முகப்பு
தமிழ்நாடு

செம்மரக் கடத்தலுக்கு உதவியதாக மருத்துவ மாணவர் கைது: தமிழக அரசு தலையிடக் கோரிக்கை

செம்மரம் கடத்தலுக்கு உதவியதாக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மாணவர் மீது ஆந்திர போலீஸார் பொய் வழக்குபோட்டு கைது செய்துள்ளதாகவும்,

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:10 PM
பகிர்:

செம்மரம் கடத்தலுக்கு உதவியதாக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மாணவர் மீது ஆந்திர போலீஸார் பொய் வழக்குபோட்டு கைது செய்துள்ளதாகவும், தமிழக அரசு இதில் தலையிட்டு தனது மகனை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திருப்பதி செம்மரக் கடத்தல் தடுப்பு பிரிவு அலுவலகம் முன் திங்கள்கிழமை மாணவரின் தாய் கண்ணீர் மல்க வேண்டுகோள் விடுத்தார். 
திருப்பதி மங்களம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு அதிரடிப் படை காவல் உதவி ஆய்வாளர் விஜய நரசிம்மலு தலைமையில் போலீஸார் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வந்த கர்நாடக மாநில பதிவு எண் கொண்ட காரை தடுத்து நிறுத்தினர். காரை ஓட்டி வந்த வேலூர் தோட்டபாளையத்தை சேர்ந்த மருத்துவ மாணவர் அஜீத் மற்றும் கர்நாடக மாநிலம் ஹொஸக்கோட்டையைச் சேர்ந்த ஏசு உள்ளிட்டோரை கைது செய்தனர். 
இதையறிந்த அஜீத்தின் தாயார் அம்முல தன் இரு வேறு மகன்களுடன் திங்கள்கிழமை திருப்பதி செம்மரக்கடத்தல் அலுவலகத்துக்கு வந்தார். அப்போது அவர் கூறியதாவது:
கணவரை இழந்த நான் கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தி வருகிறேன். என் மகன் அஜீத் திருவண்ணாமலை மருத்துவக் கல்லூரியில் கண் மருத்துவம் 2-ஆம் ஆண்டு டிப்ளமா படித்து வருகிறார். அவர் சனி, ஞாயிறு விடுமுறை நாள்களில் கல்வி செலவுக்காக கார், ஆட்டோ ஓட்டுவது வழக்கம்.
அதேபோன்று ஞாயிற்றுக்கிழமை திருப்பதிக்கு கார் ஓட்டி வந்துள்ளார். அவருக்கும் செம்மரக்கட்டை கடத்தலுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. மொழி தெரியாத இந்த ஊரில் என் மகனை விடுவிக்க என்னால் இயலவில்லை. ஜெயலலிதா அம்மா முதல்வராக இருந்த போது இதுபோல் கைது செய்யப்பட்டவர்களை மீட்க அரசு வழக்குரைஞர்களை நியமித்து வழக்குகளில் இருந்து விடுவித்தார். அதுபோல் என்னுடைய பொருளாதார நிலை, என் மகனின் எதிர்காலம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு தமிழக அரசு என் மகனை விடுவிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கண்ணீர் மல்க கூறினார். இதுகுறித்து கைதான மருத்துவ மாணவர் அஜீத் கூறியதாவது: வார விடுமுறை நாள்களில் நான் கார், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களை பகுதி நேரமாக ஓட்டி வருகிறேன். வேலூரை அடுத்த கணியம்பாடியை சேர்ந்த பிரபு என்பவர் என்னை திருப்பதிக்கு காரை ஓட்டிச் செல்லும்படி கூறினார். அவர் காரின் முன் எனக்கு வழி காட்டியபடி இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். என்னுடன் ஒருவரும் வந்தார். 
இந்நிலையில் நான் காரில் வந்து கொண்டிருந்த போது போலீஸார் திடீரென நிறுத்தி சோதனை செய்தனர். நான் கீழே இறங்கி என்ன என்று கேட்டேன். என்னை அடித்து கைது செய்து செம்மரக்கட்டை கடத்தியதாக குற்றம் சாட்டினர். நான் செம்மரங்களை காகிதங்களில் மட்டுமே பார்த்திருக்கிறேன். நேரில் பார்த்ததில்லை. ஓட்டுநர் வேலைக்காக வந்தேன். என்னை கடத்தல்காரன் என்று குற்றம் சாட்டுகின்றனர் என வேதனையுடன் கூறினார்.
உடன்வந்த ஏசுவிடம் கேட்டபோது, கர்நாடக மாநிலம் கடிகனஹள்ளியைச் சேர்ந்த தாஜ், செம்மரம் கொண்டு வர வேலூரை சேர்ந்த குமார், பிரபுவை சந்திக்கும்படி கூறினார். 
அதன்படி நான் வேலூருக்கு பேருந்தில் சென்றேன். அங்கு வந்த குமார், பிரபு காய்கறிகள், அரிசி உள்ளிட்டவற்றை காரில் ஏற்றி இந்த பையனை ஓட்டுநராக அனுப்பி வைத்தனர். எதற்காக வந்தோம் என்று அந்த பையனுக்கு தெரியாது என்றார். இந்நிலையில், போலீஸார் அஜீத் மீது திங்கள்கிழமை மதியம் செம்மரக் கடத்தல்காரர்களுக்கு ஓட்டுநராக இருந்த குற்றத்துக்காக 20(1)டி, 32 பி ஆகிய இரு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். அஜீத்தை செவ்வாய்க்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளனர்.
ஆந்திர போலீஸ் பாரபட்சம்
திருப்பதிக்கு கார் ஓட்டி வந்த போது காரில் அரிசி, காய்கறி உள்ளிட்ட சமையல் பொருள்கள் மட்டுமே இருந்ததாக கைது செய்யப்பட்ட அஜீத் மற்றும் ஏசு தெரிவித்தனர். ஆனால் ஞாயிற்றுக்கிழமை இருவரையும் கைது செய்த போலீஸார் காரில் 10 லட்சம் மதிப்புள்ள செம்மரக் கட்டைகள் இருந்ததாக தெரிவித்தனர். 
ஆந்திர போலீஸார் தமிழகத்திலிருந்து வரும் இதுபோன்ற அப்பாவிகள் மேல் அபாண்டமாக செம்மரக் கடத்தல் வழக்குப் பதிவு செய்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அஜீத் தன் மீது குற்றம் இல்லை என்று கூறியபோதும், அவர்களை அனுப்பிய பிரபு, குமாரின் தொலைபேசி தொடர்புகளை வைத்து முக்கிய குற்றவாளிகளை கைது செய்யாமல் அஜீத் மீது செம்மரக்கடத்தல் தொடர்பான வழக்கைப் பதிவு செய்துள்ளனர்.
 

முழு கட்டுரையைப் படிக்க →