தமிழ்நாடு

டிஎஸ்பி விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கை தொடர்ந்து சிபிஐ விசாரிக்க வேண்டும்: கோவை நீதிமன்றம் உத்தரவு

DIN

டிஎஸ்பி விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கை தொடர்ந்து சிபிஐ விசாரிக்க வேண்டும் என கோவை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

கடலூர் மாவட்டம், கோண்டூரைச் சேர்ந்தவர் ரவி. இவரது மகள் விஷ்ணுபிரியா. நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் காவல் துணைக் கண்காணிப்பாளராகப் பணியாற்றி வந்தார். கோகுல்ராஜ் கொலை வழக்கை விசாரித்து வந்த அவர், 2015 செப்டம்பர் 18 இல் தனது அலுவலகக் குடியிருப்பில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். கோகுல்ராஜ் கொலை வழக்கு விசாரணையில் உயரதிகாரிகள் கொடுத்த அழுத்தமே தனது மகளின் இறப்புக்குக் காரணம் என ரவி புகார் தெரிவித்தார்.  

இதையடுத்து இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. இந்நிலையில் சிபிசிஐடியின் வழக்கு விசாரணையில் முன்னேற்றம் இல்லை, எனவே வழக்கை சிபிஐக்கு மாற்றி உத்தரவிட வேண்டும் என்று உயர் நீதிமன்றத்தில் ரவி மனுதாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவிட்டது.  

இந்நிலையில் வழக்கை கைவிடுவதாகக் கூறி கோவை மாவட்ட தலைமை குற்றவியல் நீதித் துறை நடுவர் மன்றத்தில் கடந்த ஏப்ரல் 16 ஆம் தேதி சிபிஐ அறிக்கை தாக்கல் செய்தது. இந்நிலையில் தற்கொலை செய்துகொண்ட விஷ்ணுபிரியாவின் தந்தை ரவி, தனது மகளின் சாவில் சந்தேகம் உள்ளது. சிபிஐ முறையாக விசாரிக்கவில்லை. எனவே இந்த வழக்கை முடிக்கக்கூடாது, என மனுதாக்கல் செய்திருந்தார்.  

இந்த வழக்கு மீதான விசாரணை கோவை மாவட்ட தலைமை நீதித் துறை நடுவர் மன்றத்தில் நீதித் துறை நடுவர் எஸ்.நாகராஜன் முன்பு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது சிபிஐ தரப்பு வழக்குரைஞர் ஆஜராகி, டிஎஸ்பி விஷ்ணுபிரியா இறப்பதற்கு முன்பு காவல் துறைக் கண்காணிப்பாளரிடம் 32 நொடிகள் பேசியுள்ளார் என்றார். அப்போது குறுக்கிட்ட நீதித் துறை நடுவர், 32 நொடிகள் இருவரும் என்ன பேசினார்கள் என்பதை சிபிஐ ஏன் விசாரிக்கவில்லை என கேள்வி எழுப்பினார்.  

அதற்கு சிபிஐ தரப்பு வழக்குரைஞர், சிபிசிஐடி விசாரணையில் அதுதொடர்பான தகவல்கள் எதுவும் திரட்டப்படவில்லை. அவை அலுவல் ரீதியான அழைப்பாக இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. மேலும், அலுவலக அளவில் அவருக்கு எவ்வித அழுத்தங்களும் கொடுக்கப்படவில்லை. அவருக்கு திருமணமாகாத ஏக்கம் இருந்துள்ளது. உடல் பருமன் குறித்த கவலையும், கோகுல்ராஜ் கொலை வழக்கை விரைந்து முடிக்கவில்லை என்ற ஆதங்கமும் இருந்துள்ளது.  எனவே இந்த வழக்கு விசாரணையை முடித்துவைக்க வேண்டும் என்றார்.  

இதற்கு ஆட்சேபம் தெரிவித்த டிஎஸ்பி விஷ்ணுபிரியா தரப்பு வழக்குரைஞர் பி.ஆர்.அருள்மொழி, டிஎஸ்பி விஷ்ணுபிரியா மரணத்துக்கு சிபிஐ தரப்பினர் கூறும் காரணங்களுக்கு எவ்வித ஆதாரமும் இல்லை. வதந்திகளின் அடிப்படையில், தனிப்பட்ட காரணங்களுக்காக அவர் இறந்திருக்கலாம் என்ற முடிவுக்கு சிபிஐ வந்துள்ளது. அதிகாரிகள் அழுத்தம் கொடுப்பதாக அவர் தனது வீட்டாரிடமும், நண்பர்களிடமும் பகிர்ந்துள்ளார். ஆனால், இவற்றை சிபிஐ அதிகாரிகள் முறையாக விசாரிக்கவில்லை என்றார்.  

