முகப்பு
தமிழ்நாடு

கஜா பாதிப்பு: மின் வாரிய ஊழியர்களுக்கு கைம்மாறு செலுத்தும் முடிதிருத்தும் இளைஞர்கள்

நவம்பர் மாதம் வீசிய கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யமும் ஒன்று.

Updated On : 22 டிசம்பர், 2018 at 3:08 PM
பகிர்:


நவம்பர் மாதம் வீசிய கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யமும் ஒன்று.

கஜா புயல் பாதித்தப் பகுதிகளில் இயல்பு நிலைத் திரும்ப அரசும், தன்னார்வலர்களும் எடுத்த முயற்சிகள் சொல்லில் மாளாதவை. புயல் வீழ்த்திச் சென்ற மின் கம்பங்களை மீண்டும் நட்டு, வீடு தோறும் மின் இணைப்பு வழங்குதல் உள்ளிட்ட அனைத்துப் பணிகளையும் இரவு பகல் பாராமல் மேற்கொண்ட மின்வாரிய ஊழியர்களின் பணி மிகவும் பாராட்டப்பட்டது.

மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரவழைக்கப்பட்ட மின்வாரிய ஊழியர்கள் போதிய தங்குமிடம், உணவு கூட இல்லாமல், தங்கள் பணியை மேற்கொண்டனர்.

Advertisement

இந்த நிலையில், வேதாரண்யம் பகுதியைச் சேர்ந்த தலைமுடி திருத்தும் தொழிலாளர்கள் இரண்டு பேர் தங்கள் பகுதிக்கு மின்சாரம் கிடைக்க உதவிய ஊழியர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாக, தங்கள் கடைக்கு வரும் மின்வாரிய ஊழியர்களுக்கு இலவசமாக முடிதிருத்தம் செய்ய முன் வந்துள்ளனர்.

தேவதாஸ் மற்றும் ஏவி அருள் என்ற முடிதிருத்தும் தொழிலாளர்கள், தங்களது கடையின் வாசலில் இதற்கான அறிவிப்புப் பலகையை வைத்துள்ளனர்.

இது குறித்து அவர்கள் கூறுகையில், தங்கள் குடும்பம், குழந்தைகளை விட்டுவிட்டு எங்கிருந்தோ வந்து எங்களுக்காக இங்கே தங்கி வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு எங்களால் முடிந்த ஒரு உதவியை செய்ய நினைத்தோம். அப்போதுதான் இந்த யோசனை வந்தது என்கிறார்கள் இருவரும்.

4 வாரத்துக்கும் மேலாக இந்த இலவச முடிதிருத்தும் சேவையை செய்து வரும் இவர்களது சேவையைப் பெற்ற மின் வாரிய ஊழியர்கள் இவர்களுக்கு தங்களுடைய மனமார்ந்த வாழ்த்துக்களைக் கூறி வருகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.