தமிழ்நாடு

பருவ மழை கொட்டியும் பயனில்லை: விரயமாகும் நீரைப் பார்த்து கண்ணீர் விடும் விவசாயிகள்!

தமிழ்நாட்டு அணைகளிலிருந்து வெளியேற்றப்பட்டு வரும் பெருமளவு உபரிநீரை கடைமடை பாசனப் பகுதிகளுக்கும், வறண்டு கிடக்கும் குளங்களுக்கும் திருப்பிவிட்டு பயன்படுத்தாமல் வீணாக்கிக் கொண்டிருப்பது

ப. இசக்கி

மதுரை: தமிழ்நாட்டு அணைகளிலிருந்து வெளியேற்றப்பட்டு வரும் பெருமளவு உபரிநீரை கடைமடை பாசனப் பகுதிகளுக்கும், வறண்டு கிடக்கும் குளங்களுக்கும் திருப்பிவிட்டு பயன்படுத்தாமல் வீணாக்கிக் கொண்டிருப்பது விவசாயிகளை விரக்தியில் ஆழ்த்தியுள்ளது.
இந்த ஆண்டு தென் மேற்குப் பருவ மழை பலமாக பெய்துள்ளது. கேரளத்திலும், கர்நாடகத்திலும் பெய்துள்ள மழையால் அங்குள்ள அனைத்து அணைகளும் நிரம்பியுள்ளன. அந்த அணைகளின் உபரி நீராலும், மேற்குத் தொடர்ச்சி மலையில் பெய்த மழையாலும் தமிழக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து மேட்டூர், பவானி சாகர், பாபநாசம், பேச்சிப்பாறை, பெருஞ்சாணி உள்ளிட்ட அணைகள் நிரம்பியுள்ளன. 152 அடி உயரமுள்ள முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் உச்சநீதிமன்றம் அனுமதித்துள்ள 142 அடியை எட்டியுள்ளது. எனவே, இந்த அணைகளிலிருந்து உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. 
மேட்டூர் அணையிலிருந்து கடந்த சில நாள்களாக விநாடிக்கு சுமார் 1.5 லட்சம் கன அடிக்கு மேலாகவும், பவானி சாகரில் இருந்து சனிக்கிழமை 70 ஆயிரம் கன அடியும், பாபநாசம் அணையிலிருந்து 4 ஆயிரம் கன அடியும், பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளிலிருந்து 10 ஆயிரம் கன அடிக்கு மேலாகவும் நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தமிழ்நாட்டுக்கு சுமார் 2,300 கன அடியும், கேரளத்துக்கு சுமார் 20 ஆயிரம் கன அடியும் வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்த தண்ணீரின் பெரும்பகுதி கடலில் சென்று கலக்கிறது.
பருவ மழைக் காலங்களில் குறிப்பிட்ட அளவு தண்ணீர் கடலுக்கு சென்று கலக்க வேண்டியது அவசியம்தான். அப்போதுதான் இயற்கை சமன்பாடு நிலவும். ஆனால், இப்போது அணைகளிலிருந்து வெளியேற்றப்படும் உபரி நீரானது முறைப்படியான, தேவையுள்ள பாசனப் பகுதிகளுக்கும், குளங்களுக்கும் செல்லாமல் கடலுக்கு சென்று கலந்து வருகிறது. இதனால், ஒரு பகுதி விளை நிலங்கள் தரிசாக கிடப்பதும், பாசனக் குளங்கள் தண்ணீரின்றி வறண்டு காட்சி அளிப்பதும் விவசாயிகளை விரக்தி அடையச் செய்துள்ளது.

விரயத்துக்கு காரணம் என்ன?