அதற்கு சிபிஐ தரப்பு வழக்குரைஞர், தனிப்பட்ட காரணங்கள் குறித்து விசாரித்தால் டிஎஸ்பி விஷ்ணுபிரியாவின் அந்தரங்க வாழ்க்கைக்குப் பாதிப்பு ஏற்படும். எனவே அதுதொடர்பாக சிபிஐ விசாரிக்கவில்லை என்றார். இதை ஏற்க மறுத்த நீதி துறை நடுவர், இதுபோன்ற விசாரணைகளின்போது சம்பந்தப்பட்ட நபர் உயிரோடு இருக்கும்பட்சத்தில் அவரது அந்தரங்க வாழ்க்கை கேள்விக்குறியாகும் என யோசிப்பது நியாயமானது. ஆனால், விஷ்ணுபிரியா இறந்துவிட்டார், எனவே உண்மையைக் கண்டறியும் நோக்கில் அவரது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து விசாரிப்பதில் தவறு ஏதும் இருக்காது என கருத்து தெரிவித்தார்.

இதையடுத்து பி.ஆர்.அருள்மொழி மேலும் வாதிடுகையில், தற்போது உதவி ஆணையராக உள்ள மகேஷ்வரி, அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டான் காவல் ஆய்வாளர் சந்திரலேகா, திருவாரூர் டிஎஸ்பி இனிகோ திவ்யன், ஓய்வுபெற்ற டிஎஸ்பி முத்தமிழ் முதல்வன் உள்ளிட்ட ஏழு பேரை சிபிஐ அதிகாரிகள் விசாரிக்கவில்லை. எனவே அவர்களை நீதிமன்றத்துக்கு அழைத்து விசாரணை நடத்த வேண்டும் என்றார்.  

அப்போது குறுக்கிட்ட நீதித் துறை நடுவர், அவ்வாறு விசாரித்தால் அது நீதிமன்றம் நடத்தும் விசாரணை போலாகிவிடும் என்றார். அதற்கு வழக்குரைஞர் பி.ஆர்.அருள்மொழி, குற்றவியல் நடைமுறைச் சட்டம் 164-இன் படி அதற்கு சாத்தியங்கள் உள்ளன என்றார். இதற்கு சிபிஐ தரப்பில் ஆட்சேபணைத் தெரிவிக்கப்பட்டு, வழக்கு விசாரணையை முடித்துவைக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது.  

இருதரப்பு வாதங்களையும் பதிவு செய்த நீதித் துறை நடுவர் எஸ்.நாகராஜன், டிஎஸ்பி விஷ்ணுபிரியா தரப்பு வழக்குரைஞர் விடுத்த கோரிக்கையின்படி 7 பேரையும் நீதிமன்றத்துக்கு அழைத்து விசாரிப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளனவா அல்லது சிபிஐ கோருவது போல வழக்கு விசாரணையை முடித்துவைப்பதா என்பது தொடர்பாக டிசம்பர் 13 ஆம் தேதி முடிவு செய்யப்படும் எனக்கூறி தீர்ப்பை ஒத்திவைத்து உத்தரவிட்டார். 

இவ்வழக்கு கோவை நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தபோது டிஎஸ்பி விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கை தொடர்ந்து சிபிஐ விசாரிக்க உத்தரவிட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராபாவில் இஸ்ரேல் நேரடித் தாக்குதல்? மக்களை இடம்பெயரக் கோரும் புதிய அறிவிப்பு!

தமிழ்நாட்டில் கோடை காலத்திலும் தடையில்லா மின் விநியோகம் -தலைமைச் செயலாளர்

பொருளின் பொருள் கவிதை

ப்ளிங்க் - சிந்திக்காமலேயே சிந்திக்கும் ஆற்றல்

பைசன் காளமாடன் படத்தின் பூஜை ஸ்டில்ஸ்

SCROLL FOR NEXT