தமிழ் வழக்காடு மொழி: வைகோ வலியுறுத்தல்
சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக ஆக்க, குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற தமிழக அரசு முயற்சிக்க வேண்டும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ
சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக ஆக்க, குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற தமிழக அரசு முயற்சிக்க வேண்டும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை:
சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ் மொழியை அலுவல் மொழியாக்க வேண்டும் என பல ஆண்டுகளாகக் கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. இதற்கு அரசியல் அமைப்புச் சட்டப்படி உரிமை அளிக்கப்பட்டிருந்தும், மத்திய அரசு ஏற்பு அளிக்க மறுத்து வருகிறது.
இந்த நிலையில், கடந்த 2017 செப்டம்பர் மாதம் தில்லியில் இந்தி தின கொண்டாட்டத்தின் போது,பேசிய, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், ஹிந்தியை தேசிய மொழியாக அறிவித்திருந்தாலும்கூட, அதற்கு இந்தியாவின் சில பகுதிகளில் கடும் எதிர்ப்பு இருக்கிறது. அவர் ஏற்றுக் கொண்டே ஆகவேண்டும் என கட்டாயப்படுத்தவும் முடியாது' என்றார்.
குடியரசுத் தலைவரின் இந்த கருத்து, உயர் நீதிமன்றங்களில் அந்தந்த மாநில தாய் மொழியை வழக்காடு மொழியாக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு வலுவூட்டுவதாக இருக்கிறது. எனவே, தமிழக அரசு குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்று, தமிழ் மொழியை உயர்நீதிமன்ற வழக்காடு மொழியாக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
கச்சத்தீவுக்கு நாட்டுப் படகில் செல்ல அனுமதிக்க வேண்டும்: வரும் 23, 24 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ள கச்சத் தீவு புனித அந்தோணியார் ஆலயத் திருவிழாவுக்கு, தமிழகத்திலிருந்து நாட்டுப் படகில் பாரம்பரிய மீனவர்கள் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
விசைப் படகில் செல்லும் மீணவர்களுக்கு மட்டும் மாவட்ட நிர்வாகம் அனுமதிச் சீட்டு வழங்கி வருகிறது. தமிழக அரசின் இந்த நடவடிக்கைகள், இலங்கை அரசு இந்தியா-இலங்கை கச்சத் தீவு ஒப்பந்தத்தை செயலற்றதாக ஆக்குவதற்கு வழிவகுக்கும்.
எனவே, ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரின் உத்தரவை ரத்து செய்து, பாரம்பரிய மீனவர்கள் நாட்டுப் படகில் கச்சத் தீவு செல்ல அனுமதிக்க வேண்டும் எனவும் வைகோ வலியுறுத்தியுள்ளார்.