ஆறுகளில் உபரி நீர் கரை புரண்டு ஓடும் பகுதிக்கு அருகிலேயே விவசாயிகள் தண்ணீர் கேட்டு கண்ணீர் விடும் நிலைக்கான காரணத்தை ஆராய்ந்தால் அரசியலும், முறைகேடுகளும்தான் முன்வந்து நிற்கின்றன.
அணைகள் நிரம்பும்போது ஒவ்வொரு நிலையிலும் தண்ணீரை பாசனத்துக்கு திறந்துவிட அணைகளுக்கு தனித்தனியான விதிமுறைகள் உள்ளன. அதன்படி அந்தந்த மாவட்ட ஆட்சியருடன் கலந்தாலோசித்து, பொதுப் பணித் துறை அதிகாரிகள் அணைகளைத் திறந்து விடுவது வழக்கம். ஆண்டாண்டு காலமான இந்த நடைமுறையானது கடந்த 2001 முதல் மாற்றப்பட்டு விட்டது. அதன் பிறகு அணைகளை திறக்க தமிழக முதல்வரே உத்தரவிட்டு வருகிறார். அணை திறப்பு முதல்வர் கைக்கு மாறியதும் உப கால்வாய்களில் தண்ணீர் திறப்பை உள்ளூர் அரசியல்வாதிகள் கையில் எடுத்துக் கொண்டனர். இதனால் அதிகாரிகள் ஒதுங்கி கொள்ளும் நிலை உருவாகிவிட்டது. 
""அணை மற்றும் கால்வாய்களில் தண்ணீர் திறப்பு அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் இருந்தபோது இயல்பான சூழ்நிலைகளில் அதிகபட்சம் நான்கைந்து நாள்களில் முடிவு எடுக்கப்பட்டு அமல்படுத்தப்படும். ஆனால் அரசியல் தலையீடு வந்த பின்பு, முதல்வர் ஆணையிட குறைந்தபட்சம் 10 நாள்களுக்கு முன்பாக கோப்புகளை அனுப்ப அதிகாரிகள் பணிக்கப்படுகின்றனர். அதன் பிறகு கோப்புகளை முதல்வர் பார்த்து முடிவெடுத்து அறிவிக்கும் நாளில்தான் அணை திறக்கப்படும். அதேபோல், கால்வாய்களில் தண்ணீரை திறப்பை உள்ளூர் அரசியல்வாதிகள் தங்களின் விருப்பு, வெறுப்புக்கு ஏற்ப கையாளுவதால் அதிகாரிகள் அதில் தலையிடுவதில்லை. இதனால், அணைகள் நிரம்பி உபரி நீர் வெளியேற்றப்படும்போது முடிவு எடுப்பதில் அதிகாரிகள் ஆர்வம் காட்டுவதில்லை. அதையும் மீறி சூழ்நிலையை கருத்தில் கொண்டு அதிகாரிகள் ஆர்வமுடன் செயல்படும்போது, ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் அதிகாரிகள் பலிகடா ஆக்கப்படுகின்றனர். அதற்கு அச்சப்பட்டு, இந்த விவகாரத்தில் அதிகாரிகள் யாரும் ஆர்வம் காட்டுவதில்லை. அதனால்தான் இப்போது உபரி நீர் வீணாகிக் கொண்டிருக்கிறது'' என்கிறார் மதுரையைச் சேர்ந்த பொதுப் பணித் துறை நீர் வள ஆதார அமைப்பின் ஓய்வுபெற்ற பொறியாளர் ஒருவர்.

தூர்வாருவதில் முறைகேடு: 

அணைகளை கட்டுவதிலும், அவற்றில் நீரைத் தேக்குவதிலும் காட்டப்படும் ஆர்வம், குளங்கள் மற்றும் கால்வாய்களை பராமரிப்பதில் காட்டப்படுவதில்லை. குறைந்தபட்சம் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை அவை தூர்வாரப்பட வேண்டும். 
குளங்களை குடிமராமத்து செய்ய அரசு கடந்த நிதியாண்டின் நிதிநிலை அறிக்கையில் ரூ. 300 கோடியும், நிகழ் நிதியாண்டில் ரூ. 300 கோடியும் ஒதுக்கீடு செய்தது. ஆனால் அந்தப் பணிகள் முறையாக செய்யப்படவில்லை என்பதுதான் உபரி நீரை பயன்படுத்த முடியாத விவசாயிகளின் பிரதான புகார். அரைகுறையாக தூர்வாரப்பட்ட கால்வாய்களில் தண்ணீரை திறந்துவிட்டால் அழிமானம்தான் ஏற்படும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.
நீரினை பயன்படுத்துவோர் சங்கங்களின் பங்கேற்போடு குடிமராமத்துப் பணிகளை செய்ய வேண்டும் என்பது விதி. ஆனால் அந்த சங்கங்களுக்கு 2013-ஆம் ஆண்டுக்குப் பிறகு தேர்தல் நடத்தப்படவில்லை. அரசியல் பின்னணியுள்ள ஒப்பந்ததாரர்கள் முறைகேடுகளில் ஈடுபட்டு வருவதாக பல மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் தொடர்ந்து விவசாயிகள் புகார் மனுக்களை அளித்து வருகின்றனர்.
மேலும், திட்ட மதிப்பீட்டில் சுமார் 60 சதவீத நிதி அரசியல்வாதிகளுக்கும், அதிகாரிகளுக்கும் முறைகேடாக சென்றுவிடுவதால் எஞ்சிய 40 சதவீத நிதியில் மேற்கொள்ளப்படும் தூர்வாரும் பணிகளால் எவ்வித பயனும் கிட்டுவதில்லை என்கின்றனர் விவசாயிகள். 
எனவே, தற்போது தென் மேற்குப் பருவ மழையால் கிடைத்த தண்ணீரை வீணாக்கியது போல அல்லாமல், அடுத்து வரப்போகும் வட கிழக்குப் பருவ மழை தண்ணீரையாவது பாசனத்துக்கு முறையாகப் பயன்படுத்த, குளங்களையும், கால்வாய்களையும் தூர்வாரும் பணிகளை முறைகேடுகளுக்கு வழி இல்லாமல், செம்மையாக செய்ய அரசும், அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சொல்லப் போனால்... எப்ஸ்டீன் கோப்புகள்! உருளும் தலைகளும் ஒளிந்திருக்கும் புள்ளிகளும்

கடின உழைப்பு... வளமான எதிர்காலம்

சாதகமான பலன் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

தனிமையின் பிடியில் பொம்மையைத் தழுவும் ஜப்பான் குரங்கு! இதயத்தை உருக்கும் பஞ்ச் குன்னின் பின்னணி

இந்தியாவில் நஷ்டம் அதிகரித்தாலும் முதலீட்டை அதிரிக்கும் ஸ்டாா்பக்ஸ்!

SCROLL FOR NEXT