தமிழ்நாடு

கூம்பு வடிவ ஒலி பெருக்கிகளை பயன்படுத்தத் தடை: உயர்நீதிமன்றம் உத்தரவு

DIN

தமிழகம் முழுவதும் கூம்பு வடிவ ஒலி பெருக்கிகளைப் பயன்படுத்தத் தடை விதித்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை திங்கள்கிழமை உத்தரவிட்டது.
திருச்சி காட்டூரில் உள்ள அற்புத குழந்தை இயேசு ஆலயத்தில் கூம்பு வடிவ ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்தி ஒலி மாசு ஏற்படுத்துகின்றனர். எனவே இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திருச்சி காட்டூர் ஆர்.கே.புரம் குடியிருப்போர் நலச்சங்கச் செயலர் சி.ஜெயராமன் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அரங்க.மகாதேவன் திங்கள்கிழமை பிறப்பித்த உத்தரவு: 
கூம்பு வடிவ மற்றும் அதிக ஒலி எழுப்பும் ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்துவது தொடர்பாக உச்சநீதிமன்றம் பல்வேறு வழிகாட்டல்களையும், உத்தரவுகளையும் பிறப்பித்துள்ளது. நான்கு சுவர்களுக்குள் இருக்கும் வரை மட்டுமே அதை வழிபாட்டுத் தலங்களின் தனிப்பட்ட விஷயமாகக் கருத முடியும். 
ஆனால், நான்கு சுவரைத் தாண்டி அது பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் போது அதை பொது விஷயமாக மட்டுமே கருத வேண்டும் என்று பல உத்தரவுகளில் உச்சநீதிமன்றம் குறிப்பிட்டுள்ளதை இங்கு கருத்தில் கொள்ள வேண்டும்.
இந்தச் சம்பவம் தொடர்பாக அமைதிக் கூட்டம் கடந்த டிச.20 ஆம் தேதி நடந்தபோது, அதிக ஒலி எழுப்பும் கூம்பு வடிவ ஒலி பெருக்கிகளை அகற்றுவதாக ஆலயத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அவர்கள் அதை அகற்றத் தவறிவிட்டனர். எனவே அற்புத குழந்தை இயேசு ஆலயத்தில் உள்ள கூம்பு வடிவ ஒலி பெருக்கிகள் உடனடியாக அகற்றப்பட வேண்டும்.
இந்த வழக்கு விசாரணையின்போது, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் இந்நிலை நீடிப்பதாக நீதிமன்றத்தில் பல வழக்குரைஞர்கள் முறையிட்டனர். இதைக் கருத்தில் கொண்டு, ஒலி மாசு கட்டுப்பாடு மற்றும் ஒழுங்குமுறைச் சட்டம் 2000-இன் படி தமிழகத்தில் ஒலி மாசைக் கட்டுப்படுத்த அனைத்து நடவடிக்கைகளையும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும்.
முதியோர் மற்றும் குழந்தைகள் நலனைக் கருத்தில் கொண்டு பொது இடங்களில் கூம்பு வடிவ ஒலி பெருக்கிகள் மற்றும் அதிக சத்தம் எழுப்பும் ஒலி பெருக்கிகளின் பயன்பாடு முற்றிலும் தடை செய்யப்படுகிறது. இதை மீறுபவர்கள் மீது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கடுமையான நடவடிக்கை எடுக்கலாம். மேலும், ஒலி மாசு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும். இந்த உத்தரவை அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும், பொதுத்துறைச் செயலர் அனுப்பி வைத்து, பின்பற்ற அறிவுறுத்த வேண்டும் என்று உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தனுஷ்கோடியில் கடல் சீற்றம்

தனி பட்டா வழங்க லஞ்சம்: நில அளவையா் கைது

காவலரைத் தாக்கிய இளைஞா் கைது

தனியாா் மருத்துவமனையில் சிகிச்சையின்போது மூதாட்டி உயிரிழப்பு: உறவினா்கள் போராட்டம்

ஆயுதங்களுடன் சுற்றிய நால்வா் கைது

SCROLL FOR NEXT