தமிழ்நாடு

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சொத்து விவரங்களைத் தாக்கல் செய்ய உத்தரவு

DIN


மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான சொத்து விவரங்களைத் தாக்கல் செய்ய அவரது இரண்டாம் வகை வாரிசுதாரர்களான தீபா மற்றும் தீபக் ஆகியோருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 
சென்னை உயர்நீதிமன்றத்தில் சென்னை எம்.ஜி.ஆர். நகரைச் சேர்ந்த அதிமுக நிர்வாகியான புகழேந்தி தாக்கல் செய்த மனுவில், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு பல கோடி மதிப்பிலான சொத்துகள் உள்ளது. ஹைதராபாத் திராட்சைத் தோட்டம், பங்களா, சென்னை போயஸ் தோட்ட இல்லம், கொடநாடு எஸ்டேட் என ரூ.913 கோடிக்கு அதிகமான சொத்துகள் உள்ளன. பெங்களூரு நீதிமன்றத்தில் நடந்த சொத்துக் குவிப்பு வழக்கில் அவருக்கு ரூ.200 கோடிக்கும் அதிகமான சொத்துகள் இருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த சொத்துகளின் மதிப்பு தற்போது ரூ.913 கோடியாக உயர்ந்துள்ளது. இந்த சொத்துகள் யாரைச் சென்றடைய வேண்டும் என ஜெயலலிதா உயில் எழுதி வைக்கவில்லை. எனவே இந்த சொத்துகளை நிர்வகிக்க தனியாக ஒரு நிர்வாகியை உயர்நீதிமன்றமே நியமிக்க வேண்டும் என கோரியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் மனு தொடர்பாக ஜெயலலிதாவின் உறவினர்களான தீபக் மற்றும் தீபா ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது. 
இந்நிலையில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் ஜெயலலிதா தாக்கல் செய்த வேட்புமனுவில் குறிப்பிடப்பட்டுள்ள சொத்துகள் மற்றும் பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் அவர் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள சொத்துகளுக்கு நாங்கள்தான் வாரிசு. எனவே மனுதாரர் இதுபோன்ற வழக்கைத் தொடர முடியாது என தீபா மற்றும் தீபக் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதிகள் என்.கிருபாகரன் மற்றும் அப்துல்குத்தூஸ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், மறைந்த முதல்வர் ஜெயலலிதா ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின் போது தாக்கல் செய்த வேட்புமனுவில் குறிப்பிடப்பட்டுள்ள சொத்துகள், சொத்துக் குவிப்பு வழக்கில் உச்சநீதிமன்றத் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ள சொத்துகள் மட்டுமே உள்ளதா அல்லது வேறு ஏதேனும் சொத்துகள் உள்ளதா என்பது தொடர்பான விவரங்களை தீபா மற்றும் தீபக் தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துளிகள்...

மஞ்சள், பருப்பு உள்ளிட்ட மளிகை பொருள்களின் விலை உயா்வு

கனிமவளக் கொள்ளையை தடுக்க வேண்டும்: அன்புமணி

கரசேவகா்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய கட்சிக்கு வாக்களிக்கலாமா? உ.பி.யில் அமித் ஷா பிரசாரம்

சியாமளாதேவி அம்மன் கோயில் கட்டுமானப் பணிகள் தீவிரம்

SCROLL FOR NEXT