சீருடைத் தொழிற்சாலைகளை மூட முடிவு : தி.வேல்முருகன் கண்டனம்
நாட்டில் உள்ள ஐந்து ராணுவ சீருடைத் தொழிற்சாலைகளையும் மூட மத்திய அரசு முடிவு செய்துள்ளதற்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் தி.வேல்முருகன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
நாட்டில் உள்ள ஐந்து ராணுவ சீருடைத் தொழிற்சாலைகளையும் மூட மத்திய அரசு முடிவு செய்துள்ளதற்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் தி.வேல்முருகன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக திங்கள்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
உத்தரப்பிரதேசத்தில் 4, சென்னை ஆவடியில் ஒன்று என மொத்தம் 5 சீருடை தொழிற்சாலைகள் உள்ளன.
இவற்றில் 650-க்கும் மேற்பட்ட பாதுகாப்புத் தளவாட வகைகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன. இதனால், ராணுவத்தினருக்கு திடீரென சீருடைக்குப் பதில் சீருடைக்கான படி வழங்கப்பட உள்ளது. இதனால் 5 தொழிற்சாலைகளையும் தனியாரிடம் ஒப்படைக்க மத்திய அரசு தீர்மானித்துள்ளது.
இந்த நடவடிக்கைகளால் தொழிலாளர்கள் அனைவருமே வேலையிழக்க வேண்டி வரும் என்பதோடு தொழிற்சாலையையும் மூட வேண்டிவரும். இப்போதே, மாற்றுப் பணி எனும் பெயரில் தொழிலாளர்களை இடமாற்றம் செய்வதும் தொடங்கிவிட்டதாகத் தெரிகிறது. நியாயமற்ற இந்த முடிவினை மத்திய அரசு உடனடியாகக் கைவிட வேண்டும். சீருடைத் தொழிற்சாலைகளை மேலும் பலப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.