தமிழ்நாடு

விதிகளை மீறி வைக்கப்பட்ட பேனர்கள் விவகாரத்தில் நடவடிக்கை என்ன?: அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி

DIN

விதிமுறைகளை மீறி சட்ட விரோதமாக பேனர்கள் வைப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளுக்கு உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி, விதிகளுக்கு முரணாக சட்ட விரோதமாக பேனர்கள் வைக்கப்படுகிறது. இந்த சட்ட விரோத பேனர்களால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பாதிக்கப்படுவதோடு, பல்வேறு இடங்களில் விபத்துகளும் நடக்கிறது. 
எனவே இந்த சட்ட விரோத பேனர்களுக்குத் தடை விதிக்க வேண்டும் எனவும், விதிமுறைகளை மீறி வைக்கப்படும் பேனர்களை அகற்ற நடவடிக்கை எடுக்காத அரசு அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும் கோரி மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் எம்.சத்யநாராயணன் மற்றும் பி.ராஜமாணிக்கம் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், கடந்த ஞாயிற்றுக்கிழமை (டிச.16) நடைபெற்ற முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலை திறப்பு விழாவுக்கு வருகை தந்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை வரவேற்கும் விதமாக சென்னை விமான நிலையம் முதல் அண்ணா அறிவாலயம் வரை வைக்கப்பட்டிருந்த பேனர்கள், நடிகர் ரஜினிகாந்த் பிறந்தநாளை முன்னிட்டு வைக்கப்பட்டிருந்த பேனர்களை அகற்றாத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. 
அப்போது விதிகளுக்குப் புறம்பாக வைக்கப்பட்டிருந்த பேனர்கள் தொடர்பாக சென்னை மாநகராட்சி சார்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அந்த அறிக்கையில் அரசியல் கட்சியினர் சார்பில் வைக்கப்பட்டிருந்த பேனர்கள் அகற்றப்பட்டு விட்டதாகவும், யார் மீதும் வழக்குப்பதிவு செய்யப்படவில்லை என தெரிவிக்கப்பட்டிருந்தது. 
இந்த அறிக்கையால் அதிருப்தியடைந்த நீதிபதிகள், விதிமுறைகளை மீறி வைக்கப்படும் பேனர்களை அகற்ற இந்த நீதிமன்றம் எத்தனை உத்தரவுகளைப் பிறப்பித்தாலும் அந்த உத்தரவுகளை அதிகாரிகள் முறையாக நிறைவேற்றுவது இல்லை. சட்டவிரோத பேனர்களை அகற்றுவது தொடர்பான அரசு தரப்பு விளக்கங்களைக் கேட்டு சோர்வடைந்து விட்டோம். கட்சி பாகுபாடின்றி அரசியல் கட்சிகளின் சார்பில் வைக்கப்படும் பேனர்களின் மீது நடவடிக்கை எடுக்காத அரசு அதிகாரிகள் தங்களது பணியை ராஜிநாமா செய்துவிட்டு விரும்பிய கட்சிகளில் சேர்ந்து கொள்ளலாமே என கண்டனம் தெரிவித்தனர். பேனர் வைக்க அனுமதி கோரியவர்கள் யார்?, அந்த பேனர் எங்கு அச்சிடப்பட்டது?, எந்த தேதியிலிருந்து அனுமதி வழங்கப்பட்டுள்ளது ? என்ற விவரங்கள் இடம்பெற்றிருக்க வேண்டும். 
இதுபோன்ற விதிகளை பின்பற்றாத அரசியல் கட்சிகள் வைக்கும் பேனர்களின் மீது தான் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், இந்த விதிகளைப் பின்பற்றாத நிறுவனங்களின் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. 
அகற்றப்படும் பேனர்களை சுற்றுப்புறச் சூழலுக்குப் பாதிப்பில்லாமல் அழிக்கவும் முறையான நடவடிக்கை எடுப்பதில்லை என கருத்துத் தெரிவித்த நீதிபதிகள், சட்டவிரோத பேனர்கள் தொடர்பான வழக்கில் அரசுத் தரப்பில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை வரும் புதன்கிழமைக்கு (டிச.19) ஒத்திவைத்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2: ஐசக் நியூட்டன் மெட்ரிகுலேஷன் பள்ளி 100% தோ்ச்சி

குடிநீா் தட்டுப்பாடு: தோளிப்பள்ளி கிராம மக்கள் மறியல்

பைக் மீது பேருந்து மோதல்: தொழிலாளி உயிரிழப்பு

வெயில் பாதிப்பு: பொதுமக்களுக்கு ஆட்சியா் அறிவுறுத்தல்

சித்திரை அமாவாசை சிறப்பு வழிபாடு

SCROLL FOR NEXT