தமிழ்நாடு

அரசு மருத்துவர்கள் வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு

DIN


உயர்நீதிமன்ற வேண்டுகோளுக்கிணங்க அரசு மருத்துவர்களின் வேலைநிறுத்தம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மதுரையைச் சேர்ந்த முகமது யூனுஸ் ராஜா உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வியாழக்கிழமை தாக்கல் செய்திருந்த மனு விவரம்: தமிழகத்தில் அரசு மருத்துவர்கள் கடந்த 4 ஆம் தேதி வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், தங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லையெனில் டிசம்பர் 8 முதல் 13-ஆம் தேதி வரை சிறு அறுவைச் சிகிச்சைகளில் ஈடுபடப்போவதில்லை எனவும் அறிவித்துள்ளனர். இதனால் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற வரும் ஆயிரக்கணக்கான ஏழை நோயாளிகள் மிகுந்த அவதிக்குள்ளாவார்கள்.
எனவே அரசு மருத்துவர்கள் வேலைநிறுத்தத்துக்கு தடைவிதிக்க வேண்டும் எனவும், இதனை அவசர வழக்காக ஏற்று விசாரிக்கவேண்டும் எனவும் கோரி மனு அளித்திருந்தார். வழக்கை விசாரித்த கே.கே. சசிதரன், பி.டி. ஆதிகேசவலு ஆகியோர் கொண்ட அமர்வு, தமிழக சுகாதாரத்துறை செயலர், மருத்துவக் கல்வி இயக்குநர், தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கச் செயலர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு, வழக்கை வெள்ளிக்கிழமைக்கு ஒத்தி வைத்தனர்.
இந்த வழக்கில் வெள்ளிக்கிழமையும் அதே அமர்வு விசாரணையைத் தொடர்ந்தது. அப்போது, அரசுத் தரப்பில் 7ஆவது ஊதியக்குழுவின் பரிந்துரைகள் தொடர்பாக ஒரு நபர் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளதாகவும், அதன் அடிப்படையில் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. இதுதொடர்பாக நீதிபதிகள் போராட்டக்குழுவைச் சேர்ந்தவர்களிடம், அவர்களது தரப்பு குறித்து கேள்வி எழுப்பினர். இதனைத்தொடர்ந்து அரசு மருத்துவர்கள் போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர்கள் ஆலோசனை மேற்கொண்டு உயர்நீதிமன்றத்தின் வேண்டுகோளுக்கிணங்க வேலைநிறுத்தப் போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைப்பதாக அறிவித்தனர்.
இதையடுத்து, நீதிபதிகள் ஒரு நபர் ஆணையம் எப்போது அறிக்கை தாக்கல் செய்யும்? நடவடிக்கை எடுக்க எவ்வளவு காலம் ஆகும் என்பது குறித்து தமிழக சுகாதாரத்துறை செயலர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை டிசம்பர் 17ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மருத்துவ காப்பீட்டுக்கான உச்ச வயது வரம்பு நீக்கம்: முழு விவரம்

நிக்கி!

ஒரே குடும்பத்தில் 5 பேருக்காக வீட்டு வாசலில் வாக்குச்சாவடி!

கஞ்சாவுடன் முதல்வரிடம் மனு - பாஜக நிர்வாகியிடம் விசாரணை

மீண்டும் அதிரடியாக குறைந்த தங்கம் விலை!

SCROLL FOR NEXT