ரஜினிகாந்த் மீதான அவதூறு வழக்கு: விசாரணைக்கு உத்தரவு
நடிகர் ரஜினிகாந்த் மீதான அவதூறு வழக்கை குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின்கீழ், ஜார்ஜ்டவுன் நீதிமன்றம் மீண்டும் விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நடிகர் ரஜினிகாந்த் மீதான அவதூறு வழக்கை குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின்கீழ், ஜார்ஜ்டவுன் நீதிமன்றம் மீண்டும் விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையைச் சேர்ந்த சினிமா பைனான்சியர் முகன்சந்த் போத்ரா, திரைப்பட இயக்குநர் கஸ்தூரிராஜாவுக்கு எதிராக காசோலை மோசடி வழக்குத் தொடர்ந்தார்.
இந்த வழக்கு விசாரணையின்போது, கஸ்தூரிராஜா வாங்கிய கடனுக்கு நடிகர் ரஜினிகாந்த் உத்தரவாதம் கொடுத்ததால்தான் கடன் கொடுத்ததாக போத்ரா கூறியிருந்தார். இதையடுத்து, ரஜினிகாந்த் வெளியிட்ட அறிக்கையில் போத்ரா தன்னிடம் பணம் பறிக்க முயற்சிப்பதாக குற்றம் சாட்டியிருந்தார்.
இந்தக் குற்றச்சாட்டு தன்னுடைய நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியிருப்பதாக போத்ரா ஜார்ஜ்டவுன் நீதிமன்றத்தில் தொடர்ந்த அவதூறு வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.
இதை எதிர்த்து, அவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு வழக்குத் தொடர்ந்தார். அதில், வழக்கு விசாரணைக்கு ஆஜராகாததைக் காரணம் காட்டி மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. எனவே, இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என கோரியிருந்தார்.
இந்த மனு நீதிபதி எம்.வி.முரளிதரன் முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது, வழக்கை விசாரித்த நீதிபதி, ரஜினிகாந்த்துக்கு எதிரான அவதூறு வழக்கை மீண்டும் ஜார்ஜ்டவுன் நீதிமன்றம் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின்கீழ் முறையாக விசாரிக்க வேண்டும். இந்த விசாரணைக்கு நடிகர் ரஜினிகாந்த் நேரில் ஆஜராகத் தேவையில்லை என்று உத்தரவிட்டார்.