங்கீகரிக்கப்படாத அல்லது அனுமதியற்ற மனைகள் மற்றும் மனைப் பிரிவுகளை அந்தந்த உள்ளாட்சி நிர்வாக அலுவலகங்களில் தங்கள் மனைகளை முறைப்படுத்த விண்ணப்பிக்க வேண்டும். இணையதளம் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம். 

விண்ணப்ப மனுவுடன் சாலை மற்றும் மனைப் பிரிவு இடத்தின் அளவுகளுடன் கூடிய வரைபடங்கள், மனைப் பிரிவு வரைபடம், சுற்று சார்வு வரைபடம், சுய கையொப்பமிட்ட பதிவு செய்யப்பட்ட பத்திர நகல், பட்டா, சிட்டா, அடங்கல் நகல், ஒரு வாரத்துக்கு முந்தைய நாள் வரை வில்லங்கச் சான்று, விவசாய நிலத்தில் அமையவில்லை என்ற வட்டாட்சியரின் சான்று, குறைந்தபட்ச சாலை அகலம் 16 அடி என்ற ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம்.

மனைகளை வரன்முறைப்படுத்தி வரன்முறை ஆணைகளை பெறாதபட்சத்தில், மனையில் கட்டடம் கட்ட கட்டட வரைபட அனுமதி, மின் இணைப்பு, குடிநீர் இணைப்பு மற்றும் இதர அரசு சலுகைகள் வழங்கப்படாது. அதோடு அந்த மனைப் பிரிவுகளுக்கு சாலை வசதி, குடிநீர் வசதி, கழிவுநீர் வசதி போன்ற அடிப்படை வசதிகளும் வழங்கப்படாது. 

5ஆண்டுகளுக்கு மேல் தரிசு நிலமாக இருப்பவற்றுக்கு, நீண்டகால தரிசு மனைப் பிரிவாக மாற்றுவதற்கு விண்ணப்பிக்கலாம்.

நவீனமயமாக்கல் அவசியம்

நிலம் போன்ற சொத்துகள் வாங்குபவர், விற்பவர், வாங்கும் மதிப்பு, வாங்கப்பட்ட நிலத்தின் விவரம், வங்கிக் கணக்கில் இருந்து தொகை பெற்றுக் கொள்ளும் விவரம் போன்றவை ஒருங்கிணைக்கப்பட வேண்டும். பதிவு செய்யப்பட்ட செல்லிடப்பேசி எண்ணுக்குத் தகவல் தெரிவிக்கப்படாமல் அந்த பத்திரத்தில் எந்த பணியும் மேற்கொள்ள முடியாத நடைமுறை வேண்டும். இந்தப் பத்திரம் தொடர்பாக எந்த ஒரு பணி நடைபெற்றாலும், பதிவு செய்யப்பட்ட செல்லிடப்பேசி எண்ணுக்கு குறுந்தகவல் அனுப்பப்பட வேண்டும். இதன் மூலம் பத்திரப் பதிவில் ஏற்படும் தவறுகள் குறைக்கப்படும்.
பத்திரப் பதிவுகள் தொடர்பான முழு விவரத்தையும் ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டும். சொத்து விவரங்கள் பதிவுக்கு ஆதார் எண் இணைப்பை அவசியமாக்க வேண்டும். ஆதார் எண்ணில் இணைக்கப்படும் அனைத்து தகவல்களும் முழு பாதுகாப்புடன் இருப்பதை அரசு உறுதி ஏற்க வேண்டும். மனை, வீடு போன்ற சொத்துகளின் விவரங்கள் உள்ள மின்னணு சேமிப்பகங்களை தீய நோக்கர்கள் ஊடுருவாமல் பாதுகாக்க வேண்டியது அரசின் பொறுப்பு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.